சிதம்பரம் தொகுதில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணிசார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மீண்டும் போட் டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் கோரி பிரச்சாரம் மேற்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி பாலகிருஷ்ணன். இந்த தேர்தலிலும் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது” என்றார்.“நாம் அமைத்திருக்கும் கூட்டணி வரலாற்று முயற்சி. இதனால்ஆத்திரம் அடைந்துள்ள திமுக வும், அதிமுகவும் நம்மைப் பல வடிவங்களில் சேதப்படுத்த நினைக் கிறார்கள். இந்த மாற்று அணி அவர்களுக்கு சவாலாக அமைந்துள் ளது. அதனால்தான் நெருக்கடியை கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
நாம் எடுத்திருக்கும் முயற்சி சவாலானது. எனவே, உணர்ச்சிப்பூர்வமாக பணியாற்றி இந்தத் தொகுதியிலும் திருமாவளவன் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கனியைத் தரவேண்டும். அப்போதுதான் இவ்வளவு ஆண்டு காலம் நாம் விளிம்பு நிலை மக்களுக்கு எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.சிறுபான்மை மக்கள் ஒடுக்கப் படும்போது அவர்களை பாது காக்கும் போராட்டத்தை கையில் எடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். இந்த தொகுதி மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் சிறுபான்மை, தலித் மக்கள் ஒடுக்கப்படும் போது குரல் கொடுத்துபோராட்டக் களத்தில் இறங்கி போராடும் கட்சியும் அதுவே என்றும் திருமாவளவன் கூறினார்.
வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது,“ திருமா காட்டு மன்னார்கோவில் வேட்பாளர் மட்டுமல்ல; 234 தொகுதியின் வேட்பாள ரும் ஆவார். தெளிவான தீர்க்கமான சிந்தனைகளைக் கொண்டு, ஏழை-எளிய மக்களுக்கான போராளியாக வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார் என்று பெருமிதத்துடன் பாராட்டினர்.இந்த தேர்தலில் பணத்தைக் கொண்டு வெற்றி பெறலாம் எனஆளும் கட்சியும், மீண்டும் ஆளத்துடிக்கும் கட்சியும் நினைத்துக்கொண்டிருப்பதை தவிடுபொடி யாக்கவேண்டும்” என்று கூறினார்.இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அறவாழி, நாடாளுமன்ற செயலாளர் செல்லப்பன், தொகுதிச் செயலாளர் நெடுமாறன், மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம், மாதவன், ராமச்சந்திரன், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் பாலு,தமாகா நகரத் தலைவர் தில்லை மக்கீன், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத், தில்லைகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கே. பாலகிருஷ்ணன் யார்? அவருடைய பின்னணி என்ன?
தற்போது சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவாகவும் செயல்பட்டு வரும் கே. பாலகிருஷ்ணன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 65. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பல போராட்டங்களில் தலைமை தாங்கி நடத்தியதால் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். மாணவர்கள் மத்தியில் சாதியப் போக்குகளை எதிர்த்து குரல் கொடுத்ததாலும், பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதாலும் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
1974-இல் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக இருந்தார். அவசர நிலை பிரகடனத்தின் போது ஓராண்டு காலம் தலைமறைவாக இருந்து செயல்பட்டவர். கடலூர் மாவட்டத்தில் காவல்நிலைய கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தியவர். அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் நந்தகோபால் படுகொலை மற்றும் அவருடைய மனைவி பத்மினிக்கு பாலியல் பலாத்கார கொடுமை இழைக்கப்பட்டதை எதிர்த்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
கம்மாபுரம் காவல்நிலையத்தில் ஆதிவாசி ராஜாக்கண்ணு படுகொலை செய்யப்பட்டு, அவருடைய குடும்பத்தினர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையினை எதிர்த்து பல கட்டப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதின் விளைவால் சம்பந்தப்பட்ட குற்றமிழைத்த காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கப் பெற்றது. கட்சியின் தென்ஆற்காடு மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நிர்வாக சீர்கேட்டினாலும், முறைகேடுகளாலும் தத்தளித்து வந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசுடமையாக்கப்பட பல கட்டப் போராட்டங்களை நடத்தியவர். தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் சந்திக்கும் எண்ணற்ற பிரச்சனைகளை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பி தீர்வு காண வற்புறுத்தியுள்ளார். இவருடைய வற்புறுத்தலால் கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய்க்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சிதம்பரம் பகுதிக்கு குடிநீருக்கும், பாசனத்திற்கும் திருப்பி விடும் திட்டத்தை அரசு அறிவித்து அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. இவருடைய மனைவி பா. ஜான்சிராணி கட்சியினுடைய முழுநேர ஊழியர். மாதர் சங்கத்தில் பணியாற்றியவர். தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.