
எதிர்பாராதவிதமாக அம்மா பிரசாரத்துக்கு சென்றிருந்தேன். சுமார் 5 கிலோ மீட்டர் முன்பிருந்தே மக்கள் மகாமக கூட்டத்தை நினைவுபடுத்தி சென்றுகொண்டிருந்தனர். ஒரே மேடையில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த அறுபத்து ஏழு வேட்பாளர்கள். ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தது இரண்டாயிரம் நபர்களை கூட்டி வந்திருந்தாலே ஒண்ணே கால் லட்சம் தொடுமே…
சென்ற கருணாநிதி ஆட்சியின் இறுதி கட்டத்தில் அம்மாவுக்கு பெரிய அலை ஒன்றும் இல்லை. காரணம் அம்மா அந்த ஐந்தாண்டுகளும் வெளியே வரவே இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் தான் வரும். ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் இரண்டு பொதுக்கூட்டங்கள் கோவையில் ஒன்று மதுரையில் இன்னொன்று. இரண்டுக்குமே வரலாறு காணாத கூட்டம் வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கூட்டம் திரட்டப்படுகிறது என்பது தெளிவாக தெரிந்தது. அம்மா நுழையும் நுழைவாயிலில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள்.
சுமார் ஐநூறு பெண்கள் பூர்ண கும்பத்துடன் காத்திருந்தார்கள். பேச்சு கொடுத்தேன். காலை 11 மணிக்கே ஆஜராக உத்தரவாம். நாம் பேச்சு கொடுத்தபோது மணி 5 இருக்கும். முதல் நாளே ஒத்திகை கூட பார்த்திருக்கிறார்கள். அனைவரும் சீராக பச்சை சேலை கட்டியிருந்தார்கள். ஒரு கையில் பூர்ண கும்பத்துடன் இன்னொரு கையில் பிளாஸ்டிக் இரட்டை இலை ஒன்று. அது விசிறிக்கொள்ள பயன்பட்டது தான் அவர்களின் ஒரே ஆறுதல். நானூறு ரூபாய் சம்பளம். இந்த அணியில் நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. அம்மா நுழைந்த பிறகு அவர்களுக்கு அங்கே அனுமதி இல்லை. அந்த பிளாஸ்டிக் இரட்டை இலை கூட்டத்துக்கு வந்தவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருந்தது. அம்மா மேடையில் இருந்து பார்த்தால் வெறும் பச்சை நிறமாக காட்சியளிக்க வேண்டுமாம்.
கட்சிக்காரர்களை விட மேலான விசுவாசிகளாக காவல்துறையினர் மாறிப் போயிருந்தனர். எல்லாம் மேலிட உத்தரவாம். முக்கியமாக எந்த இடத்திலும் கூட்டம் இல்லாமல் இருந்துவிடக்கூடாது. அம்மா பார்க்கும்போது வெற்றிடமே தெரியக்கூடாதாம். ஒரே இடத்தில் கூட்டம் கூடி நெரிசலாவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. மேடைக்கு பின்புறம் 67 வேட்பாளர்களும் அமர வைக்கப்பட்டிருந்தனர். பாப்பா படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா தொடங்கும் முன்பு குழந்தைகளை அமர வைத்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது. இதில் ஏழெட்டு அமைச்சர்களும் அடக்கம்.
கூட்டத்துக்கு கழிப்பிட வசதியெல்லாம் கிடையாது. மொபைல் டாய்லெட்டை நீங்கள் அடைவதற்கே சுமார் அரை மணி நேரம் நெரிசலில் புகுந்து வெளியே வர வேண்டும். வெளியே வருவதற்கு அங்கிருக்கும் காவலர்கள் மனது வைக்க வேண்டும். பெண்கள் வந்தால் மீண்டும் உள்ளே நுழைந்து தங்கள் கூட்டத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஆண்கள் பெரும்பாலும் மது மயக்கத்தில் இருந்ததால் வெயில் கவலையில்லை. ஆனால் பெண்கள் தான் பாவம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல… ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பார்க்க முடியவில்லை.
மேடையில் பேசும்போது முக்கிய பாயிண்டுகளின் போது அதாவது அவர் கைதட்டல்களை எதிர்பார்க்கும்போது நிறுத்துகிறார். அருகில் இருக்கும் பாதுகாவலர்கள் கைதட்டுகின்றனர். உடனே கூட்டம் கைதட்டுகிறது. மற்ற நேரங்களில் கைதட்டக் கூடாதாம். அம்மா கோபப்பட்டு விடுவாராம். பொம்மைகளை கூட்டி வந்து தலையாட்டி கைதட்ட வைத்து பிரசாரம் என்று நம்ப வைக்கிறார்கள் அம்மாவை. அம்மாவும் அதனைத்தான் விரும்புகிறார் போல…
“என்னை நீங்கள் பார்ப்பதே நீங்கள் செய்த மிகப்பெரிய பாக்கியம். எனக்கு நீங்கள் ஓட்டு போடுவது உங்களுக்கு நான் அளித்த மிகப்பெரிய வாய்ப்பு.”
இந்த இரண்டு வரிகளை சொல்லாமல் சொல்கிறது ஜெயலலிதா பிரசாரம். மக்களை கவர்வதற்கு பிரசாரம் செய்தது போய் தலைவியை குளிர வைக்க இங்கே பிரசார நாடகம் நடக்கிறது. இது உலகத்திலேயே முதன்முறை. சர்வாதிகார ஆட்சியில் கூட காணக் கிடைக்காத ஒன்று!
ராஜுவ்காந்தி, தீக்குச்சி இணையதளத்தின் ஆசிரியர்.