
2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய ‘மாற்றமுடியாத’தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.
பாரதிராஜாவின் பங்களிப்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் அது. பாரதிராஜாவின் அப்பா பெயர் சம்பந்தப்பட்டதல்ல அப்பதிவு.மாறாக வேதம்புதிது போன்ற விமர்சன பூர்வமான படங்களை எடுத்த பாரதிராஜா இச்சூழலில் சாதியோடு தொடர்புடைய இப்பெயரை சூடுவது பற்றியது அவ்விமர்சனம்.(மாயத்தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?என்பதே தலைப்பு.பாரதிராஜா வேதம்புதிது படத்தில் கேட்ட அதே கேள்வி)
சாதி அடையாள அரசியல் மேலோங்கிவரும் சூழலில்-குற்றபரம்பரை படம் தொடர்பாக அவர் சாதிய ஆவேசம் காட்டிவரும் நிலையில் -தமிழ் சினிமா உலகில் செயல்பட்டுவரும் சாதிசார்ந்த லாபி உள்ளிட்ட செயல்பாடுகள் உள்ள நிலையில் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.ஆனால் பாரதிராஜா பற்றி ஒருவரி கூட விமர்சனமாக பார்க்காமல் அவர் வீட்டிலும் வைரமுத்து வீட்டிலும் நடந்திருக்கும் கலப்புமணங்களை விவரித்து மேற்கண்ட பதிவை மறுத்திருக்கிறது ஒரு விமர்சனம். (கலப்புமணம் சரிதான்.ஆனால் அது சாதியமைப்பில் என்னவாகிறது என்கிற ஆய்வும் தேவையாகிறது.எனவே சொந்த வாழ்வின் கலப்புமணங்களை காட்டியே எல்லாவற்றையும் எதிர்கொள்வது ஒருவகை தந்திரம்.
கலப்புமணம் என்றால் யார் வீட்டோடு செய்துகொண்டார்கள்?பெண் வீட்டார் யார்?ஆண் வீட்டார் யார்?நடிகர் சிவக்குமார் பாஷையில் சொல்வதென்றால் ‘புழங்கும் சாதி’யா?என்றெல்லாம் பேச வேண்டியுள்ளது)
இந்த இரண்டு விமர்சனத்தையும் எழுதியிருப்பவர் ஒருவரே.அவர் நண்பர் (உண்மையிலேயே)வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்.அவரின் இந்த இரண்டு விமர்சனங்களுக்கு (மட்டும்)நூற்றுக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகள்.அவரே வியப்படைந்திருப்பார்.
வாசிக்க: பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!
சுபகுணராஜனின் இந்த உணர்ச்சிபூர்வமான எதிர்கொள்ளலோடு விசயம் முடியவில்லை. பாரதிராஜாவின் அப்பா பெயரை ஒட்டி தன் அனுபவங்களை கூறுவதாக தொடங்கும் அவரின் பதிவு பிரமலைகள்ளர்களின் கடந்த காலத்தை காட்டி நிகழ்காலத்தின் நியாயத்தை கோருகிறது.
கடந்த கால வரலாறு,பண்பாட்டுத்தொடர்புகளை பேசுவதில் உள்ள ஆர்வம் நிகழ்காலத்தை பேசுவதும்போது மௌனம் வந்துவிடுகிறது.இதை விரிவாக பேச இங்கு பேச வாய்ப்பில்லையெனினும் பழைய கேள்வி ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது.இந்த ‘ஒடுக்கப்பட்ட’ சாதிகளின் உசிலம்பட்டியில் தான் ஒரு தலித் தலைவர் கூட இன்றுவரை உள்ளே நுழையமுடியவில்லை ஏன்? இந்நிலையில் இவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற கடந்த காலத்தை மட்டுமே திரும்பதிரும்ப இப்போதைய விவாதங்களிலும் கொணருவது யாரை காப்பாற்றும்?
உண்மையில் மேலேயுள்ள பொன்முடி, பாரதிராஜா இரண்டு குற்றச்சாட்டுகளும் வேறுமாதிரி விவாதிக்கப்பட்டிருக்கமுடியும்.ஆனால் தமிழ்சூழலில் நிலவும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதத்தினால் அவை நடக்காமல் போய்விட்டது.
“அதாவது சொந்த வாழ்வில் சாதியை நம்பாத ஒருவர் (பொன்முடி)அரசியல் காரணத்திற்காக சாதியை பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமென்றும்,கடந்த காலத்தில் சாதி உள்ளிட்ட விசயங்களை விமர்சித்த கலைஞன் ஒருவன் (பாரதிராஜா)பின்னாளில் இவைகளையே நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச நேர்ந்திருக்கும் தனிமனிதஉளவியல்/சமூக அரசியல் /காலக்கட்ட சூழல்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் மாறியிருக்கவேண்டும்.”
ஆனால் முழுமையாகவோ அரைகுறையாகவோ இவற்றை விமர்சிப்பவர்கள் தான் இங்கு தாக்கப்படுகிறார்கள்.மாறாக காரணமானவர்களின் தரப்பு நியாயப்படுத்தப்படுகிறது.
பிராமண எதிர்ப்பின் பெயரில் நாமெல்லாம் நியாயமாகவே விமர்சித்த அடையாளங்கள் இன்றைக்கு பிராமணர்அல்லாதர் விசயத்தில் நியாயப்படுத்தப்படுகிறது.அதுவும் திராவிட இயக்க அறிவாளியாக ப்ரொமோஷன் பெற்றிருப்பவர்களாலேயே செய்யப்படுகிறது.
பாரதிராஜா பற்றிய விமர்சனம் அவர் மீதான ஒரு விமர்சனமாக இருக்கட்டுமே. அதை இவ்வளவு வலிய மறுத்துதான் ஆகவேண்டுமா?
ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நூல்கள் :
2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
4. சனநாயகமற்ற சனநாயகம்