எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம்? முடிவெடுக்க உதவும் 7 வழிகள்!

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

இன்று ஓய்வு நாள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், பிரச்சாரங்கள் ஓய்ந்ததன் மறுநாள் என்பதாலும்.

ஓய்ந்துகிடப்பதற்கான நாளல்ல, ஓய்வாகச் சிந்தித்து, பழைய நிலைமைகளையும் புதிய வளர்ச்சிப்போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சரியான முடிவுக்கு வர வேண்டிய நாள்.

அந்தச் சிந்தனையில் அடிப்படையாக இவற்றை மனதில் கொள்வது நலம்:

1) கருத்துக் கணிப்புகளைக் கண்டுகொள்ளாதீர்கள். சில ஊடகங்கள் போலப் பணம் பெற்றுக்கொண்டு செய்யப்பட்டதானாலும் சரி, சில ஆய்வாளர்களைப் போலத் தானாக முன்வந்து செய்யப்பட்டதானாலும் சரி, தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் ஜனநாயகத்திற்குக் கேடுகளே.

2) தலைமுறைகளின் மூளையை அரித்துப் போட்ட மதுக் கடைகள் மூடல், தலைமுறைகளையெல்லாம் தரமற்ற திட்டங்களின் பிடியில் சிக்கவைத்த ஊழல் ஏற்பாடுகள் ஒழிப்பு போன்ற எல்லாக் கட்சிகளும் வாக்களித்துள்ள அம்சங்களை அலசிப்பாருங்கள். கடந்த காலத்திலும் இதே வாக்குறுதிகளை அளித்து, இவற்றை அமோகமாக வளர்த்துவிட்டவர்களையும், உண்மையாகவே இவற்றுக்காகக் களப்போராட்டம் நடத்தியவர்களையும் தராசில் வைத்திடுங்கள்.

3) அரசுத்திட்டங்கள் செயலாக்கத்தைக் கண்காணிக்க பொது கண்காணிபுக் குழுக்கள், சரியான விமரிசனங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கிட நெறியாளர் குழுக்கள் அமைக்கப்படும், மகளிர் ஆணையம், லோக் ஆயுக்தா உள்பட இந்தக் குழுக்கள் சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும் என்ற, நேர்மைக்கு அடித்தளமான வாக்குறுதிகள் எவரிடமிருந்து வந்திருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். விவசாயம், தொழில் உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் மூலமாகவும், சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முலமாகவும் உண்மையிலேயே வேலை வாய்ப்புகள் விரிவடையச் செய்வதற்கான வாக்குறுதிகளை யார் முன்வைத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்குங்கள்.

4) தமிழகம் இழந்த மாண்புகளை மீட்க, சமூக சீர்திருத்த இயக்கம், சாதிக்காரர்களின் ஓட்டுகள் போய்விடுமோ என்று அஞ்சாமல் சாதி ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம், சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் இணைகளுக்கும் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற எதிர்காலத் தமிழகத்திற்குக் கம்பீரம் சேர்க்கும் துணிவான உறுதிமொழிகளை வழங்கியிருப்போர் பற்றி மனதில் பதியுங்கள்.

5) நேரடியாகவோ, மறைமுகமாகவோ கவர்ச்சிகரமான இலவசப் பொருள்களை அறிவித்திருக்கும் தந்திரங்களுக்கு மாறாக, தரமான இலவசக் கல்வியும் தரமான இலவச மருத்துவமும் மக்களின் உரிமையாக விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கைக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டிருப்போரை எண்ணத்தில் கொள்ளுங்கள்.

6) இயற்கையைச் சீற்றம் கொள்ளச் செய்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள், மலைப்பாறை கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதிபூண்டிருப்போர் பொறுப்பேற்க வேண்டியதன் கட்டாயத் தேவையை உணர்கிறீர்கள், அதற்குச் செயல்வடிவம் தர முடிவெடுங்கள்.

7) தனி நபர் சர்வாதிகாரம் அல்லது தனிக்கூட்ட அராஜகம் இந்த இரண்டாலும் தமிழகம் சுமக்க நேர்ந்த இழிவுகளைத் துடைத்தாக வேண்டும். அதிகார ருசிக்காகவும், பதவியின் பவிசுகளுக்காகவும் மத்திய அரசோடும், சாதிய-மதவாதக் கும்பல்களோடும் சமரசம் செய்துகொள்ளத் தயங்காத தனிநபர் சர்வாதிகாரத்தாலும் தனிக்கூட்ட அராஜகத்தாலும் தமிழகம் இடறிவிழ நேர்ந்த பள்ளங்களை மேடுபடுத்தியாக வேண்டும். கூட்டணியாக இயங்குவதன் நன்மைகளைப் பரிசீலியுங்கள். அதிலும் சரியானவற்றை சுட்டிக்காட்டவும் தவறுகளைத் தட்டிக்கேட்கவும் தயங்காத கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் மக்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச ஆதாயங்களை ஆராயுங்கள்.

“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

-என்ற வள்ளுவர் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுங்கள்.

மாற்றத்திற்கு வழிகோலுங்கள்.

தெளிந்த முடிவோடு நாளை வாக்குச் சாவடிக்குப் புறப்படுங்கள்.

அ.குமரேசன், ஊடகவியலாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.