தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

அ. மார்க்ஸ்

இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் (கோடிக் கணக்கில்) பதுக்கி வைக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படுகிறது. இவர்கள் அனைவரும் அ.தி.மு. க வினர்க்கு நெருக்கமானவார்கள், அமைச்சர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் என்கிற செய்தியும் வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளும் பெரிய அளவில் மாற்றப்படுகின்றனர்.

கரூரில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய்க்கு உரிய அதிமுக காரர் அரசு வாகனம் என்கிற பெயரில் போலி பதிவு எண்ணுடன் இக் குற்றத்தைச் செய்துள்ளார்.

இவர்கள் கைது செய்யப்பட்டு கொஞ்ச நாட்களில் செய்தி மறக்கப்படுவது, அவர்களும் வழக்கிலிருந்து தப்புவது என்றாகிவிடாமல் இந்தப் பண விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான விசாரணை ஒன்றை அமைக்க வேண்டும்.

மாற்றப்பட்ட அதிகாரிகள் ஏன் மாற்றப்பட்டார்கள் என்பதையும் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அனுபவங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விதிகளை மாற்றி அமைக்கிறது. இவற்றை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் எனவும் விதி உள்ளது. ஆனால் அது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில்லை.

தேர்தல் செலவுகளைச் செய்ய தனி அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதும், எல்லாச் செலவுகளும் அதிலிருந்தே செய்யப்படவேண்டும் என்பதும் விதி. ஆனால் பலர் செய்வதில்லை. தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் செலவுக் கணக்கை கட்சிகளும் வேட்பாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் சரியான தேதிக்குள் செய்யப்படுவதில்லை. சென்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, ஜனதா தள் இரண்டு கட்சிகளும் தாமதமாகவே தம் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளன. காங்கிரஸ் மூன்று முறை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டும் இன்று வரை கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை.

தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் வரை தவறு செய்தவரைத் தேர்தல்களில் பங்கு பெறாமல் தண்டிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. ஆனால் இதுவரை அப்படி யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதோடு அடுத்த தேர்தல் 5 ஆண்டுகளுக்குப் பின்தான் வருகிறது என்பதால் இந்த மூன்று ஆண்டுத் தடையை யாரும் பெரிய அச்சுறுத்தலாக நினைப்பதும் இல்லை.

ஒருவர் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கு எல்லை உண்டு. சட்டமன்றத் தேர்தலாக இருந்தால் 28 லட்சம் வரை செலவு செய்யலாம். நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் 70 லட்சம். ஆனால் கட்சிகள் செலவு செய்ய ‘லிமிட்’ இல்லை. ஹெலிகாப்டரில் சுற்றுவது, ஆடம்பரமான மேடைகள் முதலியன இப்படி கட்சிச் செலவாகக் காட்டப்படும். (அப்புறம் வாக்காளர்களுக்கு 500 ரூ கொடுப்பது எல்லாம் கணக்கிலேயே வராது).

எனவே இவர்கள் யாரும் ‘லிமிட்’டுக்கு மேல் செலவு செய்வதே இல்லை. 2011 தேர்தலில் ஜெயா செய்த செலவு வெறும் பத்துலட்சத்துச் சொச்சம் தான். ஸ்டாலின் வெறும் 3 லட்சத்துச் சொச்சம்தான். கருணாநிதி நாலு லட்சத்துச் சொச்சம். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எம்பி யாக வெற்றி பெற்ற மரகதம் என்பவர் காட்டிய சொத்துக் கணக்கில் அவரைக் காட்டிலும் அவரது கணவரிடம் அதிகத் தங்க வளையல்கள் இருந்ததை நான் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளேன்.

கட்சிகள் செலவு செய்வதற்கும் ஒரு எல்லை வகுப்பது அவசியம். அப்போது இவ்வளவு தில்லுமுல்லுகள் செய்ய இயலாது. அதே போல சில நாட்கள் முன் முன்னாள் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சொல்லி இருப்பது போல corporate financing ம் நிறுத்தப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் பணச் செலவுகளில் ஊழல்கள் நடப்பதற்குக் கட்சிகள் மட்டும் காரணமில்லை. நாமும்தான். நாம் இளிச்சவாயர்களாக இருப்பதுவரை, அல்லது இந்த ஊழல்களுக்குத் துணை போகும் வரை இப்படியெல்லாம் நடக்கும்தான்.

அ. மார்க்ஸ், ஓய்வுபெற்ற பேராசிரியர்; சமூக-அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.