
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமம் அகோல்நர். ஆண்டிராய்ட் கைப்பேசிகள் நுழைந்துவிட்ட அந்த கிராமத்தில் சிலர் அதில் ஒரு நிகழ்வைக் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது, ஊரின் கோவில் திருவிழாவுக்கு இடைஞ்சலாக “அசிங்கப்படுத்துகிற” பன்றிகளை, இதற்கென்றே ஒதுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களான அப்பா, அம்மா, மகள்கள், மகன் என எல்லோருமாகச் சேர்ந்து விரட்டிப் பிடிக்கிற காட்சி. சுட்டெரிக்கும் சாதியப் பாகுபாட்டு வெயிலின், தீண்டாமைக் கொதிப்பை முகத்தில் அறைந்து உணரவைக்கிறது படம்.
ஃபாண்ட்ரி என்றால் மராத்தி மொழியில் பன்றி என்று பொருள். ஃபாண்ட்ரி, பன்றி என்ற இருமொழிச் சொற்களின் உச்சரிப்புப் பொருத்தம் தற்செயலானது. ஆனால், சகமனிதர்களைத் தாழ்த்தி இழிவுபடுத்துவதில், பன்றி என்பதற்கு இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் உள்ள சொல் பயன்படுத்தப்படுவது தற்செயலானது அல்ல.
பன்றி விரட்டும் குடும்பத்தைச் சேர்ந்தவனான பள்ளிச் சிறுவன் ஜாப்யா மனதில், அந்த ஊரின் மேட்டுத்தெரு சாதியைச் சேர்ந்த, இவர்களோடு ஒப்பிடுகையில் வசதியான குடும்பத்திலிருந்து வருகிற, வகுப்பில் உடன் பயிலும் ஷாலு மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. கற்பனையில் அவள் கைப்பிடித்து ஊர்சுற்றுகிறான். காதல் கடிதம் எழுதி நண்பனிடம் மட்டும் படித்துக்காட்டுகிறான். விளையாட்டு மைதானத்தில் தற்செயலாகத் தன்பக்கம் அவள் திரும்பினால் கூட தன்னைப் பார்ப்பதற்காகவே திரும்பியதாகக் கருதிப் புளகாங்கிதம் அடைகிறான். அவள் முன் அழகாகத் தெரியவேண்டும் என்று புதிய ஜீன்ஸ், டீ சர்ட் வாங்குவதற்காக நகரத்திற்குச் சென்று ஐஸ் விற்கிறான். கோயில் ஊர்வலத்தில் அவளைக் கவர்வதற்காக மற்றவர்களோடு சேர்ந்து ஆடுகிறான். ஆனால், குடும்ப நிலைமை, தகப்பனின் வடிவில் குறுக்கிட்டு, அவனை அதே ஊர்வலத்தில் விளக்கு சுமக்க வைக்கிறது. இறுதியில் ஊராரோடு அவளும் வேடிக்கை பார்க்க அவனைப் பன்றி விரட்டச் செய்கிறது…
பதின்பருவத்திற்கே உரிய பாலின ஈர்ப்புணர்வு அடிப்படையிலான இக்கதையில் நேரடி எதிரிகள் யாருமில்லை. இப்படியான காதல் உணர்வுக்குத் தடையாக வருவது சாதிய ஏற்பாடும் வாழ்க்கையும்தான் என்று உணர்த்துகிற திரைக்கதைதான் படத்தின் உண்மையான நாயகப்பாத்திரம்.
வாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களே கதாபாத்திரங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக ஜாப்யாவின் தகப்பனும் தாயும். மூத்த மகள் கணவனைப் பிரிந்து வீட்டோடு இருக்க, இரண்டாவது மகளுக்குப் பார்த்த வரன் கேட்ட வரதட்சனைத் தொகை இருபதாயிரம் ரூபாயை எப்படிச் சேர்க்கப்போகிறோம் என்று மலைக்கிற, அதற்காகப் பன்றி விரட்டும் வேலையைச் செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்கு ஊர்ப் பெரிய மனிதர்களால் தள்ளப்படுகிறவர்கள் அந்தப் பெற்றோர்.
மற்றொரு எடுத்துக்காட்டாக, சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிற, குடிப்பழக்கம் உள்ள இளைஞன் வருகிறான். வீணாகிப் போனவன் என ஊராரின் நிந்தனைக்கு உள்ளான அவனுக்கு, காதலித்து அழைத்து வந்த பெண்ணை அவளது உறவினர்கள் வந்து வன்முறையாக இழுத்துப்போன சோகமான பின்னணி உண்டு. அதேவேளையில் அவன் அப்படியொன்றும் முற்போக்கான ஆளல்ல. இரட்டைவால் கருங்குருவி ஒன்றைப் பிடித்துத் எரித்து அதன் சாம்பலைக் காதலிக்கும் பெண் மீது எப்படியாவது தூவிவிட்டால் அவள் வசியமாகிப் பின்னாலேயே வருவாள் என்ற மூடநம்பிக்கை உள்ள, அதை ஜாப்யாவுக்கு ஒரு ஆலோசனையாகச் சொல்கிறவன்தான் அவன்.
கவன் கல் வீசி கருங்குருவியைப் பிடிக்க ஜாப்யா எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைவது, அவனுடைய காதலின் கதி என்னவாகும் என்பதற்கான கவித்துவக் குறியீடு. படத்தின் காட்சிகள் ஆகப்பெரும்பாலும் கடும் வெயில் வெளிச்சத்தில் அமைந்திருப்பதைக் கூட, இருண்ட சாதிய வெப்பம் பற்றிய இன்னொரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த இருட்டுக்கு எப்போது முடிவு வரும்? அவமான உணர்வின் உச்சத்தில் ஜாப்யா செய்கிற செயலால் திரையே இருட்டாகிற அந்தக் கடைசிக் காட்சி இக்கேள்விக்கு பதில் சொல்ல முயல்கிறது. ஒதுக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே இப்படியொரு முடிவெடுத்தால் என்னவாகும் என்ற சமூக யதார்த்தம் பற்றிய சிந்தனை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அடக்கப்படுகிறவர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் புறப்படுகிறவர்களும் எதிர்வினையாற்றாமல் மாற்றம்தான் ஏது?
சென்னையில், இப்படத்தைப் பார்க்கவும், பார்வையாளர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்த ‘மறுபக்கம்’ திரைப்பட அமைப்பினர் நன்றிக்கு உரியவர்கள்.

ஜாப்யாவாக சோம்நாத் ஆவ்கடே, தகப்பனாக கிஷோர் கதம், ஷாலுவாக ராஜேஸ்வரி கராத் உள்ளிட்டோர் இயல்பான நடிப்பு ரசனையை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் செய்திக்குப் பக்கத்துணையாக நிற்கின்றன விக்ரம் அம்லாதி ஒளிப்பதிவு, அலோக் நந்தா தாஸ்குப்தா – அஜய் அதுல் இசைப்பதிவு. தனது கதை, திரைக்கதை, உடையாடலுக்கு ஏற்ப அனைத்தையும் செதுக்கிச் செதுக்கி ஒருங்கிணைத்திருப்பதோடு, சைக்கிள் கடை இளைஞராக நடித்தும் பங்களித்திருக்கிறார் இயக்குநர் நாகராஜ் மஞ்ஜுளே. அவருக்கு சிறந்த முதல்பட இயக்குநருக்கான தேசிய விருது, சோம்நாத்துக்கு சிறந்த குழந்தை நடிகர் விருது, 2013ல் நடைபெற்ற நடைபெற்ற 15வது மும்பை திரைப்பட விழாவில், உலகப் படங்கள் பிரிவில் இரண்டாம் பரிசு உள்பட பல விருதுகள் என வென்றுள்ள “ஃபாண்ட்ரி” எல்லா ஊர்களுக்கும் உள்ளே ஓட்டிவிடப்படவேண்டும்.
‘தீக்கதிர்’ (ஏப்.24) நாளேட்டின் ‘வண்ணக்கதிர்’ பகுதியில் வந்துள்ள கட்டுரை.
அ. குமரேசன், தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசிரியர்.