நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

மாதவராஜ்

மாதவராஜ்
மாதவராஜ்

நடிகர் ராமராஜனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, இந்த நாட்டின் பிரதமரின் போலிக் கல்விச் சான்றிதழ் குறித்த விவாதங்களுக்கு கொடுக்கவில்லை.

ஒரு மாதத்துக்கும் மேலாய் ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, 1950ம் வருடம் பிறந்ததாக சொல்லப்படும் (இதிலும் 29.08.1949, 17.9.1950 மற்றும் 19.10.1950 என மூன்று பிறந்த தேதிகளால் ஒரு குழப்பம் இருக்கிறது.) மோடி, தனது 28 வது வயதில் பி.ஏ முடித்து, 33 வது வயதில் எம்.ஏ முடித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் இந்தக் கல்வித்தகுதி குறித்து சந்தேகங்கள் எழுப்புகிறார். 1978ல் நரேந்திர மோடி என்பவர் பி.ஏ படித்திருப்பதாகவும், அவர் இந்த நரேந்திர மோடி இல்லை என்றும் அவரது முழுப் பெயர் நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்றும், அவர் 1958ல் பிறந்தவர் என்றும் தகவல்களை வெளியிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர் தங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால் அது அந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு பெருமை, அதனை தங்கள் வளாகங்களில் பொன்னெழுத்துகளால் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களே அப்படி எதுவும் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடியுடன் படித்தவர்கள் இந்த நாட்டில் இருப்பார்களே, அவர்களில் ஒருவராவது மோடி என்னோடு படித்தவர் என எந்த அனுபவத்தையும் பகிரவில்லையே என சந்தேகப்பட்டனர்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் கல்வித்தகுதி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. Central Information Commissionலிருந்து இரண்டு யூனிவர்சிட்டிகளுக்கும் தகவல் அளிக்குமாறு ஆணியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை. இரண்டு யூனிவர்சிட்டிகளும், ரெகார்டுகளை ஆரய்ந்து தகவல் அளிப்பதாகச் சொல்லியிருக்கின்றன.

காலதாமதத்தால் மேலும் சந்தேகங்களை எழுப்புகிறார் கெஜ்ரிவால். ஊடகங்கள் அமைதியாய் இருக்கின்றன. அடி வயிற்றிலிருந்து கத்த டைம்ஸ் நவ் அர்னர்ப் கோஸ்வாமிக்கு வேறு பிரச்சினைகள் நாட்டில் இருக்கின்றன. தன்னைப் போன்று ஒரு மெழுகுச் சிலை வடிவமைப்பதற்காக மணிக்கணக்கில் போஸ் கொடுத்த மோடிக்கு இந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் போய்விட்டது போலும். அவரது பரிவாரங்களும், பக்த கோடிகளும் “இதுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினையா?” என்று அலட்சியப்படுத்த முனைந்தனர். என்னமோ, நாட்டின் வறுமை, வேலையின்மை, தீண்டாமை, விவசாயிகளுக்கான நெருக்கடிகளை எல்லாம் இவர்கள் தூக்கிப் பிடித்து தீர்க்கிறவர்கள் போலும். சமூக ஊடகங்களில் மோடி குறித்த கிண்டல்களும், கேலிகளும் குவிய ஆரம்பித்தன.

வெக்கையும், புழுக்கமும் தாங்க முடியாமல் இரண்டு நாட்களுக்கு முன்னால் , பிஜேபி கட்சித்தலைவர் அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட்டாக இரண்டு காகிதங்களைக் கையில் பிடித்தபடி வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், “இதுதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடமும், நரேந்திர மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சென்றனர். அதுவரை வாயைப் பொத்திக்கொண்டு இருந்த ஊடகங்கள் அனைத்தும் இதனை செய்திகளாகவும், காட்சிகளாகவும் வெளியிட்டு மூச்சு விட்டன.

அந்த நிம்மதி கொஞ்சம் கூட நீடிக்கவில்லை. நாட்டின் மிக முக்கிய மனிதர்கள் இருவர், தங்கள் பிரதம மனிதர் குறித்து வெளியிட்ட அந்த கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்றும், போட்டோ ஷாப்பில் தயாரிக்கப்பட்டவை என்றும், சான்றிதழ்களில் காணப்படும் fontகள் 1991க்குப் பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்றும், தேதிகள், பெயர்களில் மாற்றம் இருக்கின்றன என்றும், மோடி வாங்கிய மார்க்குகளின் கூட்டல்களில் தவறு இருக்கிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மைதான். 23 + 23+67+23 = 136 தான் வரவேண்டும். மார்க்‌ஷீட்டில் 165 என்றிருக்கிறது. திரும்பவும் ஊடகங்கள் வாயைப் பொத்திக்கொண்டு, வேறு முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டன.

டெல்லி யுனிவர்சிட்டிக்கு நாட்டின் பிரதமரின் மானத்தையும், கல்வி அறிவையும் காப்பாற்ற வேண்டிய பாத்திரம இந்த நாடகத்தில் விதிக்கப்பட்டது. ரெகார்டுகளை ஆராய்வதாக சொல்லிக்கொண்டு இருந்தவர் ”ஆமா, பிரதமர் மோடி டெல்லி யுனிவர்சிட்டியில் படித்திருக்கிறார். 1978ம் ஆண்டில் பட்டம் பெற்றிருக்கிறார். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது” எனச் சொல்லி வைத்தார். அமித்ஷாவும், அருண் ஜெட்லியும் காண்பித்த கல்விச் சான்றிதழகள்தான் யுனிவர்சிட்டியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு யுனிவர்சிட்டி துணைவேந்தரிடம் பதில் இல்லை. ரெகார்டுகள் இருக்கிறதென்றால் அதனை நாங்கள் ஆராய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று துணைவேந்தாரை சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அவர் முக்கிய அலுவலகள் இருப்பதாக தட்டிக் கழித்துவிட்டார்.

ஒருபுறம், “போட்டோ ஷாப்பால் உருவானவன் போட்டோ ஷாப்பால் மரணமடைவான்” என்னும் புது நீதிகள் டுவிட்டரில் தெறிக்கின்றன. “முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போல மோடிபாய் பி.ஏ, எம்.ஏ” என கிண்டல்கள் அள்ளுகின்றன. இன்னொருபுறம், “டெல்லி நிர்வாகத்தை கவனிக்காமல் கெஜ்ரி்வால் ஏன் மோடியையே மோப்பம் பிடிக்கறார்?”, “இதுபோல் தனிநபர் குறித்த ஆராய்ச்சிகளால் நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது“, “கெஜ்ரிவால் படித்தவர்தானே, அவர் செய்யக் கூடிய செயலா இது?”, “இதற்காக கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை”, “மோடியின் படிப்பைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?” என்னும் விமர்சனங்களும் மோதுகின்றன. இந்த விமர்சனங்களில் தவறை ஒளித்து வைக்கும் உபாயமே இருக்கின்றன. மோடி படித்தவரா, படிக்காதவரா என்பது விவாதமே அல்ல. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இந்த விஷயத்தில் கூட பொய் சொல்கிறவராக இருந்தால், அவரை எப்படி நம்புவது என்பதே விவாதம்.

பிரதமர் மோடி, தன்னிடம் இருக்கும் ஒரிஜினல் சர்டிபிகேட்களை தனது இணையத்தில் வெளியிட்டு, நாட்டு மக்களுக்கு தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி எப்போதோ வைத்திருக்கலாம். அவரிடம் இல்லையென்றால் யுனிவர்சிட்டிகளை வெளியிடச் சொல்லி இருக்கலாம். இந்த நேர்வழியில் செல்லாமல் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சாதிக்கும் மௌனமும், இழுத்தடிக்கும் காலதாமதமும் எது உண்மையாய் இருக்கும் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து விட்டன.

நாட்டின் அதிகாரத்தை தன்னிடம் கொண்டு இருப்பவர்களுக்கு டெல்லி மற்றும் குஜராத் யுனிவர்சிட்டிகளில் இனி கல்விச் சான்றிதழ்களை உருவாக்குவதும், இருக்கிறது எனச் சொல்ல வைப்பதும் மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால் இதுவரை இல்லையென்பதும், இருந்ததும் போலியானவை என்பது சாதாரண விஷயமல்ல.

மாதவராஜ், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.