ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி கூறியிருந்தார். இதனைச் சுட்டிக் காட்டி அன்னையர் தினத்தன்று கன்னய்ய குமார் அவருக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.
“அன்புக்குரிய ஸ்மிருதி இரானி அவர்களே…அனைத்து பல்கலைக்கழகங்க மாணவர்களின் அன்னையாக அறிவித்துக்கொண்ட தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் காட்டிவரும் தாயன்பின் கீழ் கற்பதற்கு நாங்கள் கடினமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய ஆட்சியின் கீழ், காவல்துறையினரின் குண்டாந்தடி மற்றும் பட்டினிக்கிடையிலும் எப்படிப் பயிலுவது என்று நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
இன்று ஒரு நண்பர் என்னைக் கேட்டார்: நீங்கள், மோடியின் ஆட்சியின் கீழ், ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது சொந்தத் தாய் மட்டுமல்லாது, பசு என்கிற தாய், இந்தியா என்கிற தாய், கங்கை என்கிற தாய் மற்றும் ஸ்மிருதி என்கிற தாய் என இருக்கையில், எப்படி ரோஹித் வெமுலா இறக்க முடியும்? இதற்கு என்னிடம் விடை இல்லாததால் அதே கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன், தாயே. தாய் ஸ்மிருதியின் அமைச்சகம் தான் ரோஹித் வெமுலாவைத் தண்டிக்க வேண்டும் என்று பல கடிதங்கள் எழுதியதாகவும், ஏழு மாதங்களுக்கும் மேலாக அவனது கல்வி உதவிப்பணத்தை நிறுத்தி வைத்ததற்குப் பொறுப்பாகும் என்றும் அந்த `தேச விரோத’ மாணவ நண்பர் எனக்கு மேலும் எழுதியிருக்கிறார். இந்தியா போன்ற மாபெரும் நாட்டில் ஒரு தாய் தன் குழந்தையைத் தற்கொலைக்குத் தள்ள முடியுமா? ஜோடனை செய்யப்பட்ட வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு ஒருதலைப்பட்சமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் தன் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளை ஒரு தாயால் ஏற்க முடியுமா? 11 நாட்களாக பட்டினியால் வாடும் உங்கள் குழந்தைகள் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். உங்களுக்கு நேரமிருப்பின் தயவுசெய்து பதில் கூறுங்கள். அந்த நண்பர் மேலும் உங்களை, “தேச விரோதிகளின் பகுத்தறிவுக்கு விரோதமான தாய்’’ என்றும் விளித்திருக்கிறார். உண்மையின் அடிப்படையிலான உங்களின் பதில் மூலமாக இந்தக் குற்றச்சாட்டு பொய் என்று மெய்ப்பிப்பீர்கள் என நம்புகிறேன்.’’
நன்றி:தீக்கதிர்