அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!

“மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிடுவதற்காக ஏராளமான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன. உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வார்க்கப்படும் தோசைகளைப் போல, இந்த கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் தங்களின் அரசியல் முதலாளிகளின் விருப்பப்படி கருத்துக்கணிப்பு முடிவுகளை தயாரித்து வெளியிடுகின்றன. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்” கருத்துக் கணிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை.

முழுவதும்…

“சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஒரு காலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக இருந்தன. அதைப் பயன்படுத்திக் கொண்டு லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள் என்ற பெயரில் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது கருத்துக்கணிப்பு என்ற கலையை இழிவுபடுத்தும் செயலாகும். அதேபோல், தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளின் பிடியில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடக்கும் ஊடகங்களும் தொடர்ச்சியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு தங்கள் அரசியல் எஜமானர்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும், இன்னும் சில ஊடகங்கள் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் திமுகவின் நிர்வாகிகள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் திமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் உண்மை மட்டும் வெளியாகவில்லை.

அனைத்து ஊடகங்களும் தங்களை நடுநிலையானவையாகவே காட்டிக் கொள்கின்றன. ஆனால், அந்த ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒன்றுக்கொண்டு முரணாக உள்ளன. அனைத்து ஊடகங்களும் நியாயமாகவும், நேர்மையாகவும், கருத்துக்கணிப்புக்கான விதிகளின்படியும் கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தால் அதை உண்மையாக இருந்திருக்கும். உண்மை எந்த ஊடகங்களால் சொல்லப்பட்டாலும் ஒரே மாதிரியாகத் தான் இருந்திருக்கும். ஆனால், சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அண்ணா அறிவாலயத்திலும், வேறு சில ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் அம்மா ஆலயத்திலும் எழுதப்படுவதால் தான் அவை முன்னுக்குப்பின் முரணாக அமைந்திருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றனவே தவிர, மொத்தம் எத்தனை பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன; முடிவுகள் எந்த அடிப்படையில் தொகுக்கப் பட்டன என்பதை எந்த ஊடகமும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வெளியிடவில்லை. கருத்துக்கணிப்பு முடிவுகளிலும், அது மேற்கொள்ளப்பட்ட விதத்திலும் சிறிதளவு கூட வெளிப்படைத்தன்மை இல்லை. அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் எனக் கூறும் ஊடகங்கள் தங்களுக்கு மனசாட்சி இருந்தால், தங்கள் கருத்துக்கணிப்புகளின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு ஊடகங்களுக்காக இந்த கருத்துக்கணிப்புகளை யார் நடத்தினார்கள்?, எங்கெங்கு எந்தெந்த தேதிகளில் இவை நடத்தப்பட்டன?, பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அதில் வாக்களித்தோரின் முகவரி மற்றும் கையெழுத்துடன் பொதுமக்கள் ஆய்வுக்கு வைக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு எந்த ஊடகமும் பதில் கூறாத நிலையில், இந்த கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை என்பது கொடிய நாகப்பாம்பை நல்லப் பாம்பு என்று சொல்லப்படுவதில் உள்ள நம்பகத்தன்மைக்கு இணையானதாகவே இருக்கும். தில்லி, பிகார் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. ஆனால், மக்கள் தீர்ப்பை அந்தக் கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது திராவிடக் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் தீர்மானிக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒருபோதும் பலிக்காது. இதை நம்பி மக்களும் ஏமாற மாட்டார்கள்.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இரு திராவிடக் கட்சிகளும் துடிக்கின்றன. இதற்காக கோடிகளை வாரி இறைக்கின்றன. அதன் விளைவு தான் இரு கட்சிகளுக்கும் சாதகமான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவருகின்றன. அரசியல் எஜமானர்கள் கூறுவதைப் போல கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் ஊடகங்கள், அவை சாத்தியமானவையா? என்பதை ஆராய்வதில்லை. 5 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை மக்கள் கோபத்துடன் துரத்தியடித்தனர். இதற்குக் காரணம் பூச்சி மருந்து ஊழல், பழைய வீராணம் ஊழல் தொடங்கி உலகையே அதிர வைத்த 2ஜி ஊழல் வரை அனைத்து ஊழல்களின் கதாநாயகன் தி.மு.க. என்பது தான். அதுமட்டுமின்றி, திமுக அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு, நிலம் அபகரிப்பு, திரைத்துறையில் கலைஞர் குடும்பத்தினரின் ஆதிக்கம் ஆகியவையும் தான். திமுக மீதான இப்புகார்கள் அனைத்தும் இன்னும் அப்படியே உள்ளன. அதுமட்டுமின்றி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள், குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாது என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அதிமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஊழல் ஆட்சியில் மக்கள் விழி பிதுங்கியிருக்கின்றனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மக்கள் அஞ்சுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது மீண்டும் இந்த இரு கட்சிகளின் ஒன்றையே மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்று தமிழக ஊடகங்கள் எந்த அடிப்படையில் கூறுகின்றன? இன்றைய நிலையில் தமிழகத்தின் 3 மிக முக்கியமான பிரச்சினைகளாக பார்க்கப்படுவது மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவை தான். இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. இதை மக்களும் ஏற்றுக்கொண்டு இந்த முறை அன்புமணி இராமதாசுக்கு வாய்ப்பளிக்கப் போவதாக வெளிப்படையாகவே கூறுகின்றனர். ஆனால், மக்களின் இந்த உணர்வை மறைக்க வேண்டும் என்பதற்காக இரு திராவிடக் கட்சிகளும் ஊடகங்களை வளைத்து பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. இது பெருந்தவறு. இத்தகைய கருத்துத் திணிப்புகளை தமிழக மக்கள் நம்பக் கூடாது… ஒருபோதும் நம்பவும் மாட்டார்கள்.

இத்தேர்தலில் வளர்ச்சி, முன்னேற்றம், தமிழகம் எதிர்கொண்டு வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான செயல்திட்டம், மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்கு துல்லியமான தீர்வு ஆகியவற்றை முன்வைத்து பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த ஓராண்டாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மதுவையும், ஊழலையும் ஒழித்து புதியதோர் தமிழகத்தை அமைக்கப்போவதாகவும் மக்களிடம் கூறி வருகிறார். இதனால் மருத்துவர் அன்புமணி மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இளைஞர்கள், இதுவரை வாக்களிக்காமல் இருந்து முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் நடுநிலையாளர்கள், மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டும் தான் முடியும் வெற்று முழக்கமிடும் மாற்றுக் கட்சிகளால் முடியாது என்று உறுதியாக நம்பும் பெண்கள் என அனைவரின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியமைக்கப் போவது உறுதி.

நடுநிலை என்பது செய்திகளில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் சமவாய்ப்பு அளிப்பதல்ல; மாறாக 50 ஆண்டுகளாக சீரழிக்கும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவாக இருப்பது; நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப்போரில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவை தமிழகத்து ஊடகங்கள் தான். இப்போதைய கொள்ளையர் ஆட்சிக்கு எதிராக அத்தகைய எழுச்சியை ஏற்படுத்த ஊடகங்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை… எழுந்துள்ள எழுச்சியை அடக்காமல் இருந்தாலே போதும்.

நமது முதன்மை இதிகாசங்களான இராமயணமும், மகாபாரதமும் தர்மத்தை வலியுறுத்துகின்றன. மற்ற தொழில்களைவிட பத்திரிகைத் தொழில் மிகவும் நேர்மையாகவும், தர்மத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் தான் அதற்கென தர்மம் இருப்பதை குறிக்கும் வகையில் ‘பத்திரிக்கை தர்மம்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை ஊடகங்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது. இன்று உலக ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. ஊடகங்களும், ஊடகத்தினரும் நியாயத்தின் பக்கம் நின்று, பத்திரிகை தர்மத்தை பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.