
அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய வேண்டும். பெரியாரின் பிள்ளையாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த பகுத்தறிவாளனுக்கு பெரியார் மூலம் தமிழகத்தில் விளைந்த இந்த சாதி செருக்கை பறைசாற்றும், பெயருக்குப் பின்னே சாதியை எழுதும் வழக்கத்தை ஏன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய கால சூழலில் யாரிடமும் பெயருக்குப் பின்னே சாதியை எழுதும் வழக்கம் இல்லை. கமல் போன்றவர்கள் தங்களின் படங்களின் மூலம் அதனை மீண்டும் சாதித்துக் காட்டத் தொடங்குகிறார்கள்.
எந்த விதத்திலும் இத்தகைய தலைப்பை அனுமதிக்கவே முடியாது. கமலுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. ஆனாலும் உடனடியாக தன் மீதும் புதியப் படத்தின் மீதும் ஒரு பெரும் வெளிச்சம் விழவேண்டும். போராட்டங்கள் வெடிக்க வேண்டும். அதையே படத்திற்கான ப்ரோமொசனாக மாற்ற வேண்டும் என்கிற மோசமான உத்தியைத்தான் கமலஹாசன் தொடர்ச்சியாக செய்து வருகிறார். சபாஷ் நாயுடு என்கிற இந்த பெயரை கமலஹாசன் உடனடியாக மாற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக சாதி சார்ந்த தலைப்புகளை வைத்து அதனை படத்திற்கான மார்க்கெட்டிங் உத்தியாக பயன்படுத்தும் கமலஹாசனின் போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டிய தருணம் இது. அதுவும் ஆணவக்கொலைகள் பெருகிவரும் காலக்கட்டத்தில் கமலஹாசன் எத்தனை பாசிஸ்டாக இருந்தால் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பார். பார்ப்பனர்கள் எப்போதும் மற்ற சாதியினருக்குள் பிரச்சனை ஏற்படுத்தி, அதில் ஆதாயம் தேடுவார்கள் என்பதுப் போலவே சாதிப் பெயர்களை கமலஹாசன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். தமிழ் சினிமாவின் டெக்னிக்கல் பாசிஸ்ட் கமலஹாசன்.
அருண், சினிமா செயல்பாட்டாளர்; படச்சுருள் என்ற பெயரில் சினிமா இதழையும் சினிமா தொடர்பான புத்தகங்களுக்கென்று பிரத்யேகமாக ப்யூர் சினிமா என்ற புத்தக் கடையையும் நடத்தி வருகிறார். மாற்று சினிமா முயற்சியை ஊக்கப்படுத்தும் அமைப்பாக தமிழ் ஸ்டுடியோவை இயக்கி வருகிறார் அருண்.