
ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது.
அதுலயும், நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, என்னா என் பேரே பட்டியல்ல இல்லைனு சொன்ன கமல் கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு.
என்னாங்க பெரிய சூழல்..
தொலை தூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க பத்தி எத்தனை போஸ்ட் படிக்கிறீங்க. Thanaraj Radhai எழுதினத படிச்சீங்களா? வாசிங்க:
“கேரளா மாநிலம் தலைச்சேரியில் இருந்து கோவைக்கு முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்தேன்.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பயங்கர கூட்டம். நல்ல மழை வேறு. வண்டி மாஹே, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், பட்டாம்பி, சொர்னூர் ஜங்ஷன், ஒட்டப்பாலம் என செல்லும் அனைத்து ஊர்களிலும் ஏராளமான தமிழ் சொந்தங்கள் ஓடோடி வந்து ஏறு, ஏறு, ஒய் உள்ள போ வழியை விடு, என முண்டி அடித்து ஏறியது. கடைசியில் ரயிலின் படிக்கட்டும், கழிப்பறையும் அவர்கள் நிலையை புரிந்து கொஞ்சம் இடம் கொடுத்தது.
பாலீத்தீன் சாக்குமூட்டை, ஜவுளிக்கடை மூங்கில் பை, தட்டு மூட்டு சாமான் செட்டுகளோடு ஏறி கெஞ்சல், வாக்குவாதம், கோபம், விரக்தி, சக பயணிகளோடு கைகலப்பு சண்டை என நீண்டு கொண்டே வந்தது இந்த தமிழ் பெருங்கூட்டம்.
இன்னும் ஆண்கள் பெண்கள், குழந்தைகளோடு வண்டியில் ஏற மனம் & இடம் இல்லாமல் கடந்து போகும் எங்கள் ரயில் பெட்டியை ஆச்சரியத்தோடு பார்க்கும் மிச்சக்கூட்டம். அப்பப்பா….
அருகில் இருந்த திருவண்ணாமலை போளூர் பகுதியை சேர்ந்த பெரியவரிடம் கேட்டேன். “ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வாக்களிக்க ஊருக்கு போறீங்க? செலவு வேற? பணம் காசு உள்ளவன் ஜெயிக்க போறான். பலியாடு போல ஏன் ஒரு வாரம் வேலையை கெடுத்து இப்படி கஷ்டப்படுறீங்க? நீங்க ஓட்டு போட்டு என்ன ஆவப்போகுது?”ன்னு ஆத்திரம் தாங்காமல் கேட்டே விட்டேன்..
பெரியவரோ தெளிந்த மனதாய் “ஐயா எங்களை மனுசனா மதிச்சி கணக்கெடுக்கிறதே இந்த ஒரு ஓட்டை வைச்சு மட்டும் தான். அந்த ஒரு ஓட்டையும் நாங்க போடலைன்னா நாங்க உயிரோட வாழுறதுக்கே அர்த்தம் இல்லைய்யா, செத்துட்டோம்ன்னு முடிவு பண்ணிருவாங்க. ஒட்டுக்காக ஊருக்கு போறது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்ல, அய்யா” என்றார் தீர்க்கமாக…
எனக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது…”
அவனவன் பொழப்ப கெடுத்துட்டு ரெண்டாயிரம் மைல் தாண்டி வந்து வரிசைல நின்னு ஓட்டு போட்டுட்டு மை வச்ச விரல் காட்டி ஓட்டப்பல் தெரிய சிரிக்கிறானே..
அவனெல்லாம் கேனயனா
கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்; நம்ம அடையாளம் இதழின் ஆசிரியர்.
முகப்புப் படத்தில் நடிகர் சூர்யா மற்றும் சென்னையில் வாக்களித்த 75 வயது முதியவர் ராமலிங்கம்.