உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா?
நீங்கள் பல இடங்களில் ஃபாண்ட்ரியில் முதன்மை கதாபாத்திரமான ஜப்யா நான் தான் எனக் கூறியிருக்கிறார்கள்? சய்ரத்தில் உங்களுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு உள்ளது?
சய்ரத் என்னுடைய கதை அல்ல. உண்மையில் இது பிரபஞ்சம் முழுமைக்குமான கதை. கதாபாத்திரங்களை மெருகேற்றும்போது, எழுத்தாளராக-இயக்குநராக அதில் நான் வாழ்கிறேன். நான் இந்த உதாரணத்தைச் சொல்வேன் – ஒரு தபால்காரர் ஒரு கிராமவாசிக்கு கடிதத்தைப் படித்துக் காட்டும்போது, அந்தச் செய்தி பரிமாற்றத்தில் தானும் ஒரு அங்கமாகிறார்.
நான் முன்பொரு காலத்தில் ஆழ்ந்த காதல்வயப்பட்டிருந்தேன். அவளும் எனக்கு இணையான காதல் உணர்வுகளைக் கொண்டிருப்பாள் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவேயில்லை. எப்படியோ என் உணர்வுகள் இவர்கள் இருவருக்குள்ளும் வந்திருக்கிறது. அவன் பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கிறான், அவளும் அப்படியே. என்னுடைய காதலை மாற்ற என்னால் இயலவில்லை. படத்தில், இந்தக் கருவின் கட்டுப்பாட்டை தீர்மானிப்பவன் நான், என்னுடைய உணர்வுகளை தள்ளி வைத்துவிட்டேன்.
ஃபாண்ட்ரியில் பெரும்பாலான காட்சிகள் வறண்ட நிலத்தின் பின்னணியில் இருக்கும். ஆனால் சய்ரத் வித்தியாசமான சூழல், இனிமையான சூழலில் படமாக்கியிருக்கிறோம். சோலாபூர் அருகே உள்ள கர்மாலா என்கிற என்னுடைய கிராமத்தில் சென்ற பிப்ரவரியிலிருந்து மே வரைக்கும் சய்ரத்தை படமாக்கினோம். ஒருபுறம் உஜ்ஜைனி நீர்த்தேக்கத்தால் பசுமையான வனமும் இன்னொரு புறம் வறண்ட நிலமும் உள்ள வித்தியாசமான சூழல். இதை படத்தில் டீஸரில் பார்க்கலாம். படிக்கட்டுகளுடன் கூடிய கிணறைக் கூட அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். இன்னும் ஏராளமான அழகிய இடங்கள் இங்கே உண்டு.
நிதர்சன வாழ்க்கையின் கடுமையான பக்கத்தைச் சொன்ன ஃபாண்ட்ரி, உயர்சாதி பெண்ணை விரும்பும் ஒரு தலித் சிறுவனின் கதை. சய்ரத்தின் காதல் கதை நம்பிக்கையூட்டக் கூடியதா?
காதலைச் சொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. சய்ரத், நடக்கவியலாத ஒரு காதல் கதை. நான் அதற்குள் எதையும் அடுக்க முயற்சிக்கவில்லை. சமூக பிரச்சினைகளாக, சாதி, பால் பேதங்கள் போன்றவை காற்றில் கலந்துள்ளன. வான்வெளியைத் தாண்டி போகாதவரை, ஈர்ப்புவிசை உள்ள எல்லா இடங்களிலும்; இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஒடுக்குமுறை உள்ளது.
ஃபாண்ட்ரியில் எந்த இடத்தில் சாதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது, ஆனால், அதில் சாதி இருந்தது. அதேபோல்தான் சய்ரத்திலும். வெவ்வேறு சாதியைச் சார்ந்த, வர்க்கத்தைச் சார்ந்த இருவர் காதல் வயப்படுகிறார்கள்.
இப்போது வரை நீங்கள் அனுபவித்த கதைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வது பற்றி சிந்தித்ததுண்டா?
நான் ஏன் என்னுடைய கோளத்திலிருந்து விடுபட வேண்டும்? நான் பரந்துபட்டவன் என்பதை நிரூபிப்பதற்காகவா? நான் கிறிஸ்டபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை. இந்த நிமிடம்வரை, என்னுடைய வாழ்நாள் அனுபவங்களும் என்னுடைய கவலைகளும் சாதியையும் மனிதநேயம் தொடர்பான விஷயங்களையுமே சார்ந்திருக்கிறது. நான் இவற்றிலிருந்து விடுபடும்போது, வேறு விதமான படங்களை உருவாக்குவேன்.
சில மாதங்களுக்கு முன்பு ரோஹித் வெமுலா குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தீர்கள். சாதி பற்றிய பொதுமக்களின் விவாதங்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?
என்னுடைய நண்பர் பிரதீப் அவாதெ அந்தக் கவிதையை எழுதியவர், அதை நான் பதிவு செய்திருந்தேன். சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் குறித்து தீவிர விவாதங்கள் நடக்கின்றன. மக்கள் பொறுமை குறைவானவர்களாக இருக்கிறார்கள். யாரும் அடுத்தவருடைய கருத்தைக் கேட்பதைக் கூட விரும்புவதில்லை என்பதே என்னை கவலையடையச் செய்கிறது. அவர்களுடைய முடிவுகளில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். உரையாடல் நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எல்லோரும் ஒரே நாட்டில் வசிக்கிறோம், யவருமே தேச விரோதிகள் அல்ல. எல்லோரும் தேசத்தைப் பற்றி கரிசனத்துடன் இருக்கும்போது, எதனால் பிரச்சினை வருகிறது என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆற்றில் கல் எறியும் வரை, ஆற்றின் உள்ளே சலசலப்பு இருப்பதை நீங்கள் உணர்வதில்லை. அதுபோலத்தான் சாதியும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் பொதுமக்களின் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் அறிய முடிகிறது.
தனிப்பட்ட முறையில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்களா? ஃபாண்ட்ரியின் வெற்றிக்குப் பிறகு நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறீர்களா?
நான் என்னை சாதியற்றவனாகத்தான் கருதுகிறேன். சாதியத்தின் பிரச்சினையை பேசுகிறேன், இதன் மூலம் நாம் தீர்வைத் தேடி நகர முடியும். நான் நட்சத்திரம் அல்ல. ஆனால், என்னை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்; இவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். மக்கள் என்னுடைய பதிவுகளை விரும்புகிறார்கள், பகிர்கிறார்கள். முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் கெட்டவர்களாக பிறப்பதில்லை. சிலருக்கு சாதிய விவாதங்களில் நான் பங்கெடுப்பதில்லை என்கிற கோபம் உண்டு. ஆனால் இப்போது அத்தகைய விவாதங்களில் நான் கலந்துகொள்கிறேன்.
ஃபாண்ட்ரியின் எழுத்தும் இயக்கமும் எப்படி சாத்தியமானது?
என் மனதில் முழு கதையும் வடிவம் பெறாதவரை நான் எழுத அமருவதில்லை. 2011-ஆம் ஆண்டு, ஃபாண்ட்ரியை 40 நாட்களில் எழுதி முடித்தேன். காட்சிகளை எழுதும் போது நான் அழுதுகொண்டே எழுதியிருக்கிறேன். மும்பையில் உள்ள என் சகோதரரின் ஒற்றை அறையில் அடைந்துகொண்டு, நிமிர்வதற்கும் நடப்பதற்கும் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். பெரும்பாலும் என் சகோதரரும் அவருடைய மனைவியும் குழந்தைகளும் உறங்கச் சென்றுவிட்ட பிறகு எழுதுவேன். காலையில் தூங்குவேன். இந்த முழு செயல்முறையும் அழுத்தங்கள் பீறிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஃபாண்ட்ரியின் நிதர்சனம் என்னை காயப்படுத்தியது. இன்று, அது என்னுடைய அடையாளமாகியிருக்கிறது, மரியாதையாகியிருக்கிறது.
ஃபாண்ட்ரியின் எழுத்து செயல்முறை எனக்கு பயிற்சியாக இருந்தது, என்னால் மற்றொரு திரைக்கதையை எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதுதான் என்னை சய்ரத் என்ற வண்ணமயமான இளமை ததும்பும் கதை எழுத உதவியது.
ஃபாண்ட்ரியைப் போல, சய்ரத்திலும் உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள்…
சய்ரத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தொழில் முறை நடிகர்கள் அல்ல. கதாநாயகி ரிங்கு ராஜ்குரு, சைஸ் ஜீரோ நாயகி அல்ல; உற்சாகமான கிராமத்துப் பெண். கதாநாயகன் அக்ஷ் தோசார், கவரக்கூடிய தோற்றமுள்ளவர். சமூக வலைத்தளங்களில் கதாநாயகனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், நாயகியை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இந்தப் பெண்ணை நீங்கள் விரும்புவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். அவள் தான் இந்த படத்தின் ‘ஹீரோ’, சய்ரத்.
என்னுடைய சகோதரனால் கண்டுபிடிக்கப்பட்டவர் அக்ஷ். ரிங்குவை, எனது கிராமத்தில் வைத்துப் பார்த்தேன். நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன், என்னுடைய நடிகர்கள் என்னுடன் தங்குவார்கள். ஒரு நடிகர் சிறப்பாக வெளிப்படும்போது, அதற்குரிய பாராட்டு அந்த நடிகருக்கும் இயக்குநருக்கு சமமாக தரப்பட வேண்டும் என நம்புகிறேன். ஆனால், நடிகர் சிறப்பாக வெளிப்படாதது ஒரு இயக்குநரின் தோல்வியே.
அஜய் அதுல் இசையமைத்திருக்கும் சய்ரத்தின் பாடல்கள் பெரும் கவனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இசையும் உங்களுடைய படத்தில் முக்கியமான அங்கமா?
காதல் படங்கள் எப்போதும் இசையில்லாமல் இருந்ததில்லை. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அவற்றை என்னுடைய வழியில் படமாக்கியிருக்கிறேன். இசை என்று வரும்போது நான் உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளை எடுப்பவன். ஃபாண்ட்ரி முடிந்தபிறகு, அஜய், அதுலுடன் சய்ரத் குறித்து பேசினேன். அப்போது Yad lagli உருவானது. சிம்பொனி, ஆர்கெஸ்டிராவை வைத்து வேறுபட்ட ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள்.
சினிமாவை தொழிலாக ஏன் தெரிவு செய்தீர்கள்?
பட்டப்படிப்புக்குப் பிறகு, என்னுடைய கிராமத்தை விட்டு மாராத்தி பட்டமேற்படிப்புக்காக புனே வந்தேன். ஒரு தொழில்முறை படிப்பை படிக்கவே விரும்பினேன், ஆனால் கட்டணத்தை என்னால் செலுத்த முடியாத காரணத்தால் அது முடியவில்லை. தொலைக்காட்சியில் வேலை பெறலாம் என மக்கள் தொடர்பியல் படித்தேன். Pistulya என்ற குறும்படத்தை எடுத்தபோது எனக்கு நம்பிக்கை வந்தது. ரூ. 12 ஆயிரத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படம் 2011-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது. சினிமா படிக்கும் மாணவனைவிட, திரையரங்கத்தில் வேலைப் பார்ப்பவரைவிட நான் அதிக படங்களைப் பார்த்தேன். என்னுடைய கிராமத்தில் ஒரு நாளில் இரண்டு படங்களைப் பார்ப்பேன். அதனால் படமாக்குவதின் சூட்சுமங்கள் எனக்கு எளிதாக பிடிபட்டன.