கடந்த அரை நூற்றாண்டு காலஆட்சியில், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக- திமுக கட்சிகள் எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி தொகுதி வேட்பாளர் எம்.ஜெயசீலன் குற்றம் சாட்டினார்.தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி தொண்டர்களுடன், வேட்பாளர் எம்.ஜெயசீலன் செவ்வாயன்றும் தொடர்ந்து புள்ளம்பாடி ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக, கல்லக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம், இடங்கிமங்கலம், இ.வெள்ளனூர், நஞ்சை சங்கேந்தி,ஐயனார்புரம், புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், நல்லூர், தொரணிபாளையம் மற்றும் உக்கூர் ஆகிய பகுதிகளில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து உரையாற்றினார்.
“கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக அரசுகளால் வெள்ளனூர் பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் ஏற்றம் பெறவில்லை. இப்பகுதி விவசாயிகள் சாகுபடி பணிகளை ஒருவித அச்சத்துடனும், பதற்றமான மன நிலையுடனுமே துவக்கும் அவலம் உள்ளதாகத் தெரிவித்தார்.நிலத்தை உழுவதற்கு உரிய வசதிகளோ, நடுவதற்கு போதிய தரமான விதை நெல்லோ, விதைகளோ கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அதைவிட பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. உர மானியமும் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. இவ்வளவு தடைகளையும் தாண்டி அறுவடை கட்டத்திற்கு போனால், நெல், கரும்பு, வாழை, பருத்திக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை.இந்த ஒன்றியத்தின் முகப்பில் இருந்து பெருங்குளத்தூர் வரை பாசனவசதி பெறும் பெருவளை வாய்க்காலை, அரை நூற்றாண்டு கால திமுக – அதிமுக அரசுகள் சீரமைக்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதிக்கு போதிய நீரின்றி தவிக்கும் நிலையிலேயே உள்ளனர்.
ஒரு நல்ல அரசின் வேலை என்பது, மக்களின் அடிப்படைவசதிகளான சுகாதாரமான குடிநீர், தரமான இலவசக் கல்வி, மருத்துவம், சாலை வசதி,விவசாய பொருட்களுக்கு கட்டுபடியான விலை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏரி, குளங்கள் பராமரிப்பு, நிலத்தடி நீரை சுரண்டும் மணல் கொள்ளையை தடுப்பது ஆகியனவாகும்.
ஆனால் இங்கு பலமுறை பல்வேறுபோலியான வாக்குறுதிகளை அளித்து சட்டமன்றத்திற்கு சென்ற அதிமுக- திமுக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஒருமுறையாவது விவாதம் நடத்தி இருப்பார்களா?” என்று ஜெயசீலன் கேள்வி எழுப்பினார்.
மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீரவும், விவசாயிகள் வாழ்க்கையில் வளம்பெறவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடவும், கடந்த 25ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சார்பில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி, மணல் கொள்ளையைத் தடுக்கும் போராட்டத்தில் சிறையும் சென்றுள்ள தனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் ஜெயசீலன் கேட்டுக் கொண்டார்.
210 சதுர அடியில் தனது 76 வயது தாய், மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார் CPIM லால்குடி வேட்பாளர் ஜெயசீலன் என சமீபத்தில் தி ஹிந்து (ஆ) நாளிதழ் இவரைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது.
தீக்கதிர் செய்தி துணையுடன்