
உடல் முழுக்கக் காயங்கள். கழுத்து நெறிப்பு அறிகுறிகள். வன்புணர்ச்சி அடையாளங்கள்.
நடந்ததைச் சொல்ல, தாக்கப்பட்டவர் உயிரோடில்லை. குற்றவாளியை இன்னும் கேரள காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
ஆயினும் தேசம் அமைதியாய் இருக்கிறது. வலைத்தளங்கள் வேறு எதையோ பேசுகின்றன.
ஊடகங்கள் பெரிதாய் கண்டுகொள்ளாதிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் விரைவான நடவடிக்கைக்காகப்
போராட்டம் நடத்தினால், தேர்தல் ஆதாயத்துக்காகப் போராடுவதாக இதே ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன.
இதற்கெல்லாம் என்ன காரணம்? பட்டதாரியாவதோடு மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் சட்டம் பயின்றுவந்த ஜிஷா ஒரு தலித் பெண் என்பதைத் தவிர?
நிர்பயாக்களுக்காக வடிக்கப்பட்ட, வடிக்கப்படுகிற கண்ணீர் முழு நியாயம்.
அதில் சில துளிகளேனும் ஜிஷாக்களுக்காகத் தெறிக்காதிருப்பது என்ன நியாயம்?
குற்றவாளி யாராகவும் இருக்கட்டும், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். ஆனால் ஒட்டுமொத்த சமூக மனநிலை விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
வன்முறைக்கு இலக்கானவர் தலித் என்றால், ஆவேசம் தணிந்துபோவது ஏன்?
படிப்பு, சொந்தமாய் வீடு கட்டும் முயற்சி, பொது வெளியில் தலைநிமிர்ந்த நடை… என்றெல்லாம் வருகிறபோது “உன் எல்லையைத் தாண்டுகிறாய்” என்ற முகச் சுழிப்பு தொடர்வது ஏன்?
எங்கோ ஒரு பெண் அல்லது ஆண் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தி வருகிறபோது “அடப்பாவமே” என்று பதறும் உணர்வு, தாக்கப்பட்டவர் யாரெனத் தெரியவரும்போது “ஓ… அது நம்மில் ஒருவரல்ல” என்று அடங்கிவிடுவது ஏன்?
எங்கேயும் எப்போதும் நடந்துகொண்டிருக்கிற இதையெல்லாம் சமுதாயத்தின் சுய விசாரணைக்கான கேள்விகளாக முன்வைத்தால்,
எங்கேயோ எப்போதோ நடப்பதை வைத்துக்கொண்டு சாதிப் பிரச்சனையாக்குவதாகக் குற்றம் சாட்டுவார்கள்!
பள்ளம் நிறைந்து சமமாகிற வரையில் தண்ணீர் பாய்வது நிற்காது.
சாதியப் பள்ளம் தூர்ந்துபோகும் வரையில் நம் விசாரணை முடியாது.
கேரளத்தில் நடைபெறும் போராட்டங்களில் ஒரு மாறுபட்ட வாசக அட்டை உயர்த்திப் பிடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஆத்மா என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான். ஆயினும் நானும் சேர்ந்து அதே வாசகத்தைச் சொல்கிறேன்:
“ஜிஷா, உன் ஆத்மா சாந்தியடையாமல் இருப்பதாக.”
அ. குமரேசன், பத்திரிகையாளர்.