அடுத்தடுத்து விஷ ஊசி கொலைகள்: சென்னை ரியல் எஸ்டேட் மாஃபியாவின் பகீர் நிஜக் கதை!

விஷ ஊசிப் போட்டு அடுத்தடுத்து மூவரைக் கொலை செய்த ரியல் எஸ்டேட் மாஃபியா ஸ்டீபனின் நிஜக் கதை பலரை திடுக்கிட வைத்துள்ளது. பணமும் அதிகார போதையும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று வாழ்ந்துவரும் பல ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஒரு முகத்தைத் தோலுரிக்கிறது ஸ்டீபனின் மாஃபியாத்தனம்.

நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் ஹனுமான் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(38). ஸ்டீபனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஸ்டீபன், பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.காம். முடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ராஜுவ் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் இவருக்கு ரோசலின் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், ஸ்டீபனின் முறையற்ற உறவுகளால் ரோசலின் இவருடன் வாழப் பிடிக்காமல் தாய்வீடு சென்றுவிட்டார். ரோசலின் மீண்டும் தன்னுடன் வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருந்த ஸ்டீபனுக்கு ரோசலினின் அண்ணன் ஜான் பிலோமினன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஜான் பிலோமினன் மீது வன்மமாகத் திரிந்த ஸ்டீபன், அவரைக் கொல்லத் திட்டமிட்டார்.

ஏற்கனவே தன்னுடைய ரியல் எஸ்டேட் மஃபியா தொழிலுக்கு சில இளைஞர்களை பணிக்கு அமர்த்தி வைத்திருந்த ஸ்டீபன், அவர்களை கொலை செய்யப் பயன்படுத்திக்கொண்டார். அரிவாள் வீச்சு, துப்பாக்கி என்ற ரத்தம் தெறிக்கும் கொலைகளாக திட்டமிடாமல் தனது நுணுக்கமான கிரிமினல் மூளையைப் பயன்படுத்தி விஷ ஊசிச் செலுத்தி கொல்லத்திட்டமிட்டார். இதற்காக இணையத்தில் தேடி அலைந்து, மும்பையில் போய் குறிப்பிட்ட விஷத்தை வாங்கி வந்திருக்கிறார் ஸ்டீபன்.

ஸ்டீபன் தனது ஆட்கள் மூலம் ஜான் பிலோமினனை விஷ ஊசி போட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி கொலை செய்தார். ஆனால் ஜான் விஷ ஊசி மூலம் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜான் நெஞ்சு வலியால் இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆயிரம் விளக்கு போலீஸார், ஜான் இறப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். இச் சம்பவத்தில் சிக்காததால் ஸ்டீபன், அடுத்தடுத்து இருவரை ஊசி போட்டு கொலை செய்தார்.

ஸ்டீபனின் சொந்த ஊரான உத்தரமேரூரைச் சேர்ந்தவ சகோதரிகளுடன் ஸ்டீபனுக்கு முறையற்ற உறவு இருந்தது.  இதில் உத்தரமேரூரில் வசித்த ஒரு பெண்ணின் கணவர் ஸ்ரீதரை கடந்த ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதியும்,  மடிப்பாக்கத்தில் வசித்த மற்றொரு பெண்ணின்  கணவர் ஹென்றியை கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியும் விஷ ஊசி போட்டு இதே முறையில் கொலை செய்திருக்கிறார்.

நூதன முறையில் கொலை

தனது எதிரிகள் மீது ஊசி மூலம் விஷத்தை செலுத்துவதற்கு ஸ்டீபன் நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளார். இதற்காக குடையின் பின் பகுதியில் கம்பி போன்று நீண்டு கொண்டிருக்கும் பகுதியின் நுனியை வெட்டியுள்ளார். பின்னர் அந்த நுனிப் பகுதியில் விஷம் ஏற்றப்பட்ட ஊசியை வைத்துள்ளார். அதையடுத்து அந்த குடையை சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர், தனது ஆள்கள் மூலம் சாலையில் எதிராளிகள் சாதாரணமாக நடந்து செல்லும்போது குடையை அவர்கள் மேல் குத்துவதுபோல கொண்டு சென்று, குடையின் நுனிப் பகுதியில் வைத்திருக்கும் விஷ ஊசியை குத்தச் செய்துள்ளார். சாலையில் செல்வோருக்கு இது எதார்த்தமான நிகழ்வாக தெரிந்ததால், யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அதேவேளையில் விஷ ஊசி போடப்பட்டவருக்கு, நெஞ்சு வலிக்கு உரிய அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஊசி போடப்பட்ட 3 பேரும் 5 நிமிட நேரத்தில் இறந்துள்ளனர்.

இந்தக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

தன்னுடைய நீலாங்கரை வீட்டில் கடந்த 4-ஆம் தேதி 40 பவுன் நகையும், ரூ.2.75 லட்சமும் திருடப்பட்டதாக ஸ்டீபன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, உதவி ஆணையர் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக ஸ்டீபனிடம் வேலை செய்த வெ. சதீஷ்குமார்(26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் சதீஷ்குமார் தலைமையிலான கும்பல் வீடு புகுந்து தங்க நகையையும், பணத்தையும் திருடியிருப்பது தெரியவந்தது.
அதோடு மற்றொரு அதிர்ச்சித் தகவலாக, ஸ்டீபன் 3 பேரை விஷ ஊசிப் போட்டு கொலை செய்திருப்பதாகவும் சதீஷ்குமார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் ஸ்டீபனை காவலில் வைத்து விசாரித்தனர். விசாரிக்கும்போதுதான் இத்தனை தகவல்களும் வெளிவந்திருக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் ஹென்றிக்கு விஷ ஊசி போடுவதற்கு ஸ்டீபன், சதீஷ்குமாரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக சதீஷ்குமாருக்கு ரூ. 1 லட்சம் பணம் கொடுத்தாராம்.
முதலில் நடந்த இரு கொலைகளுக்கும் தன்னிடம் வேலை செய்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ரா. பாலாஜி(32), ஜெ. முருகானந்தம் (27) ஆகியோரை ஸ்டீபன் பயன்படுத்தியுள்ளார். இந்த வழக்கில், ஸ்டீபன், சதீஸ்குமார், பாலாஜி, முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் துப்பாக்கி, விஷ ஊசிகள் பறிமுதல்
இதையடுத்து போலீஸார், ஸ்டீபன் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 10 சிரிஞ்ச், 10 ஊசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 9 எம்.எம். மற்றும் 3.8 ரிவால்வர் வகை வெளிநாட்டு துப்பாக்கிகளையும், 5 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இச் சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் கூட்டாளிகள் வியாசர்பாடியைச் சேர்ந்த திலீபன், ரமேஷ், ராஜா, புலிக்குட்டி அசோக்குமார் ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், பி.இ.படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.