
பெயரில் சாதி அடையாளங்களைத் துறக்க வைத்ததில் பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பங்குண்டு. பங்கு என்ன பங்கு. செய்ய வைத்ததே அவைதான். பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக்கொள்ளும் ‘பின்னொட்டுக்கு’ விடை கொடுக்க வைத்தது ஒரு சாதனை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் நிலவும் பெயர்களைப் பார்த்தால் தெரியும்.
‘பெயரில் இருந்து சாதியை நீக்கிவிட்டதால் சாதி நீங்கி விட்டதா, சமத்துவம் வந்துவிட்டதா’ என்று கேட்டால் இல்லைதான். அது மட்டுமே போதாது தான். ஆனால் பெயரில் ‘சாதி நீக்கம்’ என்பது ஒரு குறியீடு. பெயரில் சாதியைத் துறக்க முடியும் என்பது, இப்போது எளிதாகத் தோன்றுகிறது. ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அது எத்தகைய அரசியல் முன்னெடுப்பு என்பதை வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால்தான் புரியும். சனாதனவாதிகள் எவ்வளவு சங்கடப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
இப்போதும் கூட தமிழிலக்கியங்களை அருவியாகப் பொழியும் நெல்லை கண்ணனின் உரையைக் கேளுங்கள். கண்ணதாசனை செட்டியார் என்றும், பாரதியை ஐயர் என்றும் அவர் சுட்டிக்கொண்டே இருப்பதை உணரலாம். அவரது சாதிச்சுட்டுக்கு காந்தியாரும் கூட தப்பவில்லை. காந்தி வாணியசெட்டியார் என்பதை குறிப்பிட்டு பேசுகிறார். ஆனால் கக்கன் என்று வருகிறபோது ஏன் இந்த சாதிச்சுட்டு வரவில்லை?, கக்கனைப் பறையனென்றோ காமராஜரை நாடாரென்றோ பெருமையாக சொல்வதைத் தடுப்பது எது?
“சாதி என்பது இழிவு அல்ல; அது ஒரு அடையாளம். பழங்காலத்தில் அப்படித்தான் இருந்தது. அந்தந்த சாதியும் அதனதன் மரியாதையோடு நிலைத்திருந்தன. சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்றவை எல்லாம் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்த சீரழிவுகள்” என்பது தான் சாதிய ஆதரவாளர்கள் சொல்வது. இதுதான் ஆண்ட சாதிப் பெருமையாக பரிமளிக்கிறது. இங்கு ஆண்ட சாதி பெருமிதத்தை பள்ளர்களும், பறையர்களும், வள்ளுவர்களும் கூட கோருகிறார்கள். தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்களின் சாதிப் பெருமிதங்கள் உலகம் அறிந்தது. எனக்குத் தெரிந்து ராஜராஜ சோழன் வன்னியன், தேவன் மற்றும் வேறு சில சாதியையும் சேர்ந்தவன். ஆமாம். அவ்வளவு பேர் அவனை உரிமை கொண்டாடுகிறார்கள். அவனது காலத்தில், கோவிலைச் சுற்றி குடியமர்த்தப்பட்டிருந்த வேசைகள் எந்த சாதி என்பதில் மட்டும் இறுக்கமான மவுனம் காப்பார்கள்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது ”அந்தந்த சாதியும் அதனதன் மரியாதையோடு நிலைத்திருந்தன” என்ற சொல்லாடலைத்தான். ஒரு வேளாண் சாதியும், வணிக சாதியும் ஒன்றல்ல. “அதனதன் மரியாதையோடு” என்ற வார்த்தை சுட்டுவது, சமூகப் படிநிலையில் அதன் இடத்தைத்தான். இங்கு இடம் என்பது “புனிதத்துடன்” தொடர்பு கொண்டது. அதனால் தான் சக்கிலியனின் இடமும் பார்ப்பனனின் இடமும் மலைக்கும் மடுவுக்குமானது. மந்திரம் கற்கும் ஒரு பார்ப்பனக் குழந்தையும், மாட்டை அறுத்து கூறு போடும் ஒரு சக்கிலியக் குழந்தையும் அதைக் கற்றுக்கொள்ள செலவிடும் நேரமும் உழைப்பும் ஒன்றுதான். அப்படியே இடம் மாற்றி வைத்தால், ஒரு பார்ப்பனன் மாட்டை அறுப்பவனாகவும், ஒரு சக்கிலியன் மந்திரம் ஓதுபவனாகவும் ஆகமுடியும். ஆனால் அப்படி நடக்கும் சாத்தியம் உண்டா? இல்லை. அது ஏன்? அதுதான் பிறப்பால் வரும் தகுதி. இதை நான் சொல்லும்போது, அது எப்படி மாடு அறுப்பதும், மந்திரம் ஓதுவதும் ஒன்றாகும் என்று உங்கள் மனது கேள்வி எழுப்பினால் எனது பதில், இரண்டுக்கும் தேவை பயிற்சி. அர்ப்பணிப்பு. அவ்வளவே. இதொன்றும் political correctness பார்வையல்ல. எதார்த்தம்.
ராஜாஜிக்கு பிறப்பால் வரும் தகுதி காமராஜுக்கும் கக்கனுக்கும் கிடையாது. ராஜாஜி தன்னை பிராமணர் என்று அறிவித்துக்கொள்ளும் போது, அவர் விரும்பாவிட்டாலும் இந்த பிறப்புத் தகுதியையும் சேர்த்தே அறிவித்துக்கொள்கிறார். காமராஜரும் கக்கனும் தங்களது சாதியை அறிவித்துக்கொள்கிறபோது தங்களது பிறப்பின் போதாமையையும் சேர்த்தே அறிவித்துக்கொள்ள நேர்கிறது. அதனால் தான் சாதியைத் துறக்க நேர்கிறது. சாதியைத் துறப்பதன் வழியாக ஒருவன் இழிவைத் துறக்கிறான். இன்னொருவன் பெருமிதத்தைத் துறக்கிறான். இரண்டும் ஒன்றல்ல. இதையே வேறு வகையில் பார்த்தால், நான் பிராமணன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒருவன், வேறு வகையில் “நீ என்னைவிடத் தாழ்ந்தவன்” என்று மற்ற சாதிகளிடம் சொல்கிறான். அவன் சாதி வேறுபாடு பாராட்டாதவன் என்கிறபோதும் கூட. இதுதான் “நான் பத்தினி மகன் என்று நீ என்னிடம் சொல்வது என்னை வேசிமகன் என்று சொல்வதாகாதா” என்று கேட்க வைக்கிறது.
நான் சொல்வதெல்லாம் காலம் காலமாக புழக்கத்தில் உள்ள விவாதங்கள் தான். வால்யூம் வால்யூமாக பெரியாராலும், அம்பேத்கராலும் எழுதிக் குவிக்கப்பட்டிருப்பவைதான்.
“தேவர் மகன்” என்று ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்படும்போது, தேவர் என்ற சொல் திரையில் உச்சரிக்கப்படும்போது, பார்வையாளர்கள் எழுப்பும் உன்மத்தக் கூச்சலில் இருப்பது “நான் ஆண்ட சாதி” என்ற எக்காளம் தான். அதன் மறைபொருள் “நீ என்னால் ஆளப்பட்டவன்” என்று இன்னொரு தரப்பிடம் சொல்வது தான். எந்த ஒன்றையும் romanticise செய்வதன் அபத்தத்தை ஒரு கலைஞன் செய்ய முடியாது. அது கலைக்கு எதிரான செயல்பாடு. குருதிப்புனலில் நேர்மையான மத்தியதர வர்க்க அதிகாரி ஒருவனை முன்னிறுத்தி அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதும், தேவர் மகனில் சாதிவெறியை romanticise செய்ததும் கலைக்கு எதிரான செயல்கள் தான்.
“சபாஷ் நாயுடு” என்று ஒரு படத்துக்கு பெயர் வைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். சரிதான்.
கீழவெண்மணியில் தலித்துகளை குடிசையில் வைத்துக் கொளுத்திய “கொடூர நாயுடுகளைப்” பற்றி ஒரு முணுமுணுப்பு கூட வராத திரைத்துறையில், பிரச்சார மேடைகளில் பொம்மைகளைப் போல அமர்ந்திருக்கும் ஆண்டசாதி தேவ, வன்னிய, கவுண்ட, நாயுடு அடிமைத்தனத்தை பகடி செய்து ஒரு திரைப்படம் கூட எடுக்க முதுகெலும்பற்ற படைப்பாளிகள் நிறைந்த உலகில், “சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம் தான். கலகமோ பகடியோ அல்ல.
இந்தப் பெயர் விவாகரத்தில் தங்களது வருத்தத்தைப் பகிர்பவர்களை “போலி முற்போக்காளர்கள்” என்றெல்லாம் நக்கலடித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். போலிக்கலைஞனுடன் அந்த முற்போக்காளர்கள் மல்லுக்கட்டுவதால் அப்படிச் சொல்கிறார்கள் போல. இருந்துவிட்டுப் போகட்டும்.
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.
வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.