
இன்றைய தி இந்து நாளிதழ் (4/5/2016) நடுப்பக்கத்தில், “தார்மிகம் எனும் அறம்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், தோழர்கள் வி.பி.சிந்தன், டபிள்யூ.ஆர்.வரதராஜன் மற்றும் ஒரு இளைஞர் பற்றி குறிப்பிட்டுள்ளார் (படம்). அந்த இளைஞர் என்னதான் ஆனார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதற்கு எழுதப்பட்ட குறிப்புகள் ஏதும் இல்லை. சமஸ் அந்த உரையாடலை உடன் இருந்து கேட்கவும் “இல்லை”. செவி வழியாக கேள்விப்பட்ட உண்மையைத்தான் எழுதியுள்ளார். சமஷுக்கு சொன்னவர்கள் அவர் யார் என்பதை சொல்லித்தான் இருப்பார்கள்.
அந்த இளைஞர் தன்னை சி.பி.ஐ.(எம்) கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில் வாலிபர் இயக்கம் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியாக தொடங்குவதில் சென்னை-செங்கை மாவட்டத்தில் செயலூக்கமுள்ள பங்காற்றி, தமிழகம் முழுதும் பயணித்து வாலிபர் இயக்கத்தில் புறக்கணிக்க முடியாத அமைப்பாக உயர்ந்து நிற்கிற, “இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின்” அமைப்பாளர்களில் ஒருவர்.
சென்னை- செங்கை மாவட்டக்குழு உறுப்பினர், சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்று படிப்படியாக கட்சிக்குள் பொறுப்புகள் வழங்கப்பட்டு செயலாற்றிய தீக்கதிர் சென்னை பதிப்பின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் தான் அந்த இளைஞர். சிறந்த கவிஞர், எழுத்தாளர், சில நூல்களையும் எழுதியவர். தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர். சிறந்த மேடைப் பிரசங்கியும் கூட. இன்றும் தீக்கதிரில் தொடர்ந்து எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் கட்சின் குரலாக பங்களிக்கிறார். குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார்.
பத்திரிக்கையை படித்தவுடன் தொலைபேசியில் அழைத்தேன், பழனியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன் என்றார், தகவல் சொன்னேன். படிக்கிறேன் என்றார். படித்திருப்பார். இதையும் அவரும் எழுதிய சமஸும் படிப்பார்கள். நீங்களும் படியுங்கள்.
ஒரு இனவாத கருத்தை முன்வைத்த இளைஞன் இப்போது என்னவாக, எப்படியாக மாறுதல்களுக்குள்ளாகி தீவிர சாதி மறுப்பு, இனவாத எதிர்ப்பு செயற்பாட்டாளனாக வளர்ந்துள்ளார் என்பர்தையும் குறிப்பிட்டிருந்தால் கட்டுரையின் தொடர்ச்சியாக இருந்திருக்கும். சாதிய ஆணவ வன்கொடுமைகளை இளைஞர்கள் பங்கேற்புடன் எதிர்கொள்ள அறைகூவும்.