செய்யூரின் பிரபலம் எழில் கரோலின். வழக்கறிஞர், சமூக சேவகர் என்பதையும் சேர்ந்து பிரபலத்துக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது, அது முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் என்பது.
“என் அப்பா அரசியல் பிரபலம் என்பது மட்டுமல்ல, சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் ஒரு காரணம். இந்த சமூகம் சாதி கட்டமை உடைக்க வேண்டும், சாதியில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதில் இருந்தே எனக்குள் இருந்தது. கல்லூரி நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மேல் கவனம் திரும்பியது. கணவனால் கைவிட்டப்பட்ட பெண்கள் குறித்து ஆய்வு செய்தேன். பெண் விடுதலை பேச்சளவில் மட்டுமே உள்ளதை புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் அதிகாரத்தால் மட்டும்தான் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என தீர்மானித்தேன்” என்று அரசியல் பிரவேசத்துக்கான அழுத்தமான காரணத்தைச் சொல்கிறார் கரோலின். தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறார்.
“சாதி ஒழிப்பே சமூக நீதியை நிலைநாட்டும் என கொள்கையுடைய கட்சி விசிக. அதனால்தான் விசிகவைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிற கரோலின், அதிமுக, திமுக வேட்பாளர்கள் தொகுதிக்கு அந்நியமானவர்கள், தான் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதாலும் தான் இதுவரை செய்துவந்த சமூகப் பணிகளுக்கு தனக்கு வெற்றியைத் தரும் என்று தீர்க்கமாகச் சொல்கிறார்.
நன்றி: அந்திமழை மே 2016 இதழ்