ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

விஜய்பாஸ்கர்

விஜய் பாஸ்கர்
விஜய் பாஸ்கர்
 கணித மேதை ராமானுஜனத்தை நம்மவர்கள் அணுகும் விதமே சலிப்பாக இருக்கிறது.அவர் சிறுவயதிலேயே வைதீகமாக இருந்தார். வைதீக மந்திரங்கள் சடங்குகளை நம்பினார். தினந்தோறும் மந்திரம் சொன்னார். அதனாலேயே அறிவைப் பெற்றார் என்ற கருத்தை திரும்ப திரும்ப சொல்வது. அல்லது சுற்றி வளைத்து சொல்வது.

விஞ்ஞானம் எல்லாமே ஆன்மிகத்தில் அடக்கம் என்று பொத்தாம் பொதுவாய் பேசுவது போன்ற விஷயங்கள் பகுத்தறிவுக்கு எதிரானவை.உண்மையும் கிடையாது.

ராமானுஜன் கணித மேதையாக உயர்வதற்கு அவருடைய ”கசடற கற்றல்” திறனே காரணம். அவருடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் பெரியவர்களால் கணிதத் துறை மேல் சிறுவயதில் ஆர்வமாகிறார். தன் 11 வயதில் S.L. Loney எழுதிய Plane Trigonometry என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்து, அடுத்த ஒன்றரை வருடங்கள் அதிலேயே ஊறிக்கிடக்கிறார். அந்த புத்தகத்தை காதலோடு கசடற மிச்சம் மீதி வைக்காமல் சுத்தமாக தின்று முடிக்கிறார். கணித பலம் பெறுகிறார்.

11 வயது என்றால் இக்காலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சமம். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வர்க்கமூலம் என்ற ஸ்கொயர் ரூட் கண்டுபிடிப்பது கூட சிலபஸில் கிடையாது.

Trigonometry பத்தாம் வகுப்பில்தான் நாம் கற்றுக் கொள்கிறோம். ஆனால் ராமானுஜன் கணிதத்தில் ஆர்வமுடையவர்களின் தூண்டுதலால் இப்புத்தகத்தை அதாவது பொறியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் படிக்க வேண்டிய ஒரு புத்தகத்தை ஆறாம் வகுப்பு படிக்கும் வயதிலேயே தெளிவாக படித்துவிடுகிறார்.

அப்படியானால் அவர் மூளை எப்படி கணிதமாக துடித்துக் கொண்டிருக்கும். சிறுவயதில் அதிகமாக செஸ் விளையாடியவர்களை கேட்டால் சொல்வார்கள் “தூக்கத்தில் கூட செஸ் போர்டும் விளையாட்டும் தெரிகிறது” என்று. அப்படியானால் அதிகப்படியான படைப்பு சக்தியை கொண்டுள்ள டீன் ஏஜில் முக்கியமான கணித புத்தகத்தை கற்ற ராமானுஜத்தின் மனநிலை எப்படி இருந்திருக்கும். தளும்புதல் என்று சொல்வோமே அது மாதிரி கணிதத் திரவம் தளும்பும் மனதைப் பெற்றிருப்பார்.

முதல் புத்தகம் படித்துவிட்டாரா? அடுத்து ராமானுஜன் படித்த இரண்டாம் புத்தகத்தை பார்ப்போம். தன் பதினைந்தாவது வயதில் அதாவது இப்போதைய பத்தாம் வகுப்பில் அவர் இன்னொரு புத்தகம் கற்கிறார். அப்புத்தகத்தின் பெயர் Synopsis of Pure Mathematics is a book by G. S. Carr.

இப்புத்தகத்தில் நிறைய தேற்றங்கள் இருக்கின்றன.  ஆனால் பெரிய அளவில் நிருபணங்கள் இல்லை. “அது அப்படித்தான்” என்ற நிலையிலான தேற்றங்கள். ஆனால் பொய்யில்லை. பெரும்பான்மை கணித உண்மைகள்தாம். இந்தப் புத்தகத்தையும் ராமானுஜன் கசடற கற்கிறார்.

பத்தாம் வகுப்பில்தான் நாம் Trigonometry தொடங்குவோம். அனால் ராமானுஜன் அந்த வயதில் முதுகலை கணிதம் முடிக்கும் அளவுக்கான அறிவை பெற்றுவிட்டார்.

அப்படியே காளிதேவி ஒரே நாளில் நாக்கில் துப்பி அவர் பெறவில்லை. அதைப் படிப்படியாகத்தான் பெற்றிருக்கிறார். இந்த உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஆன்மிகம் கொஞ்சமாக துணை புரிந்திருக்கலாம்.

ஆனால் பெரும்பான்மை என்பது அவருடைய கணிதம் கற்றல் ஆர்வம்தான். சரியான பருவத்தில் அவருக்கு கிடைத்த அந்த புத்தகங்களை அவர் சலிக்காமல் கற்ற அந்த ஆர்வம்தான்.

ராமானுஜன் அவரே அவரை ஒரு கலைஞனாக பார்த்திருக்கலாம். ஒரு ஒவியனிடம் போய் நீ எப்படி இப்படி வரைகிறாய் என்று கேட்டால் ஏதோ தெய்வச் செயல் என்றுதான்
சொல்வான்.

ஏ.ஆர் ரஹ்மானிடம் போய் எப்படி இதெல்லாம் என்றால் “எல்லாம் அவன் செயல்” என்பார். ஆனால் ரஹ்மானின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மிகச்சிறுவயதிலேயே அவர் அக்கலையின் சூட்சமத்தை வெறித்தனமாக கற்றிருப்பார். பிற்காலத்தில் அது பொங்கி தெறிக்கும் போது அந்த கலைஞர்களையே அது குழப்பி விடுகிறது.

அது இறைவன் செயல் என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரிதான் ராமானுஜனும் ‘நாமகிரித் தாயார்” தனக்கு சூத்திரங்களை காட்டுவதாக சொன்ன சொல்லையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராமானுஜனோ, ரஹ்மானோ அவரவர் கலையில் பெரியவர்களாய் இருக்கலாம். ஆனால் அக்கலையின் ஊற்றுக்கண் பற்றி இதிலிருந்து இது என்று அவர்களால் சொல்லப்படும் வார்த்தைகளை முக்கியமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் மனதை அவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்த ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்வதுதான் சரியாகும்.

அப்படியாக ஒருவர் விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்தால் அவர் ராமானுஜன் புத்தக்ம் கற்றுதான் கணிதக் கலைஞனாக உருவாக ஆரம்பித்தார் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார்.

கணிதத்தில் ராமானுஜன் சொல்வதை நாம் நம்பலாம். ஆனால் மனோதத்துவத்தில் அவர் சொல்வதை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. திருப்புமுனை சம்பவம் என்று ஒன்றிருக்கும்.

எல்லா கலைஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கு அது நடக்கும். பாம்பன் சுவாமிகளையும் மைக்கேல் ஃபார்டேவையும் எடுத்துக் கொள்வோம். பாம்பன் சுவாமிகளுக்கு சிறுவயதில் கந்த சஷ்டி கவசம் கிடைத்தது. அவர் அதைப் படித்து கடவுளைப் பாடி பெரிய சாமியானார். மைக்கேல் ஃபாரடேக்கு விஞ்ஞானி ஹம்பரி டேவியின் உரைகளைக் கேட்கும் டிக்கட்கள் தற்செயலாக கிடைக்கிறது.

ஃபாரடே விஞ்ஞானியாகி மின்சாரத்தைக் கண்டுபிடிக்கிறார். பாம்பன் சுவாமிகளிடம் போய் எப்படி பாட்டெழுதுகிறீர்கள் என்று கேட்டால் “எல்லாம் முருகன் செயல்?” என்பார். ஃபாரடேவிடம் போய் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் என்று கேட்டால் அவரும் “எப்படியோ மனதுக்கு தோன்றுகிறது” என்றுதான் சொல்லி இருப்பார். உடனே அதையே ஆதாரமாக கொள்ளக் கூடாது.

ராமானுஜன் பிறப்பால் ஒரு பிராமணன் எனபதாலேயே அவரைக் கொண்டாடாமல் இருக்கும் நபர்களையும் பார்த்திருக்கிறேன். பார்க்கிறேன்.

அவர் கணிதத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை சின்னதாக கூகிள் செய்து கூட பார்க்காமல் அவர் பிராமணன் என்பதாலேயே அவர் மந்திரம் சொல்வதின் மூலம் அறிவைப் பெற்றார் என்ற கருத்துக்களைச் சொல்லி அவரை கொண்டாடும் அப்பாவிகளையும் பார்க்கிறேன்.

இது மாதிரி மக்கள் இருக்கும் நாட்டில் ஏன் பிறந்தேன் என்று சலிப்பாக இருக்கிறது. அங்கே ஒருவன் சிறுவயதில் கொட்டை வீங்கி ஹைட்ரோசில் நோயோடு கணிதம் மேலுள்ள ஆர்வத்தில் யானை மாதிரி கணிதக் காட்டில் கம்பீரமாக திரிந்து காச நோயால் இருமி செத்திருக்கிறான்.

அவன் கணிதத்தில் என்ன செய்தான் என்று அதை மாணவர்களிடம் பரப்பி இன்னும் பல ராமானுஜன்களை உருவாக்கும் வேலையைச் செய்யாமல் இன்னும் ஆன்மிகம்தான் வைதீகம்தான் ராமானுஜன் கணிதத் திறமைக்கு காரணம் என்று ஒருவர் சொல்வாரே ஆனால் அவர் நிச்சயம் பகுத்தறிவுக்கு எதிரானவர். இது மாதிரி மனநிலை உங்கள் யாருக்காவது மனதில் இருந்தால் அதைத் தூக்கிப் போட்டுவிடுங்கள்.

ராமானுஜன் பிராமணன் அல்ல. அவர் கணிதன்.

இதை திரும்ப திரும்ப மனதில் சொல்லிக் கொள்ளுங்கள். மேம்படுவோம்.

விஜய் பாஸ்கர், சமூக அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.