“இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!

ஜெ. சுப்ரமணியன்

Balasubramaniyan
ஜெ.சுப்ரமணியன்

ஆனந்த விகடனுக்கு வணக்கம்

ஆனந்தவிகடனின் பலவருட வாசகன் என்ற உரிமையிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதழியல் கற்றுத்தரும் ஆசிரியன் என்ற பொறுப்பிலும் இந்த பதிவை இடுகிறேன்.

கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டில் நடந்த 2ஜி ஊழல் குறித்த தொடர்ச்சியாக எழுதி தமிழ் வாசகர்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்த்ததில் விகடனுக்கு பெரிய பங்குண்டு. அது மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் (மதுரையில் கொஞ்சம் அதிகம்) தி.மு.க.வினர் நடத்திய அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கியது விகடன்.
அதேபோல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள், சென்னை மழை வெள்ளத்தில் அரசின் செயலற்ற தன்மை, அமைச்சர்களின் ஊழல் அராஜகங்கள், தனிநபர் துதிபாடும் மோசமான அரசியல் பண்பாடு போன்றவைகளை தாங்கள் துணிச்சலுடன் எழுதியதை தமிழக வாசகர்களுக்கு நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சமூகத்தை கொன்றொழிக்கும் மதுவின் கேடு குறித்து தொடர் வெளியிட்டது தங்களின் சமூகப் பொறுப்பு இதழியலைக் காட்டியது.

இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் விரோதமான ஆற்றுமணல் கடத்தல், கிராணைட் ஊழல், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை, மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற விசயங்களில் தங்களின் நேர்மையை பாராட்டுவேன்.

நான் இதை பலமுறை மாணவர்களுக்கு வகுப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஒரு செய்தியாளர் எவ்வாறு துணிச்சலுடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என்பதற்கு இதழ்களில் விகடனை (ஆவி, ஜூவி) உதாரணமாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் இந்த சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போது ஊழலில் ஊறிப்போன தி.மு.க., அ.தி.மு.க. விற்கு மாற்றாக ஒரு சக்தி வரவேண்டும் என்பதில் விகடன் திடமாக இருந்தது. விஜயகாந்த் மீது நியாயமான விமர்சனங்களை வைத்த விகடன் ‘களமிறங்கும் கேப்டன்’ என்ற கவர் ஸ்டோரி வெளியிட்டது. மக்கள் நலக்கூட்டணியின் செயல்பாடுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தீர்கள். கேப்டன் எங்கு செல்வார் அவர் முடிவுதான் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்றெல்லாம் எழுதினீர்கள். ஆனால் அவர் மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தவுடன் அவர் குறித்தும், மக்கள் நலக்கூட்டணி குறித்தும் செய்திகள் வெளியிடுவதைக் குறைத்து கொண்டீர்கள். எவ்வளவு பெரிய கூட்டம் கூடினாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தீர்கள்.

தேர்தலுக்கு முந்தைய ஆனந்த விகடன் இதழ் (18.5.16) ‘இறுதிச்சுற்று: யாருக்கு நாற்காலி’ என்ற கவர்ஸ்டோரியுடன் வந்துள்ளது. அதில் தி.மு.க. குறித்த கட்டுரையில் இன்னொரு வாய்ப்பு வருமா? என்ற கேள்வி நீங்களே ஏக்கத்துடன் எழுதியதுபோல் உள்ளது. நான்கு பக்க அந்தக்கட்டுரையில் மூன்று பக்கங்கள் அவர்கள் மீது மென்மையான விமர்சனங்களை வைத்துவிட்டு அவர்கள் வெற்றிபெறுவதற்கான மூன்று முக்கியமான சாதகமான விசயங்களை குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஒன்று அரசு ஊழியர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும் அது தி.மு.க.விற்கு சாதகமாக முடியும் என்பது பெரும் நகைப்பிற்குறியது. உதாரணமாக இன்று கல்வித்துறையில் (பள்ளி, உயர்கல்வி) பணிநியமனம், பணிமாற்றம், துணைவேந்தர் பதவி, போன்றவை தி.மு.க. ஆட்சியில் பணத்திற்கு விற்கப்படவில்லையா? வசூல் செய்து தராத அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகவில்லையா? தி.மு.க. ஆட்சியில் 5 கோடியாக இருந்த பதவி இப்போது 10 அல்லது 15 கோடிக்கு விற்கப்படுகிறது. ஒருவர் உண்டாக்கிய வருமான ஊற்றை மற்றவர் வந்து அடைப்பதில்லை மாறாக ஊற்றுக்கண்ணைப் பெரிதுபடுத்துகிறார்.

இரண்டாவது மதுக்கடைகள், “ஜெயலலிதா படிப்படியாக மூடுவோம் என்பதை மக்கள் ரசிக்கவும் இல்லை, நம்பவும் இல்லை. டாஸ்மாக்கை மூடுவோம் என்ற தி.மு.க.வின் உறுதிமொழியைத்தான் நம்புகின்றனர்” என்று எழுதியிருக்கிறீர்கள். இதைப்படித்தபோது முரசொலி படித்தது போன்ற ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. தி.மு.க. எப்போது மதுஒழிப்பை பேசத்தொடங்கியது என்று உங்களுக்கு தெரியாதா? தி.மு.க.வினருக்கு சொந்தமாக மது ஆலைகள் கிடையாதா? உங்கள் பத்திரிகையிலேயே எழுதியிருக்கிறீர்களே. பிறகு ஏன் தி.மு.க.வை இப்படி காப்பாற்றுகிறீர்கள். இதற்கு உதயசூரியனுக்கு ஓட்டுபோடுங்கள் என்று தலையங்கம் எழுதிவிடலாமே.

மூன்றாவது சாதகமாக தாங்கள் குறிப்பிடுவது, சிறு, குறு தொழில்முனைவோர் அ.தி.மு.க. ஆட்சியில் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் பணியாளர்களை தி.மு.க. விற்கு வாக்களிக்க சொல்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறீர்கள். முதலில் முதலாளி சொன்னவுடன் தொழிலாளி ஓட்டு போட்டுவிடுவான் என்று எப்படி நம்புகிறீர்கள். அடுத்து கடந்த தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கு வீடுதேடி வந்தா அதிகாரிகள் லைசென்ஸ் கொடுத்தார்கள். ஏழை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை ஏமாற்றி வாங்கி பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று பெரும் ஊழல் செய்தனர் என்று ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதவில்லையா? நிலம் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு அரசியல்வாதிகளைப் பார்த்து கமிஷனை செலுத்தியபிறகே பதிவு செய்யமுடியும் என்ற நிலை இருந்ததை ஏன் வசதியாக மறந்துவிட்டீர்கள் விகடன்.

இந்த இதழில் தி.மு.க.விற்கு நான்கு பக்கம் அ.தி.மு.க.விற்கு நான்கு பக்கம், ஏன் நோட்டாவிற்குகூட மூன்று பக்கம் ஒதுக்கியிருக்கிறீர்கள், ஆனால் மக்கள் நலக்கூட்டணிக்கு ஒருபக்கம் கூடவா உங்கள் பத்திரிக்கையில் இடமில்லை. உழைப்பாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அபிலாஷைகளில் ஏன் இப்படி ஒரு வெறுப்பு. இதுதான் உங்கள் இதழியல் அறமா? இப்படி எழுதுவதில் உங்களின் தனிப்பட்ட நலன் இதில் ஒழிந்திருக்கிறதா? ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலை நீங்கள் எடுப்பது ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுவதைத் தவிர வேறென்ன? இதில் எங்கிருக்கிறது ஊடக அறம்.

நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் இனி எனது வகுப்பில் விகடனை உதாரணம் காட்டமாட்டேன் வெளிமாநில அல்லது வெளிநாட்டுப் பத்திரிகைகளை காட்டிவிட்டுபோகிறேன்.

கடைசியாக ஒன்று கையில் ஊடகம் இருக்கிறது என்று எதைவேண்டுமானாலும் மக்கள் மூளையில் திணித்துவிடலாம் என்று நினைத்துவிடவேண்டாம். மக்கள் அவ்வளவு மழுங்கியவர்கள் அல்ல.

ஜெ.சுப்ரமணியன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைப் பேராசிரியர்.

17 thoughts on ““இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!

 1. கையில் ஊடகம் இருக்கிறது என்று எதைவேண்டுமானாலும் மக்கள் மூளையில் திணித்துவிடலாம் என்று நினைத்துவிடவேண்டாம். மக்கள் அவ்வளவு மழுங்கியவர்கள் அல்ல.

  Like

 2. அறிவியல் அணுகு முறையில் அலசி எழுதப்பட்டுள்ள கட்டுரை.பேரா.பாலசுப்பிரமணியனுக்குப் பாராட்டுக்கள்

  Like

 3. நீங்கள் மக்கள் நல கூட்டணி கட்சியை சேர்ந்தவரா…….? உங்கள் விமர்சனம் அப்படித்தான் உள்ளது. கொண்டைய மறைங்க பாஸ்

  Like

 4. விகடன் திமுகவை மாற்றாக முன்வைக்க விரும்புவது விகடனின் தரம்தாழ்ந்த நோக்கம்

  Like

 5. “மக்கள் அவ்வளவு மழுங்கியவர்கள் அல்ல” எனில்..
  “கடைசியாக ஒன்று கையில் ஊடகம் இருக்கிறது என்று எதைவேண்டுமானாலும் மக்கள் மூளையில் திணித்துவிடலாம் என்று நினைத்துவிடவேண்டாம்” என்று எழுத என்ன அவசியம் வந்தது..?

  Like

 6. மநகூ ஊடகங்களின் ஆதரவை போதிய அளவு பெறாததற்கு முக்கிய காரணம் விஜயகாந்த்.. அவர் உளருவதை மக்களிடம் கொண்டு சேர்த்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? வைகோ இனிமேல் “கேப்டன் விஜயகாந்த் அணி” என பெரும் பரவசத்துடன் எப்போது அறிவித்தாரோ அப்போது ஆரம்பித்தது அடி.. நான் மநகூ-வை வெறுத்த தருணம் அது.. அதை அவ்வளவு சுலபமாக மாற்றிக்கொள்ளமுடியாது.. ஊடகங்கள் இப்படித்தான் வெறுத்துப்போனார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்..

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.