
ஈழ விவகாரத்தில் கருணாநிதியை முன்வைத்து தீவிரமான விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடந்தன. தினமலரும், நியூஸ் செவனும் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக முந்துவதான தோற்றம் வரவும், விவாதம் அந்தப் பக்கம் திசை திரும்பியிருக்கிறது. இத்தகைய விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தீவிர கட்சி அபிமானிகளாக இருப்பதால், ஈழ விவகாரம் யாருக்கு பெரும் நட்டத்தை விளைவித்தது, அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள் யார் என்ற அளவிலேயே அது நிற்கிறது. முதலில், ஈழ விவகாரத்தில் நட்டமடைந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதை இங்குள்ள கட்சிகளின் தேர்தல் வெற்றியோடு தொடர்புபடுத்தி அடித்துக்கொள்வதன் மூலம், அந்தப் போரில் இறந்துபோனவர்களை அவமதிக்கிறோம் என்ற நினைவுடன் அதை விவாதிக்கும் பக்குவம் நமக்கு வரவேண்டும்.
ஈழ விவகாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் உயிர்ச்சேதத்தை அங்கு உண்டு பண்ணியதில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. தன்னெழுச்சியாக கிளர்ந்த விடுதலை உணர்வை, பிராந்திய நலனுக்காக பயன்படுத்திக் கொண்டதும், இயக்கங்களுக்கு இடையேயான பிளவை ஊக்குவித்ததன் மூலம், அவற்றை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பதும், அதன் மூலம் இலங்கையை பிடியில் வைத்திருப்பதும் இந்தியாவின் அரசியலாக இருந்தது. சகோதர இயக்கங்களை எல்லாம் கொன்றொழித்து, தனிப்பெரும் இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்ந்ததற்குப் பின்னால் அவ்வியக்கம் வரித்துக்கொண்ட பாசிஸ மனநிலையும் அதன் தொடர்ச்சியாக அது வல்லரசுகளுடன் பேணிய முரண்பாடான உறவும் காரணம். முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பொறுப்பு கூற முடியாத ஒரு கட்சி கூட தமிழகத்தில் கிடையாது. இந்திய அளவில் காங்கிரசும், பிஜேபியும் நிகழ்ந்த அழிவிற்குப் பொறுப்புடையவர்களே.
மத்திய அரசுகள் எந்த காலத்திலும் ‘தனி ஈழத்தை’ ஆதரித்தவை கிடையாது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, புலிகளை முழுக்கவும் ஒடுக்க முயன்ற காங்கிரஸ் அரசாகட்டும், புலிகளின் யாழ் கோட்டை முற்றுகையைக் கைவிடச் செய்த வாஜ்பாய் அரசாகட்டும், அவர்கள் போராளிகளுக்கு வழங்கிய ஆதரவிற்குப் பின்னால் இருந்தது ஈழ மக்களின் நலன் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது என்பது தான் இந்திய எதார்த்தம்.
இத்தகைய சூழலில் தமிழில் நிலவிய பிராந்தியக் கட்சிகள் என்ன செய்தன என்று பார்த்தால், புலிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழக மக்களை தங்களது வாய் ஜாலத்தின் மூலம் ஒருவித சாகஸ மனநிலையில் வைத்திருந்தன என்பதுதான். போர் என்பதோ, உயிரிழப்பு என்பதோ சாகசத்தின்பாற்பட்டது அல்ல. அதுவொரு தவிப்பு. வாழ்வின் மீதான ஏக்கம். நடந்த ஈழப் போராட்டத்தை ரொமாண்டிசைஸ் செய்யாத கட்சியே தமிழகத்தில் கிடையாது. தமிழக மக்களுக்கு ஈழ மக்கள் மீதான பிணைப்பு தன்னியல்பானது. அதை அரசியலுக்கு பயன்படுத்த முயன்ற விதத்தில் ஒவ்வொரு கட்சியும் அதனதன் அளவுக்கு மக்களை பாழ்படுத்தின. சுரண்டின. எதார்த்தத்திலிருந்து மக்களை விலக்கி வைத்தன. குழப்பின. இப்போது வரை பிரபாகரன் இறந்து போனதை வெளிப்படையாக அறிவித்து முன்நகர முடியாமல் அவை முடங்குவது அதனால் தான்.
ஈழப்போரின் இறுதி கட்டத்தின் போது, “மத்தியில் பிஜேபி ஆட்சி வந்துவிடும், வந்தால் போர்நிறுத்தம் தான்” என்று பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டிய வைகோ, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து போரிட்டால் ஈழத்தை அடைந்துவிடலாம் என்று உள்ளீடற்ற அரசியல் பேசிக்கொண்டிருந்த நெடுமாறன், திடீர் வீரனாக களத்துக்கு வந்த பேப்பர் போராளி சீமான், கருணாநிதியைக் கைகாட்டிவிட்டு, மத்திய அரசுடன் சுமுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ராமதாஸ், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பசப்பிய உதிரி அரசியல் பொறுக்கிகள், போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று முத்துதிர்த்த ஜெயலலிதா என இந்த பட்டியலில் யாருக்கும் கருணாதியை நோக்கி கைநீட்ட எந்த அருகதையும் கிடையாது.
மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, குடும்பத்தினரின் பதவிக்காக அலைந்து கொண்டிருந்த, ஸ்பெக்ட்ரம் ஊழலில் மொத்த கட்சி, குடும்ப, அரசியல் எதிர்காலமும் சிக்கிக்கொள்ள ஒரு அடிமையைப் போல காங்கிரஸ் அரசிடம் சிக்குன்டிருந்த கருணாநிதியின் அப்போதைய செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட் வேண்டியவைதான். ஆனால் அவரை விமர்சிப்பதன் வழியாக தம்மைப் புனிதராக காட்டிக்கொள்ளும் அரசியல் என்பது ஆபாசமானது. ஈழ விவகாரத்தை தமிழக அரசியலின் வெற்றி எண்ணிக்கையை வைத்து விவாதிப்பது என்பதும், அதன் மூலம் முந்தைய தேர்தல் இழப்புகளுக்கு உரிமை கோருவது என்பதும் மானுட விழுமியங்களுக்கு எதிரானது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஈழ மக்களை மீண்டும் கைவிடும் அற்பத்தனம் அது.
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.
வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.
தமிழீழ விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் அரங்கம் எவ்விதம் உள்ளதென்பதை சுட்டிக்காட்டிய முறை மிகவும் சரியானதாகவும் புரியக்கூடியதாகவும் உள்ளது. தமிழர்மீதான ஒடுக்குமுறை ஒழியவேண்டும் என்பதில் நாட்டமுள்ள அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை. ஆனால் இந்நிலைமைக்கான அடித்தள காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இக்கட்டுரை மௌனமாக உள்ளது. விவரிக்கத் தேவையில்லை. விவரித்தால் அது இன்னோர் கட்டுரையாக மாறிவிடும். ஆனால், மெல்லிதாக சுட்டிக்காட்டியிருக்கலாம். காரணங்களைப்பற்றிய ஆய்வுக்கு இதையோர் முன்னுரையாகக் கொண்டிருக்கலாம். ஏனெனில் தனிநபர்களின் குணவியல்புகள்தான் இவற்றிற்கான காரணம் என்றோர் அர்த்தம் தொனிக்கின்றது. காரணங்கள் என்ன என்பதை ஆசிரியரே எழுதினால் நல்லது.
LikeLike