மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு – இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்
1.நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை – ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் – திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை.
2.மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை – சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை.
3.தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை/ தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை – சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை.
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறை வேறானது
நடுவண் அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களது கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனித்தனியாக நுழைவு தேர்வு நடத்துகின்றன. அதாவது எய்ம்சில் சேர ஒரு தேர்வு எழுதவேண்டும், ஜிப்மரில் சேர வேறு ஒரு தேர்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
(ஆந்திரா, காஷ்மீர் தவிர பிற) மாநில அரசின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் சேர்க்கை இருவிதமாக நடத்தப்படுகிறது
*இளங்கலை படிப்பிற்கு
1.இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
2.மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
*முதுகலை படிப்பிற்கு
1.இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
2.மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
3.ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே 100 சதம் இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன
*இதில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1980கள் வரை மாநில அரசிடமே முழு கட்டுப்பாடும் இருந்தது. 1980களின் இறுதியில் மத்திய அரசு இளங்கலையில் 15 சதமும் முதுகலையில் 25 சதமும் கேட்டது. அப்பொழுது என்.டி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்பார்கள்
*பிற மாநிலங்கள் இளங்கலையில் 15 சதவித இடங்களையும், முதுகலையில் 25 சதவித இடங்களையும் அளித்தன. 2005ல் முதுகலையில் 25 சதவித இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சதவித இடங்கள் ஆயிற்று. தனியார் கல்லூரிகளில் சேர தனியாக தேர்வு மற்றும் சேர்க்கை முறை உள்ளது.
*மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் எத்தனை தேர்வு எழுதவேண்டும் என்று பார்க்கலாம்.
- மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
- மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
- ஏய்ம்ஸ்
- ஜிப்மர்
- பி.ஜி.ஐ. சண்டிகர்
- எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
- சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
- நிம்ஹான்ஸ் பெங்களூர்
- நிம்ஸ் ஹைதரபாத்
- சி.எம்.சி வேலூர்
*ஆகா… பத்து நுழைவு தேர்வா, பொது நுழைவு தேர்வு வந்தால் பத்திற்கு பதில் ஒன்று தானே – இப்படி ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறீர்களா ??
சற்று பொருங்கள் !! மேலும் தோண்டுவோம்…
*இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
*அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு – சி பி எஸ் சி) என்றும் உள்ளது.
இரண்டும் ஒன்றா, இல்லையே….
*இதில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே (பெரும்பாலும் மத்திய அரசின் ஊழியர்களில் குழந்தைகள்) என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
*நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்.
அதே நேரம்
*மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை
*மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.
எனவே,
*மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்.
*மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்.
இந்நிலையில்,
*மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, அதாவது மேல்குடி மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வு மட்டுமே இருக்க,
*நடுத்தர மற்றும் ஏழைகள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வை இரத்து செய்ய வேண்டும்…..
என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா ?? அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது.
இதில்… தமிழ்நாட்டில் வருடந்தோறும் பிறக்கும் குழந்தைகளையும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்களா என்பது பற்றியும் கீழே இருக்கும் அட்டவணையைப் பார்க்கலாம்.
அதே போல, மருத்துவ படிப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால், தமிழ்நாட்டில் இருந்து ஒரு வருடத்திற்கு எத்தனை மாணவர்கள் உருவாகுவார்கள் என்றும், நாம் எத்தனை மருத்துவ இடங்களை இழப்போம் என்றும் இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொது மருத்துவ தேர்வுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்த ஒரு சூழலிலும், இந்த திட்டத்திற்கு தமிழக அரசோ, கட்சிகளோ பின் வரும் காலத்தில் ஆதரவு தெரிவித்து விடாமல், இருப்பதற்கு இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. அதற்காகவே இந்த கட்டுரை.
முதல் பதிப்பு பிப்ரவரி 11, 2016.
அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மே 1- ம் தேதி முதல் கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை 24ம் தேதி 2 ம் கட்ட நுழைவுத்தேர்வை நடத்தவும், ஆகஸ்ட் 1-க்குள் முடிவை வெளியிடவும், செப்., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் நீதிமன்றம்.
பதிவு 28-04-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.
Please visit: https://www.youtube.com/watch?v=GRvSz0bgbFM
LikeLike
https://www.facebook.com/notes/nata-rajan/medical-ug-cet-sinister-motive-of-the-central-bureaucrats-/10207570569396022
LikeLike