ஈரோடு கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலசுப்பிரமணியம் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் வீட்டில் பிடிபட்ட தொகை குறித்த உண்மையான தகவல்களை மறைப்பதாகப் புகார் தெரிவித்து அதிகாரிகள் சென்ற காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூரில் திமுக பிரமுகரின் மகன் வீட்டில் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலூர் அரசு மருத்துவமனை அருகே தி.மு.க வை சேர்ந்த முன்னாள் மேலூர் நகராட்சி தலைவர் கொன்னடியான் மகன் பாண்டியன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை நடத்திய அதிகாரிகள் கைப்பற்றபட்ட தொகையை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் ஒரத்தூர் திமுக ஊராட்சி தலைவர் வீட்டிலிருந்து பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ. 2.94 லட்சம் பறிமுதல்.
குன்னூர் அருகே காரகொரை என்ற ஊரில் அதிமுக பிரமுகரின் காரிலிருந்து பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ. 5 லட்சம் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட நெடி மொழியனூர் பகுதியில் மின் தடையை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவலறிந்து பணப்பட்டுவாடாவைத் தடுக்கச் சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் பெண்களுக்கு 250 ரூபாயும், கட்சிக்காரர்களுக்கு 1000 ரூபாயும் அதிமுகவினர் வழங்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டினர். காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.