திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை போரின் போது தமிழர்களுக்கு துரோக இழைததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார். இது பற்றி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது, “சீமான் என்கிற யாரோ ஒரு பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார் இளங்கோவன்.
இளங்கோவனின் பேச்சுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த சீமானிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு சீமான், “இளங்கோவன் நான் மதிக்கிற தலைவர். அம்மையார் ஜெயலலிதா மீதும், தன் கட்சியில் உள்ள அம்மையார் விஜயதரணி மீதும் கூட அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பின்னர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இளங்கோவனின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பேசியதால் நான் ஒன்றும் சிறுமைப் பட்டுப் போய்விடவில்லை. காயப்படுத்த சொற்கள் ஒன்றும் கத்திகள் அல்ல.
‘உன்னை விமர்சிக்கிறவர்களுக்கு உண்மையாக இருப்பதற்கு போராடுவதைக் காட்டிலும்; உன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு உண்மையாகப் போராடு’ என புரட்சியாளர் லெனின் சொல்லியிருக்கிறார்.” என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேரா.அருணனை ‘போய்யா லூசு’ எனப் பேசிய சீமான், பக்குவப்பட்டவராய் இளங்கோவனின் விமர்சனத்தை எடுத்துக்கொள்கிறார். ஆனால், இளங்கோவனோ நாளுக்கு நாள், தன் பேச்சு குறித்த எவ்வித சுய விமர்சனமும் செய்துகொள்ளலாமல் தொடர்ந்து மற்ற தலைவர்களை அவதூறாகப் பேசிவருகிறார்.