ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். 6 கட்சிகளின் தலைமையிலான எளிய மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு வாய்ப்பளியுங்கள் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி சார்பில் மதுரவாயல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக க.பீம்ராவ் போட்டியிடுகிறார்.
அவருக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (மே 10) ராமாவரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் என்.சங்கரய்யா பேசியது வருமாறு:
தமிழகப் பெருமுதலாளிகளின் நலன்களை திமுக, அதிமுக கட்சிகள் பாதுகாக்கின்றன. இதற்காக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இதனை எதிர்த்து உருவான மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. திமுக, பாஜக-வுடன் சேராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்தது வரலாற்று சிறப்புமிக்கது. தேமுதிக-வின் முடிவால் வகுப்புவாத, பிற்போக்கு பாஜக தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ‘அ’ என்ற எழுத்தைத் தவிர எந்த வித்தியாசமும் இல்லை. இவ்விரு கட்சிகளும் 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இவர்கள் ஆட்சிக் காலம் முழுவதும் மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டுள்ளனர். தொடர்ந்து அடக்குமுறையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.தமிழக முதலமைச்சர் மீது உச்சநீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடந்து வருகிறது. திமுக தலைவர் குடும்பத்தில் இருவர் மீதும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. ஒரு ஊழல் கட்சிக்கு மற்றொரு ஊழல் கட்சி மாற்றாகுமா? ஊழலை ஒழிக்க வேண்டுமானால் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். 6 கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.
அவ்வாறு நிகழ்ந்தால், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 4 லட்சம் ரூபாய், கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு 18 லட்சம் ரூபாய் என லஞ்சம் கேட்பது ஒழிக்கப்படும். அரசுத்துறை, நிறுவனங்களில் லஞ்ச ஊழல் ஒழிக்கப்படும். பல்கலைக் கழக ஆசிரியர்கள் கிரேடு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அரசுப்பணிகள் நடக்கப் பணம் கொடுப்பதை தடுப்போம்.
ஆறு கட்சி கூட்டணியின் மதிப்பை ஊடகங்கள் குறைத்து காட்டுகின்றன.மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி திமுக அல்லது அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன. யாருக்கு ஓட்டுபோடுவது என்றுமக்கள் விவாதித்துக் கொண்டிருக்கையில் கருத்துக்கணிப்பு வெளியிடுவது எப்படி சரியாக இருக்கும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தமிழ் இலக்கணம். அதன்படி 50 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுகவை கழித்துவிட்டு, விஜயகாந்த் தலைமையில் புதிய ஆட்சி புக வேண்டும். மக்களின் அபரிமிதமான ஆதரவோடு 6 கட்சி கூட்டணி வளர்ந்து கொண்டி ருக்கிறது. இந்த 6 கட்சிகளும் மதச்சார்பற்ற கட்சிகள். மதச்சார்பற்ற, ஜன நாயக, முற்போக்கு அரசு அமையும். வகுப்புவாதம் தடுக்கப்படும். தொழிலாளர், விவசாயிகள், பத்திரிகைகளுக்கான உரிமைகள் வழங்கப் படும். ஜனநாயக போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்படும். திமுகவும், அதிமுகவும், பெருமுதலாளிகள், பெருவணிகர்களுக்காக சேவை செய்கின்றன.
இந்த 6 கட்சிகளும், தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் என உழைப்பாளிகளுக்காகப் போராடுகின்றன. அந்த இரு கட்சிகளும் முதலாளிகளின் நலன் காப்பார்கள்; நாங்கள் பாமர மக்களின் நலன் காப்போம். சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை வாசித்தால் விவாதம் கிடையாது. எங்களது கூட்டணி ஆட்சியில் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் பேச உரிமை இருக்கும். ஆட்சிக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரலாம். மக்கள் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் இடமாக சட்ட மன்றம் மாற்றப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு அரசியல் போராட்டங்கள் நடத்த உரிமை அளிக்கப் படும்.எனவே, எளிய மக்களின் ஆட்சி அமைய 6 கட்சி கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்.
இதுவே, எதிர் கால தமிழகம் இடதுசாரி, ஜனநாயக பாதையில் செல்ல வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்திற்கு சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். தேமுதிக தொகுதிச் செயலாளர் ஜெ.தினகர், மதிமுக ஒன்றியச் செயலாளர் ப.கோதண்டம், தமாகாபகுதித் தலைவர் ஏழுமலை, விசிக தொகுதி துணைச் செயலாளர்செங்குட்டுவன், சிபிஎம் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் எஸ். வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.