ஊழல் மின்சாரம் என்ற ஆவணப்பட வெளியீடு தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தியில், பெரியார் திடலில் வெளியிடப்பட்டதாக தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அது குறித்து மறுப்பு ஒன்றை எழுதியிருக்கும் திரு.திருமுருகன் காந்தி, அவசியமில்லாமல் பெரியார் திடலை விழுந்து பிராண்டியிருக்கிறார். எனவே, அது குறித்து பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
அதற்கு முன்னதாக, பெரியார் திடலில் வாடகைக்கு விடப்படும் குளுமை அரங்கம் குறித்தும், அதன் வாடகை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விளம்பரப்படுத்தியமைக்கு நன்றி. அது திருமண மண்டபமாகவும் பயன்படுகிறது என்று தகவல் தந்தமைக்கும் நன்றி. அவ்வரங்கத்தின் பெயர் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டு, பார்க்கிங் வசதி உள்ளிட்ட படத்தையும் வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருந்தால் கூடுதல் நன்றி சொல்லியிருப்பேன்.
ஆம், பெரியார் திடலில் உள்ள பல கட்டடங்களுள் ஒன்றான நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் முழுக்க முழுக்க வாடகைக்கு விடப்படும் அரங்கம் தான். அதற்குக் கட்டண விகிதம் உண்டு. யாராக இருந்தாலும், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் எதை புதிதாகக் கண்டுபிடித்தது போல் பேசுகிறார் என்று தெரியவில்லை. பெரியார் திடலுக்குள் இன்னபிற கட்டடங்களும் உண்டு. அவற்றில் எம் பயன்பாட்டைத் தவிர எஞ்சியவை வாடகைக்கு விடப்படுகின்றன. தேவையெனில், அதற்கென பத்திரிகைகளில் விளம்பரம் கூட கொடுப்போம். இதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.
பாவம் இந்த வயதில் மாரடைப்பு எல்லாம் வரக்கூடாது. அருள்கூர்ந்து உரிய வகையில் மருத்துவரை அணுகி உடன் நலன் காக்க வேண்டுகிறோம். பெரியார் திடலில் வாடகைக்கு விடப்படும் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் குறித்து அவ்வப்போது பலரும் கேள்வியெழுப்புவார்கள். இதில் யாரும் நிகழ்ச்சி நடத்தலாம் – உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு! சிறிய அரங்கக் கூட்டம் நடத்த விரும்புவோருக்கான அன்னை மணியம்மையார் மன்றமும் வாடகைக்குக் கிடைக்கிறது. அவரவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றாற்போல் இரு மன்றங்களில் ஏதோ ஒன்றில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம். மற்றபடி, எத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பவை நிர்வாகத்தின் முடிவு. எந்த நிகழ்ச்சிகளுக்கு கை கொடுத்திருக்கிறோம் என்பது அதை நடத்தியவர்களுக்குத் தெரியும். அதை இங்கே விரிக்கத் தேவையில்லை.
‘வெள்ளத்தினை குறித்த ஒரு ஆய்வரங்கம்’ நடத்த பெரியார் திடலை அணுகிய போது நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்திற்கு 1,25,000 பணம் கேட்டதாக எழுதியிருக்கிறார். 6 மணி நேரம், 12 மணி நேரம், 24 மணி நேரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் 1200 பேர் அமரக்கூடிய முழுமையான குளுமை அரங்கிற்கு, மின்சாரம், தூய்மைப்பணி, சேவை வரி உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து தனித் தனி கட்டணம் உண்டு. (வாடகைக்கு வேண்டுவோர் அது குறித்து நேரில் அவ்வரங்கங்களின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.) இவை அனைத்தும் உரிய வகையில் கணக்கு சமர்ப்பிக்கப்படுபவை. எவ்வித மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.
ஆனால், அதே அரங்கம் தான் சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சரக்கு கோடவுனைப் போல தொடர்ந்து செயல்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர்க்கு காலை முதல் இரவு வரை சமையல் செய்து அனுப்பிக்கொண்டே இருந்த சமையல் கூடமாக இருந்தது. உதவி பெறுவற்கும், தருவதற்குமான நம்பிக்கையான இடமாகப் பணியாற்றியது. டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கிய பணிகள் அம்மாத இறுதி வரை தொடர்ந்தன.
வெள்ளம் சூழ்ந்த டிசம்பர் 2 அன்று கூட ஒருவர் முகநூலில், “பெரியார் திடலை இதற்கெல்லாம் பயன்படுத்தக் கூடாதா? காசு தான் உங்கள் குறிக்கோளா?” என்றெல்லாம் இஷ்டம் போல் எழுதியிருந்தார். அவர் எழுதிய நேரத்திலெல்லாம் இரண்டு லோடு உணவுப் பொருள்கள் தயாராகி, உரியவர்களைச் சென்று சேர்ந்திருந்தன என்பதும், அப்படி எழுதிய நபரே, பெரியார் திடலில் இருந்தும் பொருள்களைப் பெற்று உதவிப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் பதிவு. ஆக, மக்கள் பணிகளில் எப்படி ஈடுபட வேண்டும் என்றெல்லாம் திடீர், குபீர்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அதைத் தாண்டி, பெரியார் திடலின் மனத் தைரியத்தையும், திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளையும் குறித்து ஏதேதோ பேசியிருக்கிறார். பெரியார் திடலின் மனத் தைரியத்துக்கு எந்தப் ‘பேராளி’யிடமும் போய் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அரசாலோ, நீதிமன்றத்தாலோ தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லையே தவிர, அரசை எதிர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்த இங்கே தடையில்லை. காவல்துறையின் மிரட்டலுக்கெல்லாம் இங்கு வேலையில்லை.
அதே வேளை, திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள் என்றால், எந்த எதிர்ப்பு குறித்தும் அஞ்சாமல், அரசின் தடைகளுக்கும் அஞ்சாமல், உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்படுவோம் என்றாலும், எல்லா எதிர்ப்புகளை மீறியும் நிகழ்ச்சி நடத்தத் தயங்கியவர்கள் இல்லை.
அரசை கிடுகிடுக்க வைக்க நாங்கள் மெழுகுவர்த்தியெல்லாம் கொளுத்தி போர் நடத்தியவர்கள் இல்லை தான்.
ஆனால், மத்திய மாநில அரசுகளின் தடைகளை, கைதுகளைத் தாண்டியும் இராவண லீலா நடத்தி, இராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இந்தியாவையே அதிர வைத்தவர்கள். தந்தை பெரியார் மறைந்து, அன்னை மணியம்மையார் பொறுப்பேற்ற பின், இந்திரா காந்திக்கு சவால்விட்டு நடந்த நிகழ்ச்சி அது. பாவம், திருமுருகன் காந்திக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நெருக்கடி காலத்தை சந்தித்து மீண்டதும் இதே பெரியார் திடல்தான்.
அன்னை மணியம்மையாருக்குப் பிறகு, ஆசிரியர் வீரமணி அவர்களின் காலத்தில், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு முதல் முகவரியாக விளங்கி, பெருமதிப்பிற்குரிய அண்ணன் பேபி அவர்கள் தங்கியிருந்து செயல்பட்ட இடமும், மேதகு பிரபாகரனுக்கு இந்த அரசு சம்மன் அனுப்பிய முகவரியும் இதே பெரியார் திடல் தான். (ஈழத் தமிழர்களுக்கான இன்றைய தேவை குறித்த திராவிடர் கழகத்தின் தீர்மானம் குறித்த திருமுருகன் அவர்களின் விமர்சனங்களுக்கு நாம் பதில் சொல்வதைக் காட்டிலும், இன்றைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்கள் பதில் உணர்வார்கள். அய்.நா.வைத் தாண்டிய, தற்போதைய நடப்பிற்கு மிஞ்சிய, உடனடி சாத்தியமில்லாத தீர்வுகளை பேஸ்புக்கில் இந்த அறிவாளிகளே பெற்றுத் தரட்டும் – நாமும் ஆதரிப்போம்.)
காவிகள் தமிழ்நாட்டில் தலையெடுக்கத் துணிந்த 1990களின் தொடக்கத்தில், காவிக்கொடி எரிப்பு மாநாட்டை நடத்திக்காட்டியதும் இந்தத் திடல்தான்.
நாடே வியந்து பார்க்கும் வண்ணம், அரசின், இந்துத்துவ சமூக விரோதிகளின், எதிர்ப்பையும், வன்முறைகளையும் மீறி சட்டப்படியே தீர்ப்பு வாங்கி, அதே நேரத்திற்குள் தாலி அகற்றும் விழாவை நடத்திக்காட்டியதும் இதே திடல்தான். அதையொட்டி வன்முறை, கைது, சிறை என்று தோழர்கள் மீதான கொடுங்கோன்மையைச் சந்தித்ததும் இந்தத் திடல்தான். இன்று மட்டுமல்ல… நாளையும் இவ்வினத்தின் முகவரி, பாதுகாப்புக் கோட்டை, ஆரியம்- ஆதிக்கத்துக்கெதிராக சிந்தித்துச் செயல்படும் தலைமைச் செயலகம்-மூளை பெரியார் திடல்தான்.
கவிஞர் காளமேகத்தின் வரிகளில் பெரியார் திடல் பற்றிச் சொல்ல வேண்டுமானால்,
“இருட்டைத் துரத்தும் கிழக்கு ரதம்,
இனம் – மொழி காக்கும் இந்த நிலம்”
குறிப்பு: ச்சும்மா திடலில் நடந்த சிலவற்றைக் கோடு காட்டியிருக்கிறோம் அவ்வளவு தான். விதண்டாவாதிகளுக்காக அல்ல… அக்கறையோடு பதில் தரக் கேட்டவர்களுக்காக!