
விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்?
தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர இக்கட்சிகள் முன்வந்தது பற்றி, அந்தக் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே செய்திகள் கசிந்ததுண்டு. கூட்டணி தலைவர்களும் கூட பேசியிருக்கிறார்கள். பேரம் நடக்கவில்லை என்று அப்போது பிரேமலதா உள்ளிட்ட தேமுதிக தலைவர்கள் பேசியது கூட, தங்கள் தரப்பிலிருந்து பேரம் பேசவில்லை என்ற பொருளில்தானேயன்றி, இந்தக் கட்சிகள் பணம் தர முன்வரவில்லை என்ற பொருளில் அல்ல.
யார் பணம் தருவது பற்றிப் பேசினார்கள் என்று குறிப்பாகச் சொல்ல வேண்டாமா என்று கேட்கிறார் நண்பர் சுமன். ‘ஸ்டிங் ஆபரேசன்’ என்று ஊடகங்களில் சொல்வார்களே, அது போல் ஏதாவது செய்தால்தான் அது சாத்தியம். யாராக இருந்தாலும் பண பேரம் நடத்துவதற்கு ஆதாரம் கிடைப்பது போல் பேச மாட்டார்கள் என்பதை எவரும் ஊகிக்க முடியும்.
விஜயகாந்த் இதை அப்போதே சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்றும் கேட்கிறார். அப்போதே இதை வெளிப்படுத்தியிருந்தால் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியினரின் பிரச்சாரம் மேலும் வலுப்பெற்றிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி கூட அப்போது அவர் தவிர்த்திருக்கலாம். இப்போது கூட அவராக இதை வெளியிடவில்லை. ஒரு ஊடகம் தனது பேட்டியில் இதைப் பற்றிய கேள்வியை எழுப்பியதால் பதிலளித்திருக்கிறார். அப்போதே ஊடகங்கள் இக்கேள்வியைக் கேட்டிருக்கலாமே?
வெளியே தெரியாமலே போவதை விட தாமதமாகவாவது உண்மை வெளிப்பட்டது நல்லதுதான். ஒரு குற்றம் நடக்கிறது என்றால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நீதிமன்றத்தை நாடாமல் இருக்கலாம். பின்னர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்து வழக்குத் தொடுக்கிறபோது, ஏன் அப்போதே வழக்குப் போடவில்லை என்று நீதிமன்றம் நோண்டிக்கொண்டிருப்பதில்லை. குற்றம் நடந்தது உண்மையா இல்லையா என்று விசாரித்து, உண்மைதான் என்றால் குற்றவாளிக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் அளிக்கும். இந்தக் கட்சிகள் இப்படி நடந்துகொண்டது பற்றிய உண்மை இப்போதாவது வெளிப்பட்டிருக்கிறது. இதற்கான தண்டனையை மக்கள் மன்றம் அளிக்கும்.
வேறொரு செய்தியும் இன்று வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிதி நெருக்கடியோடு கடுமையான தேர்தல் நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன என்பதே அந்தச் செய்தி. இக்கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் சொந்தச் செலவில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்தச் செய்தி கூறுகிறது. இது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளர்த்திருக்கிற பண்பு.
இந்தப் பண்பு பரவலாக வேண்டும், மற்ற கட்சிகளும் பண பலத்தைப் பயன்படுத்தாமல் இப்படி மாற வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கு இப்படிப்பட்ட பண பேரம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அதை இப்போது விஜயகாந்த் சரியாகவே செய்திருக்கிறார்.
-‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ (மே 14) நிகழ்ச்சியில் ‘பாஜக, அஇஅதிமுக, திமுக எனக்குப் பணம் கொடுக்க முன்வந்தன’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘தி நியூஸ் மினிட்’ என்ற இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி தொடர்பாக நான் கூறிய கருத்துகளின் சாரம் இது. உடன் பங்கேற்றவர்: ஊடகவியலாளர் சுமன். நெறியாளர்: ஜென்ராம்.