நிதி நெருக்கடியையும் வலுவான எதிராளிகளையும் பொருட்படுத்தாமல், சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி மற்றும் எடப்பாடி தொகுதிகளில் துணிவோடு களம் காண்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P. தங்கவேல், எடப்பாடி தொகுதியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத் துறையின் அமைச்சர் ‘எடப்பாடி’ பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் A. மோகன், திமுகவின் முன்னாள் அமைச்சர் ‘வீரபாண்டி’ S. ஆறுமுகம் அவர்களின் மகன் ‘வீரபாண்டி’ A. ராஜேந்திரனை எதிர்த்து வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து இவ்விரு தொகுதிகளிலும் குவிந்துள்ள இடதுசாரி கட்சி தொண்டர்களின் குறையாக நிதிதான் இருக்கிறது. அன்றாட செலவுகளான உணவு, பெட்ரோல் ஆகியவற்றுக்கே நிதி தட்டுபாடு இருக்கும் போது பெரிய கட்சிகளின் இணையாக பகட்டு விளம்பரங்களை பற்றி நினைக்க முடியாது.
இடதுசாரி கட்சி தொண்டர்கள், தங்கும் செலவு, உணவு, இரு சக்கர வாகனத்திற்கான பெட்ரோல் போன்ற செலவுகளை, தங்களது சொந்த பணத்தில் இருந்துதான் செலவு செய்கிறார்கள். “ கட்சி தோழர்கள் எந்த முனுமுனுப்பும் இல்லாமல் காலையில் இருந்து இரவு வரை முழு ஈடுபாட்டோடு செயல்படுகிறார்கள்” என்கிறார் திரு. தங்கவேல்.
கட்சி தோழர்கள் தாமாகவே முன்வந்து நிதியளிக்கிறார்கள். அன்றாட கூலி வாங்கும் தோழர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்கிறார், எடப்பாடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.வேங்கடபதி. 10 குவாரி தொழிலாளர்கள் ரூ.2000/- கொடுத்திருக்கிறார்கள். மேட்டூர் கல் குவாரி தொழிலாளர்கள் 100 பேர், தலா ரூ. 100/- தந்திருக்கிறார்கள் என பெருமையோடு பேசுகிறார்.
நாட்டில் நிலவக்கூடிய அரசியல் பிரச்சனைகளை தோலுரித்து காட்டும் வீதி நாடகங்கள்தான் இடதுசாரி தேர்தல் பிரச்சாரத்தின் மைய ஈர்ப்பாக அமையும். ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பு மனு தாக்கலின் போது இருவரும் சமர்ப்பித்துள்ள சொத்து கணக்குகளின் விபரங்களை வைத்து, இரண்டு வேட்பாளர்களின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளலாம்.
திரு. மோகன் அவர்களிடம் ரூ. 2000/- மட்டுமே கையிருப்பாக உள்ளது. வங்கி கணக்கில் வெறும் ரூ. 500/- மட்டுமே கையிருப்பாக உள்ளது. அவரது பெயரிலோ, அவரது மனைவி மற்றும் மூன்று மகன்களின் பெயரிலோ எந்த சொத்தும் இல்லை. 48 வயது மோகன் வெள்ளி பட்டறையில் தின கூலியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலை செய்தார். இப்போது முழு நேர கட்சி ஊழியரான மோகனுக்கு மாத அலெவன்சாக ரூ. 4000/- கட்சியில் இருந்து கொடுக்கப்படுகிறது.
திரு. தங்கவேல் அளித்துள்ள சொத்து விபரங்களின் படி, அவரின் பண கையிருப்பு வெறும் ரூ. 100/-, வங்கி கையிருப்பு ரூ. 5299/- மட்டும். அந்த வங்கி கையிருப்பும் கேஸ் சிலிண்டருக்கான மானியமாக வந்த தொகை என்கிறார் திரு. தங்கவேல்.
இருவருக்கும் எந்த வாகனமும் இல்லை.
நன்றி : தி இந்து – ஆங்கில நாளேடு