“நாங்கள் எல்லோரும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நிறைய இழந்தோம்; யாருக்கா? எதற்காக?”: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான நூருல் 

2006-ஆம் ஆண்டு மும்பை மாலேகான் குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மும்பை நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சல்மான் ஃபார்ஸி, சபீர் அகமது, நூருல் ஹூதா, ரைஸ் அஹமது, முஹம்மது அலி, ஆஷிஃப் கான், ஜாவித் ஷேக், ஃபரூக் அன்ஸாரி, அஃப்ரார் அஹமது ஆகிய ஒன்பது பேரும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து ஜாமீன் பெற்றிருந்தனர். இவர்கள் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  ஜோடிக்கப்பட்டவை என நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷபீர் அஹமது ஏற்கெனவே இறந்து விட்டார்.

இந்த வழக்கில் 2006-ஆம் ஆண்டு கைதானபோது நூருல் ஹூதாவின் வயது 24. கைதான நாளில் வீட்டில் இருந்த நூருலைத் தேடி வந்த போலீஸ், மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அழைத்திருக்கிறது. சில நிமிடங்கள் வந்தால் போதும் என அழைத்திருக்கிறார்கள். ஆனால், ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகே வீடு திரும்ப முடிந்தது என்கிறார் நூருல். தீவிரவாத வழக்கில் சிக்கவைக்கப்பட்ட தான் விடுதலையாக பத்தாண்டுகாலம் ஆனது என்கிறார்.

பவர் லூம் ஒன்றில் தினக்கூலியாக வேலைப்பார்த்த நூருல், அவரை நம்பியிருந்த பெரிய குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் நூருலுக்கு திருமணம் நடந்திருக்கிறது.

விடுவிக்கப்பட்டவர்கள்..
விடுவிக்கப்பட்டவர்கள்..

கைதுக்குப் பின் என்ன நடக்கிறது என்பதை நூருலும் அறியவில்லை, அவர்களுடைய குடும்பமும் அறியவில்லை. இவருடன் கைதான் ஏழு பேருக்கும் இதே நிலைதான். எழுவரும் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டனர். நூருல் 48 மணி நேரம் இடைவிடாத சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். நிர்வாணமாக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இரவில் உறங்கக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. கண்கள் கட்டப்பட்ட நிலையில் மணிக்கணக்காக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். உடல் ரீதியான சித்திரவதை மட்டுமல்லாது, மோசமான வசவுகளையும் விசாரணைக்குழுவினர் செய்தததாக நினைவு கூருகிறார் நூருல். தங்களுடைய குடும்பப் பெண்களை தொடர்பு படுத்தி ஆபாசமான வசவுகளை போலீஸார் கூறியுள்ளனர்.

சிறை வாழ்க்கை கடினமானது மட்டுமல்ல, மனிதத் தன்மையற்றதும்கூட என்கிறார் நூருல். ஐந்து வருட சிறை வாழ்க்கையில் 3 முறை மட்டுமே குடும்பத்தினரை சந்திக்க முடிந்திருக்கிறது இவருக்கு. “என்னுடைய சிறை காலத்தை தொழுகையிலே பெரும்பாலும் கழித்தேன். நாட்கள், வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக போனது. நான் நம்பிக்கையை இழக்கவில்லை. உண்மை வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன்” என்கிறார் நூருல்.

இந்த எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் 2013-ஆம் ஆண்டு கைவிடப்பட்டன.  ஆனால், இவர்களுக்கு வேலை தர யாரும் தயாராக இல்லை. நூருல் மட்டும் தனக்கு வேலை கிடைத்திருப்பதை கடவுள் செயலாக குறிப்பிடுகிறார். அதோடு கடினமான நாட்களில் தனக்கு உறுதியான நம்பிக்கை கொடுத்த மனைவிக்கும் குடும்பத்துக்கு நன்றி சொல்கிறார். ஆனால் இதே வழக்கில் கைதான  ஜாவித்தின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் எந்த உறவும் இல்லை என அறிவித்து விட்டார். தனது மனைவியுடன் வாடகை வீட்டில், தினக்கூலி வேலைப் பார்த்து வருகிறார் ஜாவித்.

மனித உரிமை அமைப்புகளும் சில இஸ்லாமிய அமைப்புகளும் நிதி திரட்டி இவர்களுடைய வழக்குச் செலவுகளை செய்திருக்கிறார்கள்.

“நாங்கள் எல்லோரும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நிறைய இழந்தோம்; யாருக்கா? எதற்காக?” என கேள்வி எழுப்புகிறார் நூருல்.

எட்டு பேர் மீது குற்றம்சாட்டி சிறைக்கு அனுப்பி அவர்களுடைய வாழ்க்கையை சிதைத்தது மகாராஷ்டிர மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு பிரிவு. இவர்களை விடுவிக்க ஆதாரங்களை சமர்பித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ. ஆனால் இந்த வடுக்களை அழிக்கமுடியுமா? சுதந்திரமான நாட்களை திரும்பத் தர முடியுமா? தொலைந்துபோன இவர்களுடைய வாழ்க்கைக்கான நஷ்ட ஈட்டை யார் தருவார்கள்?

தி சிட்டிசன் செய்தி கட்டுரையின் தமிழாக்கம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.