
திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான அர்த்தங்களும் அடையாளங்களும் கொண்டது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, அணிசேர்ந்துள்ள திமுக ஆகிய கட்சிகளின் பெயர்களிலும் திராவிட என்ற சொல் இருக்கிறது. ஆயினும் திராவிடக்கட்சிகள் என்று சொல்லும்போது திமுக, அதிமுக ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுவதாகிவிட்டது. என்னைப் பொறுத்தமட்டில் அவற்றை திராவிடக் கட்சிகள் என்று சொல்வதில்லை, திமுக, அதிமுக என்று மட்டுமே குறிப்பிடுகிறேன்
இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான கூறுகளில் இக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு உள்ள பங்கை மறுப்பதற்கில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதை நான் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.
ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான கூறுகள் வரலாறாக, அதாவது பழைய கதையாக மாறிவிடவில்லையா? இன்றைக்கும் இக்கட்சிகள் அந்தக் கூறுகளை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருவதாக உண்மையிலேயே நம்ப முடியுமா?
திராவிட இயக்கம் தமிழகத்தில் பதித்த பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, சாதிய பாகுபாட்டு எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, பார்ப்பணிய எதிர்ப்பு உள்ளிட்டவை இன்று பெரிதும் நீர்த்துப்போயிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களிடையே கணிசமான அளவிற்கு இவை அந்நியப்பட்டுப் போயுள்ளன. இக்கட்சிகள் – குறிப்பாக திமுக – எந்த அளவுக்கு மாற்றுச் சிந்தனைகளை மக்களிடையே கொண்டுசென்றன? வெறும் தலைமை வழிபாட்டிலும், பதவிப் பங்கீடுகளிலுமாக மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடித்துவிடவில்லையா?
இதற்கெல்லாம் இக்கட்சிகள் ஆட்சியதிகாரத்திற்காகச் செய்துகொண்ட கொள்கை சமரசங்கள் முக்கிய காரணம் இல்லையா? அதன் விளைவுதானே பல்வேறு வடிவங்களில் தொடர்கிற பெண்களுக்கெதிரான வன்முறை முதல், சாதி ஆணவக்கொலைகள் வரை? சிறிய பெரிய கோயில்களும் வழிபட வருகிற கூட்டங்களும் பெருகிப்போனது எப்படி? அவற்றின் விழாக்களில் கலந்துக்கொள்வோராக இல்லாமல், நடத்திக்கொடுப்பவர்களாகவே திமுகவின் வட்டாரத் தலைவர்கள் மாறிப்போனது எப்படி? அதிமுக பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
இப்படியான கொள்கை சமரசங்கள் பற்றி முன்பொரு முறை கலைஞரின் நேர்காணலுக்காகக் கேட்டபோது அவர், எந்தக் கட்சிதான் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதான பதிலைத்தான் தந்தாரேயன்றி திமுகவின் சமரசங்கள் சரி அல்லது தவறு என்று சொல்ல முன்வரவில்லை.
ஆட்சி அதிகார ருசியை சுவைத்தபிறகு, சாதிய சக்திகளோடு சமரசம் செய்துகொண்டதன் வெளிபாடு தானே, சாதிய ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும் பெரிய இயக்கங்கள் எதையும் திமுக நடத்தாதது? உடுமலைப்பேட்டை சங்கர் கொலையைக் கூட அதிமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலைமை என்பதாக மட்டும்தானே சித்தரித்தார்கள்?
பார்ப்பணியத்தோடு சமரசம் செய்துகொள்ளவும் தயங்கவில்லை என்பதன் அடையாளந்தானே, பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் தளம் உருவாகத் தோதாக முன்பு அதனுடன் கூட்டணி வைக்க தயங்காதது? இப்போதும் நாடு முழுக்க மதவெறி ஆதிக்க அரசியல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், உணவு உரிமை கூட மதக்கலவர விவகாரமாக்கப்படுகிற சூழலில், புதிய விளக்கங்களோடு பெண்ணடிமைத்தனத்தைக் கெட்டிப்படுத்துகிற போதனைகள் புகுத்தப்படுகிற பின்னணியில் இக்கட்சிகளிடமிருந்து, குறிப்பாக திமுக-விடமிருந்து பெரும் கண்டனங்களோ, உறுதியான எதிர்வாதங்களோ கிளம்பவில்லையே…
கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்மமான தாக்குதல்ரகளின்போது அதை எதிர்த்துக் களம் காண வரவில்லையே…
அரசியல் என்றாலே ஒரு அசூயை உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு எல்லா மட்டங்களிலுமான கூச்சநாச்சமற்ற ஊழல் மிகப்பெரிய காரணம். சம்பாதிக்க வழியிருக்கிறது என்பதால் தானே கீழ்மட்ட உள்கட்சித் தேர்தல்களில் அடிதடி வரைக்கும் போகிறது?
எவ்வித உறுத்தலுமின்றி இயற்கைச் சமநிலைப் பாதுகாப்புகள் அழிக்கப்படுவதற்கு இவ்விரு கட்சிகளுமே உடந்தையாக இருக்கவில்லையா? ரியல் எஸ்டேட் வளைப்பு, மணல் கொள்ளை, குன்றுகள் அழிப்பு… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மறுபடி சொல்கிறேன், இவர்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதையெல்லாம் “நடுநிலை” போலித்தனத்தோடு மேற்கோள் காட்டுவதற்கு இது ஆய்வரங்க மேடையல்ல. குற்றங்களை எடுத்துக்கூறி, மாற்றங்களை வலியுறுத்தி மாற்று வழி அமைப்பதற்கான தேர்தல் களம்.
திராவிட இயக்கம் தொடங்கிய, இக்கட்சிகள் கைவிட்ட பகுத்தறிவு, சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்றவை இன்று கம்யூனிஸ்ட், விசிக தளங்களில் லட்சிய முனைப்போடு தொடர்கின்றன.
இடதுசாரிகள் இப்படியெல்லாம் இக்கட்சிகளை – குறிப்பாக திமுகவை – விமர்சிக்கிறீர்களே என்று கேட்கிற நண்பர்கள், இப்படியான விமர்சனங்களை வைத்தாக வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டீர்களே என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்களேன்…
அ. குமரேசன், தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசிரியர்.