கேரளத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஜிஷா, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.நாராயணன் நாடாளு மன்றத்தில் கிளப்பினார்.கேரள மாநிலத்துக்கே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், கேரள போலீசார்உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தில் உள்ளபெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா(29). ஒரு ஏழைதலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எர்ணா குளம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கூலி வேலைக்குச் சென்றிருந்த ஜிஷாவின் தாயார் ராஜேஸ்வரி இரவு 7.30 மணிக்கு வீட்டிற்கு வந்துபார்த்தபோதே, ஜிஷா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஜிஷாவின் உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், தற்போது கேரள மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. தலித் மாணவியின் கொடூரப் படுகொலைக்கு நீதிகேட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கேரளம் முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகைப் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
புதனன்று, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநிலத் தலைமைச் செயலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், மாணவர் சங்கத்தினரும் எர்ணாகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தடியடி நடத்தப்படும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவி ஜிஷா படுகொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், கேரள அரசு காலதாமதம் செய்வ தாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
தன் மகளுக்கு ஓராண்டாகவே அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்று ஜிஷாவின் தாயார் ராஜேஸ்வரியும் குற்றம்சாட்டினார். கோழிக்கோட்டிலும் கல்லூரி மாணவ – மாணவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியதுடன், ஊடகங்களும் இச்சம்பவத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான கேரள மாநில ஆணையம் தானாக முன்வந்து ஜிஷா விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதே போல மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கேரள மாநில மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து ஜிஷா கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜிஷா வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது. இதனிடையே ஜிஷா, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத் தை மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சி.பி. நாராயணன் எழுப்பினார். மிகக் கொடூரமான இந்தசம்பவம் தில்லி நிர்பயா சம்பவத்துக்கு இணையானது என்று கூறிய அவர், கடந்த வாரம் காசர்கோட்டில் ஒரு பாலியல் வல்லுறவு சம்பவமும், ஜிஷா சம்பவத்திற்கு பின்னரே கூட, திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று மற்றொரு பாலியல் வல்லுறவு சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தார். இது கேரள மாநிலத்துக்கே ஒரு கறும்புள்ளியை ஏற்படுத்தி இருக்கிறது என்றுகுறிப்பிட்ட சி.பி.நாராயணன், கேரள போலீசார் இந்த வழக்கில் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அப்போது பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், ஜிஷா படுகொலைச் சம்பவத்தால் ஒவ்வொரு மலையாளிக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது என்றார். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமையை தடுக்க போதிய சட்டமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா கூறினார். பாஜக எம்.பி. தருண் விஜய் பேசுகையில், கேரளமாநில அரசு இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியதுடன், எம்.பி.க்கள் குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி உண்மை நிலையை அறிய வேண்டும் என்றார்.எம்.பி.க்களுக்கு பதிலளித்துப் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், வியாழனன்று தான் கேரளா செல்வதாகவும், அப்போது பலியான பெண்ணின் குடும்பத் தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட உதவுவேன் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே ஜிஷா பாலியல் வல்லுறவு படுகொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டி, ஜிஷாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறி இருப்பதுடன், ஜிஷாவின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
தீக்கதிர் செய்தி