“இதுபோன்று மாணவர்களின் நலனில் அக்கறையற்று மரக்கட்டைபோல் உணர்ச்சியற்று இருந்திடும் ஒரு துணைவேந்தரை நாங்கள் எங்கேயும் சந்தித்தது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளமாட்டோம். இது சாகும்வரையிலான உண்ணாவிரதம்,’’ என்று மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராம நாகா கூறுகிறார். 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களில் ராம நாகாவும் ஒருவர். கன்னய்ய குமார் உட்பட ஆறு பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாலும், மருத்துவர்கள் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு சிகிச்சையைத் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியதாலும் அவர்கள் மட்டும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதர மாணவர்கள் 11 பேர் போராட்டத்தை தொடர்கின்றனர்.
ஜேஎன்யு நிர்வாகத்தின் பழி வாங்கல் நடவடிக்கைகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவாக ஜேஎன்யூ ஆசிரியர் சங்கம் சார்பிலும் உண்ணாவிரதம் மேற் கொள்ளப்பட்டது. போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஜேஎன்யூ துணைவேந்தர் ஜகதீஷ் குமாரை ஜேஎன்யூ ஆசிரி யர் சங்கத்தின் சார்பில் இரு நாட்களுக்கு முன் சந்தித்தனர். வளாகத்தில் உள்ள பிரச்சனைக்கு சுமுகதீர்வு காண முயன்றனர். ஆயினும், நிர்வாகம் பிடிவாதம் பிடித்ததால், ஜேஎன்யூ ஆசிரியர் சங்கம் சார்பிலும் உண்ணாவிரதம் மேற் கொள்ள முடிவு செய்தனர். சனிக் கிழமையன்று ஆசிரியர் சங்கத்தின் உண்ணாவிரதம் தொடங்கியது. ஜேஎன்யூ ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான பிக்ரமைத்யா சௌத்ரி கூறுகையில், நிர்வாகம் வெறும் ஊகத்தின் அடிப்படையில் மாணவர்களுக்குத் தண்டனை அளித்திருக்கிறது. இதனை ஏற்க முடியாது என்றார்.
போராடும் ஜேஎன்யூ ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதரவாக தில்லியில் உள்ள மாணவர் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் பெரும் திரளாக சனிக்கிழமையன்று பல்கலைக் கழக வளாகத்திற்கு வந்து தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். இதனை நிர்வாகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு மிரட்டலை மேற்கொண்டுள்ளது. “மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியிலிருந்து ஆட்களை வரவழைப்பதைத் தவிர்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது வளாகத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று அது தெரிவித்திருக்கிறது. ஆசிரியர்கள் மிகப்பெரிய பதாகை ஒன்றினை தொங்க விட்டிருந்தனர்.
அதில், “நிர்வாகம், ஊகத்தின் அடிப்படையில் மாணவர்களைத் தண்டிப்பதையோ, ஆசிரியர்களை அச்சுறுத்து வதையோ ஏற்கமுடியாது,’’ என்று பொறிக்கப்பட் டிருந்தது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கத் தலைவர்கள் கூறுகையில், “துணை வேந்தரை நாங்கள் சந்தித்தபோது, துணை வேந்தர், பிப்ரவரி 9 அன்று நடை பெற்ற நிகழ்வுகளுக்கு மாணவர்களே காரணம் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,’’ என்ற முறையில் பேசினார். “இதனை நாங்கள் எதிர்க் கிறோம். எவரையும் ஊகத்தின் அடிப்படையில் தண்டிக்க முடியாது,’’ என்று சௌத்ரி மேலும் கூறினார். மனிதச் சங்கிலிபல்கலைக் கழக ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக சனிக்கிழமை காலையிலிருந்தே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் திரண்டு மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தினர்.