“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்.
தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர்,
“சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் பதிலாக தமிழகத்தையும், இங்குள்ள சாதாரண மக்களையும் ஆளுமையை இழக்கச் செய்திடுகிற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பொறுத்த வரை இவ்விரு அரசியல் கட்சிகளும் ஒன்றோடொன்று நிழல் யுத்தத்தையே நடத்தி வருகின்றன. ஆனால், திவாலாக்கிடும் பொருளாதாரக் கொள்கைகளையே முழுமையாக நடைமுறையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது? எத்தகைய அரசியல் தமிழகத்தில் காணப்படுகிறது? மாநிலம் முழுவதிலும் சாதி அடிப்படையிலான அரசியலே அரங்கேற்றப்படுகிறது.
மாநிலத்தின் செயல்திறனையும் பாருங்கள். தனியார்மய நடவடிக்கைகள், இயற்கை வளங்களை சூறையாடுதல், குவாரி சுரங்கங்களை கொள்ளையடித்தல் ஆகிய ஒட்டுமொத்த பிரச்சனைகளைப் பாருங்கள். இவர்களது பொருளாதார நிலைபாட்டின் எந்தவொரு அம்சத்தைப் பார்த்தீர்களானாலும், அதில் ஊழல்களையும் முறைகேடுகளையுமே நீங்கள் காண்பீர்கள். எனவே, ஊழலைப் பொறுத்தவரை இவ்விரு அரசியல் கட்சிகளும் சமரசப் போக்குடனேயே காணப்படுகின்றன.எனவேதான் இன்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள நரேந்திர மோடி போன்ற எதேச்சதிகார, சர்வாதிகாரியை எதிர்த்து இவர்களால் குரல் எழுப்பிட இயலாது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். மாநிலத்தின் உரிமைகளை பாஜக தனது இஷ்டப்படி பறித்து வருகிறது. தமிழகமோ முற்றிலும் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது. மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாது மௌனம் காப்பதில் தில்லியில் அதிமுகவும், திமுகவும் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கின்றன. எனவே, தமிழகத்திற்கு ஓர் மாற்று தேவை. கொள்கைப்பூர்வமான ஓர் மாற்று தேவை. திராவிட இயக்கம் என்றழைக்கப்படும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த உண்மையான இயக்கத்தை தோற்றுவித்தவர்களின் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கின்ற ஓர் மாற்று தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
நன்றி; தீக்கதிர்