திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திருவாரூரில் தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டியது குறித்தும் மதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு இடங்களில் பேசிவிட்டு, அடுத்து சீர்காழி தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் உமாநாத், மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் அருள்செல்வன், பூம்புகார் த.மா.கா. வேட்பாளர் சங்கர், நன்னிலம் சிபிஎம் வேட்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோரை ஆதரித்துப் பேசிவிட்டுத் திருவாரூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாசிலாமணி அவர்களை ஆதரித்துப் பேசுவதற்காகப் பிரச்சார வேனில் விரைந்தேன்.

அங்கே பேசிவிட்டு, அங்கிருந்து இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி, அங்கிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னார்குடித் தொகுதிகளில் பத்து மணிக்குப் பிரச்சாரத்தை முடித்தாக வேண்டும் என்பதால் வேகமாகச் சென்று கொண்டு இருந்தோம்.

திருவாரூக்கு முன்பு ஒரு வளைவான திருப்பத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் கூடி நிற்கக் கண்டேன். அங்கே இருட்டாக இருந்தது. எனவே, அவர்கள் யார் என்பதைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அருகில் நெருங்கும்போதுதான், அவர்கள் கருப்புக் கொடித் தடிகளோடு என்னைத் தாக்க வருவதைப் பார்த்து, எனது வாகன ஓட்டுநர் துரை சாமர்த்தியமாக அந்த வளைவில் வலது பக்கமாக வண்டியைச் செலுத்தி மிகுந்த வேகத்தில் சென்றார். அப்போது அவர்கள் எறிந்த தடிகள் எங்கள் வாகனத்தின் மீது வந்து விழுந்தன.

என் வாகனத்திற்கு முன்னால் சென்றுகொண்டு இருந்த பிரச்சார வாகனத்தில் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மதிமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் மகேஷ் அவர்களது பிடரியில் ஒரு தடி விழுந்ததால் அவரது பிடரி வீங்கி உள்ளது. அந்த அடி இன்னும் கொஞ்சம் பலமாக விழுந்து இருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். தொடர்ந்து என் பின்னால் வந்த வாகனங்கள் மீது தடிகளை வீசி இருக்கின்றார்கள். எங்கள் அணிவகுப்பில் இருசக்கர வண்டிகளில் வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னையா என்ற செல்லத்துரை, முகமது ஈசாக் ஆகிய இரு தோழர்களுக்கும் தடியடி விழுந்துள்ளது. நல்லவேளையாக, இரத்தக் காயம் ஏற்படவில்லை.

நான் திருவாரூருக்குச் சென்று அங்கே பேருந்து நிலையத்திற்கு முன்பு உரையாற்றும்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தேன். அவருக்கு வாக்கு அளிப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றேன்.

அண்ணன் கலைஞர் அவர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணிக்கொண்டுதான் சென்றேன். ஆனால், திமுக தோழர்கள் கருப்புக்கொடி காட்டியதால் நான் பயந்து கொண்டு கலைஞரைப் பற்றிப் பேசாமல் போய்விட்டேன் என்று நமது அணித் தோழர்களிடம் பரிகாசம் செய்வார்கள் என்று கருதியதால் , காவிரிப் பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர்களுக்குக் கலைஞர் செய்த துரோகங்களைக் கூறிவிட்டு, கலைஞருக்கு ஓட்டுப் போடுவது காவிரி மண்ணுக்குச் செய்யும் துரோகம் என்றேன்.

எங்கள் அணித் தோழர்கள் தாக்கப்பட்டது குறித்தும், என்னைத் தாக்க முயற்சித்தது பற்றியும் எனது உரையில் குறிப்பிடவே இல்லை. பதற்றம் அதிகமாகி பலத்த மோதல் ஏற்பட்டு விடும் என்று கருதியே அதனை நான் தவிர்த்தேன். பின்னர் விசாரித்த போதுதான் முழு விவரம் தெரிய வந்தது. என்னைத் தாக்குவதற்கு அவர்கள் தேர்ந்து எடுத்த இடத்தில் விளக்குகளை முன்கூட்டியே அணைத்து விட்டார்கள். சாலையின் பக்கவாட்டில், இருட்டுக்குள் நீண்ட நேரமாக மறைந்து இருந்திருக்கின்றார்கள். அருகில் நெருங்கும் போது எங்கள் கார்களின் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் எதுவும்இல்லை.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், திருவாரூர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்துதான் இவர்கள் தடிகளோடும், கொடிகளோடும், ஆயுதங்களோடும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வேகவேகமாக விரைந்து திருத்துறைப்பூண்டிக்குள் நுழையும் போது ஒன்பது மணி ஆகி விட்டது. அங்கே இருபது நிமிடங்கள் பேசிவிட்டு மன்னார்குடிக்குள் நுழையும்போது 9.52 ஆகி விட்டது. அங்கே ஏழு நிமிடங்கள் பேசி பிரச்சாரத்தை நிறைவு செய்தபின், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் அவர்களையும், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் பாலச்சந்திரன் அவர்களையும் திருவாரூருக்குச் சென்று தாக்கப்பட்ட தோழர்களைப் பார்த்து ஆறுதல் கூறி, தேவையான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு திருச்சிக்கு வந்தேன். கடந்த வாரம் விபத்தில் சிக்கி நினைவு இழந்த நிலையில் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான மோகன்ராஜ் அவர்களைச் சில தினங்களுக்கு முன்பு ஒருமுறை நள்ளிரவு இரண்டரை மணி அளவில் பார்த்துவிட்டுச் சென்றேன். இன்று அவரை இரண்டாவது முறையாகப் பார்த்துவிட்டு, மருத்துவர்கள், உறவினர்களிடம் பேசிவிட்டு, அவருடன் காயப்பட்டுள்ள சுரேந்தர் அவர்களையும் பார்த்து உடல் நலம் விசாரிவிட்டு புறப்பட்டேன்.

கடந்த 46 ஆண்டுகளாக இளையரசனேந்தல் அருகில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் எனக்கு அரசியலில் மிகவும் பக்க பலமாக இருந்துவந்த சின்ன கந்தசாமி அவர்கள் உயிர் நீத்த செய்தி கேட்டு அங்கே சென்று துக்கத்துடன் அவரது சடலத்துக்கு அதிகாலை 4.30 மணி அளவில் மாலை வைத்து மரியாதை செலுத்திவிட்டு கலிங்கப்பட்டிக்கு வந்து சேர்ந்தபோது பொழுது விடிந்துவிட்டது.

இன்று காலையில் இருந்து எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நடந்ததைக் கேட்டு மிகவும் வருந்தினார்கள். தோல்வி பயத்தால் திமுகவினர் என் மீது வன்மம் கொண்டு இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டு ஒரு மோதலை உருவாக்க முற்படுவதால், அதற்கு இடம் கொடுக்காதவாறு, கழகக் கண்மணிகளும், கூட்டணிக் கட்சிகளின் தோழர்களும் அமைதி காக்க வேண்டுகிறேன்”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.