இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள்.
கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் சார்ந்ததா? அப்படி எனில் லட்சக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்க மனைநிலம், குடியிருக்கும் இடத்திற்கு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து வருவது ஏன்? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறதே? வறுமை நிலையில் வாழ்வோர் எண்ணிக்கை குறையவில்லையே? இது போன்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுக்கும் சூழலில் தான்
இலவசங்களும், விலையில்லாப் பொருட்களும் வாக்காளர்களை வசீகரிக்கும் என கருதப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் அன்னிய நாட்டு முதலீடுகளுக்கு பலியிடப்படுகிறது. கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடன் பட்டவர்களாகவே மடிந்த போதும் விவசாயிகளுக்கு கண்ணியமான வாழ்க்கை அமையவில்லை. விவசாயம் நிறுவன மயமாகிவருவதால் நெருக்கடி தீவிரமாகி விவசாயிகள் தற்கொலை சாவுகள் தொடர்கின்றன. கிராமப் பொருளாதாரம் நொறுக்கி அழிக்கப்படுவதால் வழிவழியாக வாழ்ந்த இடங்களை விட்டு பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் கூட்டத்தால் நகர்மயம் தீவிரமாகி அடிப்படை வசதிகளும் இல்லாத தெருவோர வாழ்க்கைக்கு நகர்புற ஏழைக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ள ஏணிப்படி முறையில் சாதிய அடையாளமிட்டு மனித சமூகம் பிளவுபடுத்தப்பட்டது.
இது 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது நாகரிக வாழ்வின் தோல்வியல்லவா? தீண்டாமமைச் செயலும், சாதி ஆணவக் கொலைகளும் தீவிரமாகி வருவது சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள படு தோல்வியல்லவா! அறிவியல் கருத்துக்களை எடுத்துக்கூறி பகுத்தறிவுச் சிந்தனையை வலிமைப்படுத்தி, சமூகத்தை சீர்திருத்தப் போராடிய சிந்தனை சிற்பி சிங்காரவேலர், தந்தைபெரியார், ஈவேரா, பேரரசன் ப.ஜீவானந்தம், கர்மவீரர் காமராஜன், அறிஞர் அண்ணா போன்றோரின் பெயர்களை அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்திவரும்
அஇஅதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளையும் அதிகாரத்திற்கு வரமால் தடுக்கும் மாற்று அரசியல் சக்தியாக தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் அணி தேர்தல் களத்தில் முன்நிற்பதை வாக்காளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு கட்சி ஆட்சி என்பது தனிநபர் சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை அதிகார மையத்தில் உருவாக்கிவிட்டது. ஆதலால் ஜனநாயக நெறிமுறைகளையும், பண்புகளையும் மீட்டெடுக்க ஒரு கூட்டணி ஆட்சி இன்றைய காலத்தின் தேவையாகும். இத்தேவையை உணர்ந்து அதனை நிறைவுசெய்ய கேப்டன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக +மக்கள் நலக்கூட்டணி + தமாகா கூட்டணி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என உறுதியளிக்கிறது. இந்தக் கூட்டணி ஆட்சியை வழிநடத்த பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட “ நெறிமுறைக் குழு “ (Ethics Committee) அமைக்கவும், இக்குழுவிற்கு அரசின் நடவடிக்கைகளை சரிபார்த்து, கண்காணிக்கும் அதிகாரம் வழங்க உறுதியளித்துள்ளது. மக்களின் வரி பணத்தை அரசின் நடவடிக்கைகள் பொது கண்காணிப்புக்குழுவால் மேற்பார்வை
செய்யப்படும். முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் தற்போது மதுக்கடைகளில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும், அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசின் காலிபணியிடத்தில் பணியமர்வு வழங்கப்படும்.
கோவில் மனைகளில் குடியிருந்து வருவோருக்கு அவர்களின் அனுபவத்தில் உள்ள இடம் சொந்தமாக்கப்படும். நெசவாளர்கள் மற்றும் வீடு கட்டும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ளவர்களின் கடன் நிலுவை தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். முதலமைச்சர், அமைச்சர்கள், கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி தலைமைச் செயலாளர் வரைலும் வரும் ஊழல் புகார்களை விசாரிக்க “லோக் ஆயுக்தா” சட்டம் நிறைவேற்றப்படும். சாதி மறுப்பு திருமணம் புரிவோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்றப்படும். இஸ்லாமிய சகோதரர்கள் உட்பட நீண்டகாலம் சிறையில் உள்ளோர் விடுதலை செய்யப்படுவார்கள்.
தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகள் கடன் நிலுவைத் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் கடன் ஏற்படாமல் இருக்க வேளாண்துறையில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அடுத்து ஐந்து ஆண்டுகளில் விவசாய உற்பத்தி மூன்று மடங்கு உயர்த்தப்படும். மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக + தமாகா தேர்தல் அறிக்கைகள் உறுதியளிக்கின்றன. இவைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து மக்களின் மன உணர்வுகளை பிரதிப்பளிகவும் ஜனநாயக ஆட்சியில் அமர்ந்திட, அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகள்
நிறைவேறிட, ஆட்சி வழிநடத்துவதில் அடிப்படையான மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியல் மாற்று சக்தியான தேமுதிக + மக்கள் நலக்கூட்டணி + தமாகா வேட்பாளர்களுக்கு வாக்களித்து கூட்டணி ஆட்சியை அமர்த்தி தருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக வாக்காளப்பெருமக்களை கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.