
பாமக அல்லது நாம் தமிழர் கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். இவை வீழ்த்தப்பட வேண்டிய சாதியவாத, இனவாத சக்திகள்.
பாஜக பற்றி எழுதவே தேவையில்லை. தமிழ்நாட்டில் அதற்கு என்றுமே இடம் கிடையாது.
இந்தமுறை அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகம் இல்லை என்கிறார்கள் சிலர். இதை ஏற்கமுடியாது. இலவச பேன், கிரைண்டர் எவையும் தயாரிப்பாளர்களிடம் வாங்கப்படவில்லை என்பது ஓர் உதாரணம். டெண்டர் கிடையாது, யாரிடம் வாங்கினார்கள், தயாரிப்பாளர்கள் பெயர் என்ன என எந்த விவரமும் இல்லை. மின்சார ஒப்பந்தத்தின் பின்னாலும் ஊழல் இருந்திருக்கிறது.
இந்த ஆட்சி மக்களால் அணுகமுடியாத நிலையில் இருந்திருக்கிறது. குடியரசுத் தலைவராக, நாட்டு மக்கள் அனைவரின் மதிப்பையும் பெற்றவராக இருந்த தமிழரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக்கூட செல்லாத ஒரே முதல்வர் ஜெயலலிதா.
மக்களின் வரிப்பணத்தில் அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று தன் பெயரை பிராண்டாக முன்னிறுத்திக் கொண்டவர், மூலை முடுக்கெல்லாம் தன் முகம் மட்டும் தெரிய வைத்தவர், அந்தத் தைரியத்திலேயே இப்போதும் இலவசங்களை அறிவித்தவர் ஜெயலலிதா.
மாநிலத்தின் நலனுக்காக புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. ஊடகங்களையும் சந்திப்பதில்லை, மக்களையும் சந்திப்பதில்லை. அவருடைய அமைச்சர்கள் எல்லாரும் அடிமைகள். சுயமாக முடிவு எடுக்க முடியாத பொம்மைகள்.
தமிழர்கள் அனுபவிப்பது எல்லாம் அம்மா போட்ட பிச்சைடா என்று அமைச்சர் வளர்மதி சொன்னாரே அதற்காகவே அதிமுக முறியடிக்கப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல. ஜெயல்லிதாவுக்கு உடல்நல பிரச்னைகள் இருப்பதாக தெரிகிறது. தலைக்குமேல் வழக்கு கத்தி போல தொங்கிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிராக வந்தால், அல்லது உடல்நிலை காரணமாக அவர் முதல்வராக நீடிக்க முடியாமல் போனால், சசிகலா குடும்பத்தின் கையில்தான் ஆட்சி போகும்.
அதற்கு பிறகு என்னவாகும் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் என்ன நடந்த்து என்பதை யாரும் மறந்திருக்கவும் முடியாது. ஆக, அதிமுக ஆட்சி வீழ்த்தப்பட்டாக வேண்டும்.
திமுக இன்று சோதனையில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் வேறு யாருமல்ல, திமுகவேதான். தனக்கும் தனது முக்கிய எதிரிக் கட்சிக்கும் உள்ள வாக்குவிகிதம் என்ன என்பது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாதா என்ன? அப்படியிருந்தும், ஊழல் குற்றச்சாட்டுகளால் குடும்பத்தின் பெயர் கெட்டுப் போயிருக்கிற நேரத்திலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகளும் கைவிட்டுப்போக அனுமதித்தார்கள். விஜயகாந்துக்கு வேறு வழியில்லை, வந்தே தீருவார் என்ற நம்பிக்கை. எப்படியோ கணக்கு தப்பிப் போயிற்று. திமுகதான் வெற்றி பெறும் என்று நினைத்தால் அது வெறும் விஷ்ஃபுல் திங்கிங்தான்.
ம.ந.கூ. வெற்றி பெற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் விஜயகாந்தை எல்லாம் முதல்வராக ஏற்க முடியுமா? இப்படி உளறுகிறாரே என்று கேட்கிறார்கள். உளறலுக்கு காரணம் அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் பக்க விளைவு. விஜயகாந்துக்கு அழகாக பேசத் தெரியாதிருக்கலாம். ஆனால், அடுக்குமொழியில் அழகாக பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்தார்கள், தம் குடும்பத்துக்கு என்ன செய்தார்கள் என்று நாம் பார்க்கவில்லையா என்ன?
யோசித்துப் பாருங்கள் — ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, சொத்து சேகரிப்பு, மிரட்டி சொத்துகளை பறித்தல், சுற்றுச்சூழல் சீர்கேடு, தனியார் பள்ளிகளை ஊக்குவித்தல், இலவச பிச்சைகள், காப்பீட்டு திட்ட ஊழல்கள், கல்வி வியாபாரம், அடிமைத்தனம், குடும்ப ஆதிக்க அரசியல், கூடங்குளம், மீத்தேன், கெயில், ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வட்டம்-மாவட்டம்-மாமாவட்டம்… எல்லாவற்றிலும் திமுக-அதிமுக இரண்டும் சளைத்ததல்ல இல்லையா?
மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக ஆட்சி அமைந்தால் இதைவிட மோசமாகவா இருந்துவிடப்போகிறது?
ஆட்சி மாற்றம் என்றால் திமுக அல்லது அதிமுக மட்டுமே என்று நினைப்பீர்களேயானால் திமுகவுக்கே வாக்களியுங்கள்.
இரண்டு கட்சிகளுக்கும் மாற்று ஒன்று உருவாகட்டும் என்று நினைப்பவர்கள் மக்கள் நலக்கூட்டணியின் சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
ஷாஜஹான், எழுத்தாளர்.