கருத்துக் கணிப்புகள்; ஆசைகள்; ஆரூடங்கள்!

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர் – சிபிஐ(எம்)

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில்  திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தேமுதிகமக்கள் நலக் கூட்டணிதமாகா அணி ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் பூரண மதுவிலக்கு விவசாயக் கடன் , கல்விக் கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மாற்றம் வேண்டும் என்ற ஆவல் வாக்காளர்களிடம்,  குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களிடம் வெளிப்படுகிறது. இதை எப்படியாவது திசை திருப்பி மீண்டும் இருதுருவ அரசியலை கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான அதிமுகவும், ஆண்டு சுகம் கண்ட திமுகவும் ஆலாய்ப் பறக்கின்றன. அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பல்வேறு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. செய்திகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவது அந்தந்த பத்திரிகைகளின் உரிமை சார்ந்த விசயம். ஆனால் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் இவர்கள் செய்து வரும் கருத்துத் திணிப்பு வேலை என்பது ஊடக நெறிகளுக்கு மாறாகவும், வாக்காளர்களின் சுதந்திரத்தில் வம்படியாக தலையிடுவதாகவும் அமைந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் பல்வேறு பொருத்தமில்லாத விதிகளைக் கூட திணிக்கிறது. ஆனால் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் சில ஊடகங்கள் செய்துவரும் கருத்துருவாக்க முயற்சியை  தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள மறுக்கிறது. நூறு சதவீத வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டுவது நல்லதுதான். ஆனால் அதே நேரத்தில் பணத்தின் மூலமாகவோ, சாதி, மத துவேஷங்களைத் தூண்டியோ வாக்காளர்களை திசை திருப்ப முயல்வது எந்த அளவிற்கு தவறானதோ அதே அளவிற்கு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் திட்டமிட்டு உருவாக்கி ஒரு தோற்றத்தை திணிக்க முயல்வதும் ஆபத்தானது. எனவே தேர்தலுக்கு முன்பு  கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வெளியாகும் அபத்தங்களை தடுக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.

தமிழகத்தில்  எப்போதும் ஆளுங்கட்சியின் ஆதரவு ஏடாகவே நடந்து கொள்ளும் ஒரு நாளிதழ் மற்றும் அதன் தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் கருத்துக்கணிப்பை வெளியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்று அந்த ஏடும், தொலைக்காட்சியும் அறிவிக்கின்றன.  அவர்களது ஆய்வுக்கான அறிவியல் பூர்வ கண்ணோட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆர்வமும், அளவு கடந்த வணிக நோக்கமுமே வெளிப்படுகிறது.

இன்னொரு ஏடு தொலைக்காட்சி ஒன்றுடன் சேர்ந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாக செய்தி வெளியிடுகிறது. அவர்களது முடிவுகள் பெரும்பாலும் எதிர்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக இருக்கும்படி உற்பத்தி செய்யப்படுகிறது. தங்களது ஆய்வு முறையில் உள்ள குறைபாடுகளை அவர்களாலேயே மறைக்க முடியவில்லை. எனவே அவர்களே பல்வேறு சப்பைக்கட்டுகளை கட்டியிருக்கிறார்கள். பல லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கேட்டதாக கூறிவிட்டு மொத்தத் தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் இந்த சதவீத வாக்கு கிடைக்கும் என்று கூறுவது பொருத்தமற்றது.

தற்போது நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கான கேள்விகள் ஒத்தயா? ரெட்டையா? என்ற பாணியிலேயே கேட்கப்படுகிறது. ஒன்று அதிமுக அல்லது திமுக என்பதை தவிர வேறு தேர்வுக்கான வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. இத்தகைய ஆய்வுகளின் போது வாக்காளர்கள் பலரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை என்பதை அவர்களாலேயே கூட மறுக்க முடியவில்லை.

மேலும், மக்கள் பொதுவாக மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று அதிமுக அல்லது திமுக என்று முடிப்பது ஆய்வு அல்ல; சம்பந்தப்பட்ட ஊடகங்களின் விருப்பங்களே ஆகும்.

தமிழகத்தில் தற்போது வெளிவரும் இரு கருத்துக் கணிப்புகள் எதிரும் புதிருமாக இருப்பதிலிருந்தே இரண்டுமே உண்மைக் கலப்பில்லாதவை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே  முடிந்திருக்கிறது. கடந்த பீகார் மற்றும் தில்லி மாநில தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கூறிய நிலையில், முடிவு வேறுவிதமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருதுருவ அரசியலை திணிக்க முயலும், இதற்கு மாற்றாக மக்கள் மத்தியில் உலாவரும் தேமுதிகமக்கள் நலக் கூட்டணிதமாகா அணிக்கான ஆதரவை மடை மாற்றம் செய்யும் வகையிலேயே இந்த கருத்து கணிப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு.அது மாற்றுக் கொள்கையை முன்வைத்துள்ள அணிக்கே சாதகமாக உள்ளது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.