மக்கள் நலக்கூட்டணியோடு விஜய்காந்த், வாசன் உள்ளிட்டவர்களும் இணைக்கப்பட்டதற்கு பிறகு சில விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மாற்றுக் கூட்டணி என்று சொல்லிவிட்டு தேர்தல் ஓட்டுக்கான கூட்டணியாக மாற்றப்பட்டுவிட்டதே உங்கள் மாற்றுக்கொள்கை இதுதானா என்பதுதான் பலரது விமர்சனங்களுக்கான மையப்புள்ளி. இதனை நாம் நேரடியான அர்த்தத்தில் எடுக்க முடியாது என்பது என் வாதம். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் பின்னோக்கி பத்து மாத காலத்திற்கு இழுத்து சென்று அங்கிருந்து வாதம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். 2015 ஜுலையில் மக்கள் நலக்கூட்டியக்கம் தொடங்கப்பட்டு மக்கள் நல பிரச்சனைகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
குறிப்பாக இரண்டு காரணங்களுக்கான போராட்டங்கள். ஒன்று மதுக்கடை, இன்னொன்று ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதிக்கானது. இரண்டு போராட்டங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு எதிரியாக முன்னிறுத்தப்பட்டது செல்வி ஜெயலலிதாவையும் அவரது அரசாங்கத்தையும். எந்த கட்சிகளும் இவர்கள் போல தீவிர அதிமுக அரசாங்க எதிர்ப்பை காட்டாதபொழுதும் திமுக ஒரு ஆக்கப்பபூர்வமான பெரிய கட்சியாக அதிமுகவிற்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்காமல் ஒதுங்கி நின்றதோடு மக்கள் நலக்கூட்டு இயக்கத்தை பி அணி என்று எதிர்த்து அதனை தெளிவு பட ஊடங்களின் துணையோடு மக்கள் மத்தியில் பதிய வைத்தனர். அவர்களின் எதிரி அதிமுக என்பதனை விடுத்து மக்கள் நலக்கூட்டியக்கம் என்ற அளவுகோலில் அரசியலை மாற்றினர்.
மேலும், இந்த நான்கு கட்சிகள் ஒன்றாக நிற்கவே முடியாது என்றும் தொடர்ச்சியாக மார்ச் 2016 வரை கூறி வந்தனர். இதற்கிடையில் இந்த நான்கு கட்சி தலைமைகள் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி, நான்கு கட்சிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து, பொதுவான கொள்கைகளை வரையறுத்து, யார் யாருடன் கூட்டு யார் யாருடன் கூட்டில்லை என்பதனை முன்கூட்டியே அறிவித்து, மூன்று கட்டப் பிரச்சாரத்தையும் நான்கு கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து முடித்திருந்தனர். ஆனாலும் ஊடக அளவில் சிறு அசைவு கூட இல்லை. பி அணி வாதமும் பணம் பெற்றுவிட்டார்கள் என்ற வாதமுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்படியான சூழலே உருவாகியிருந்தது.
தேமுதிகவோடு இணைய பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் துடித்தது போல மக்கள் நலக்கூட்டணியும் துடித்தது. இதனை தேர்தல் கால செயல்பாடாக பார்த்தாலும் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள வாக்கு வங்கி பலத்தை பெரிதாக காட்ட வேண்டிய தேவை எல்லோருக்கும் இருக்கும். எல்லா கொள்கை கோட்பாடுகளையும் தாண்டியும் உள்ளடக்கியும் உள்ளடக்காமலும் வாக்கு வங்கி புள்ளியியல் (vote bank statistics) தேர்தலில் முக்கியம்தான். 50 ஆண்டு கால கட்சியான திமுகவே தன் பலத்தை கூட்டணி மூலம்தான் பெருக்க முடியும் என கோட்டை கட்டி ஒவ்வொரு தேர்தலிலும் சந்தித்து வரும் வேளையில், ஒரு கூட்டு புள்ளி இவர்களுக்கும் தேவைப்படுகிறது தேவைப்பட்டது. கொள்கை பேசி பல போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் இவர்களுக்கே என் வாக்கு என உரக்கச் சொல்லும் தமிழகம் இன்னும் அமையாத பொழுது தங்கள் பயணத்தில் சில மாறுதல்களையும் சேர்த்தே செய்து, சமரசங்கள் இல்லாத பொது திட்டமும் எடுத்துக்கொண்டுதான் இவர்கள் பயணிக்க முடியும். அதனை செய்யாமல் தோற்றாலோ அவமானம். சற்று தடுமாறினாலும் விழுந்துவிட நேரும் பள்ளத்தாக்கின் மேலே நடக்கும் பொழுது ஒருவருக்கொருவர் கை கோர்த்தே செல்ல முடியும். கொள்கை மட்டும் பேசி பல ஆண்டுகளாக போராடியவர்கள் வென்றாலும் தோற்றாலும் போராடக்கூடிய மக்கள் நலக்கூட்டணியினர் தேர்தல் காலத்தில் பலமுறை சோதனை முயற்சி செய்து தோற்று நிற்கும் நிலையில் மேலும் மேலும் சோதனைகளை சந்திக்க முடியாது. மேலும் இந்த தேர்தல் திமுக அதிமுகவிற்கு எதிரான சிந்தனை பொதுத்தளத்தில் அதிகமாக பரவி நிற்கும் சூழலில் அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றக்கூடிய எல்லா வழிநிலைகளையும் பின்பற்றாது போக முடியாது.
மேலும் “எந்தவொரு பெரிய மாற்றத்தை நாம் அடைய வேண்டுமானாலும் சில பல படிநிலைகளை கடந்தே அடைய முடியும்”.
கொள்கை என்பது யார் யாருடன் கூட்டு இல்லை என அறிவித்ததில் தெளிவு இருந்தது. கூட்டு சேர்க்க முடியாது என்ற கட்சிகளின் பெயரையும் அவர்களை ஏன் கூட்டு சேர்க்க முடியாது என்றும் சொல்லும் துணிச்சலே இவர்களின் பலம். இதனை 2015 நவம்பரிலேயே அறிவித்தவர்கள் அன்றே தேமுதிகவிற்கும் தமாகாவிற்கும் அழைப்பும் விடுத்தார்கள். திடீரென்று இவர்களுக்காக எதனையும் சமரசம் செய்யவில்லை. மேலும் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக வையும் தமாகாவையும் இவர்கள் சேர்க்கவில்லை. மக்கள் நலக்கூட்டணி எப்படி கொள்கைகள் அடிப்படையிலோ தேர்தலுக்கு அப்பாற்பட்டதோ சமூக மாற்றத்திற்கான தொடக்கமாக கருதலாமோ அப்படி மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக-தமாகா கூட்டமைப்பை தேர்தல் காலத்திற்கான கூட்டு என்றும் கருதலாம். விமர்சனங்களும் பலரது பார்வையில் இருக்கிறது என்றாலும், இவர்கள் யாரோடும் கூட்டணியில் இணையவில்லை யாரையும் கூட்டணியில் சேர்க்கவில்லை, மாறாக தேர்தல் கால உடன்பாடு கண்டுள்ளார்கள் என்ற அளவுகோலில் நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்கிறேன்.
மக்கள் நலக்கூட்டணியின் நான்கு கட்சிகளும் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டதையும் தேமுதிக தமாகா தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டதையும் வெறும் சாதாராண நிகழ்வாக கருத முடியாது. மக்கள் நலக்கூட்டணி தனித்துவமான மாற்று அரசியலை தேர்தல் கடந்து முன்னெடுக்க இருக்கிறது என்ற அளவுகோலில் இதனை பார்க்கலாம்.
நான் மேலும் நேர்மறையாக பார்ப்பவைகளில் சிலவற்றை தொகுத்து இருக்கிறேன். இவர்கள் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வந்த கூட்டணி ஆட்சியில் தேமுதிக மற்றும் தமாகவையும் உடன்பட வைத்துள்ளார்கள். ஆட்சி அமைக்கிறார்களோ இல்லையோ தங்கள் உழைப்பையும் வெற்றி தோல்விகளையும் சேர்ந்தே பங்கிடும் பக்குவம் ஆறு கட்சிகளின் தலைமைக்கு வந்திருக்கிறது. இதுவும் ஆரோக்கியம் தானே! தமிழகத்தில் இந்த முழக்கமே புதிதானே! இனி அடுத்தவன் கூட்டணி சேரும்பொழுது தன் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பையும் சேர்த்தே கேட்பானே! அதற்கான விதை மக்கள் நலக்கூட்டணியின் கொள்கையால்தானே உருவாகப்போகிறது! கூட்டமைப்பிற்கான முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை அறிவித்தாலும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை ஒட்டுமொத்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக அனைவரும் ஏற்றுக்கொண்டதில் இவர்களுக்குள் இருக்கும் ஒருங்கிணைப்பு வெளிப்படுகிறதே! தேர்தல் தொகுதி உடன்பாடுகளிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தொகுதிகளை முடிவு செய்ததும் ஒரு கட்சி கேட்டு வாங்கிய ஏற்கனவே இருக்கும் வெற்றி தொகுதிகளை கூட மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து எல்லா நேரங்களிலும் சூழல்களிலும் ஊடகங்களில் ஒரு தலைவரை பற்றி தவறாக வந்தாலும் இன்னொரு தலைவர் குரல் கொடுப்பதும், நல்ல கூட்டமைப்பிற்கான அரோக்கிய சூழல்தானே! அவ்வகையிலும் இவர்கள் ஆறு பேரும் மாற்றத்தை கொண்டுவந்து ஒருவரை ஒருவர் மதித்து சம அளவில் நின்று ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் நிற்பது தொண்டர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா! இங்கே ஒருவருக்கு ஒருவன் தாழ்ந்தவனும் இல்லை, ஒருவனுக்கு ஒருவன் உயர்ந்தவனும் இல்லை என்று அரசியல் கூட்டணியில் தமிழகத்தில் நடத்திக்காட்டுவது வருங்காலத்திற்கு நல்ல வழிகாட்டல்தானே!
ஜி.கே. வாசன் பற்றி ஒரு செய்தி. 2006-2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் இருந்தபொழுது காங்கிரஸ் தலைவர்களிலும் முன்னணியினரைலும் திமுகவின் தலைவர் வீட்டு படியோ அந்த அமைச்சரின் வீட்டுப்படியோ எதன் லாபம் கருதியோ, பொருளாதார, பரிந்துரை என எந்த நன்மை கருதோயோ மிதிக்காத ஒரே நபர் என்ற அளவிலும் மத்திய அமைச்சராக இருந்த பொழுதும் யாருக்கும் தன் செல்வாக்கில் எதனையும் செய்து கொடுக்காதவர் என்ற அடிப்படையிலும் நிச்சயம் மக்கள் நலக்கூட்டணியோடு தேர்தல் கால உடன்பாடு கொள்வதில் பொருத்தமானவர் என்பது என் நிலைப்பாடு. இவரும் அதிமுகவோடு கடைசி வரை பேரம்தானே பேசினார் என்பது குற்றச்சாட்டு. ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு நிர்வாகிகள் முன்னணியினர் ஒரு தேர்தல் கால செயல்பாட்டை முன் வைப்பார்கள் அதனை அடிப்படையில் தலைவர்கள் வளைந்துகொடுத்தும் போவார்கள். சில நேரம் எல்லை மீறும் பொழுது தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் சொல்லின் கட்டுப்பாட்டில் தன் கட்சியின் செயல்பாட்டை கொண்டுவருவார்கள். இதனை வைத்தெல்லாம் தேர்தல் கால கூட்டணி தொடர்பில் அக்மார்க் முத்திரை தேடத்தேவையில்லை என்பதும் என் வாதம். #Time4MNK #Thistime4MNK