பாளம் பாளமாக வெடித்து கிடக்கும் வட இந்தியா; தண்ணீர் பஞ்சத்துக்கு என்ன காரணம்?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

‘தண்ணீர் பஞ்சம்’ என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. வட இந்தியா பாதிப்புகளை அடையத் தொடங்கியிருக்கிறது. பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கும் வயல்களை பார்வையிடப் போன மாநில அமைச்சர், அங்கு நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தமது பொறுப்பை நிரூபித்திருக்கிறார்.

மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக் கொள்கின்றன. நல்லது. எப்போதும் பற்றாக்குறை வரும்போது மக்கள் தான் சிக்கனமாக இருக்க வேண்டும். பருப்பு விலை ஏறினால், ரசத்துக்கு மாறும் மக்கள் இதைப் பழகிக்கொள்வார்கள் தான். தனி மனிதர்களின் புரதச்சத்து குறைபாட்டிற்குப் பின்னால், பொருட்களின் விலையேற்றம் இருக்கிறது. இந்த விலையேற்றதுக்குப் பின்னால் வணிகத் தரகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசைக் கட்டுப்படுத்துகிறார்கள். இது சட்டத்துக்குப் புறம்பானது.

சட்டப்படியான சுரண்டல் என்பது, நமது கொள்கைகளால் காப்பாற்றப்படுகிறது. ஆமாம்; புதிய பொருளாதாரக் கொள்கைகள். இந்த வார்த்தையைக் கேட்டாலே சலிப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டு நிழலில் நின்றாவது இதை யோசித்து தான் ஆக வேண்டும்.

முதலில் ஆறுகளில் இருந்து தொடங்குவோம்.

இப்போது பெரும்பாலான ஆறுகளில் வருடத்துக்கு மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது. மீதி நாட்கள் எல்லாம், மணல் அள்ளப்படுவதற்காக மல்லாந்து கிடக்கின்றன. மணலை அள்ள அள்ள ஆற்றின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது. ஆற்றின் ஆழம் கூடக் கூட, நிலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ஏரிகள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றில் தண்ணீர் நிறைவதே இல்லை. தண்ணீர் வரத்து இல்லாத காலங்களிலும் கூட, ஆற்றில் குழாய்களைப் பதித்து அசுரத்தனமாக அவற்றை உறுஞ்சுகின்றன பெருநிறுவனங்கள். தடையற்ற தண்ணீருக்கு உத்தரவாதமளித்திருக்கிறது அரசு. இங்கு விவசாயி என்பவன் ஒரு பொருட்டே இல்லை.

ஒரு ஊரின் குளத்தில் ஆழத்தை ஒப்பிட, ஆற்றின் ஆழம் கூடுதலாக, பாதாளத்தில் இருக்கிறது. பிறகு ஆற்றிலிருந்து, குளங்களுக்கு நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள். இங்கு தான் தனி மனிதர்கள் சுரணையற்று இயற்கையை வன்புணர்கிறார்கள். விளையும் வயல்களில் பிளாட் வாங்கும் ஒரு பயனாளிக்கு, தான் வீடு கட்டியவுடன் கண்ணை உறுத்துவது, அவனது வீட்டை ஒட்டி செல்லும் வாய்க்கால் தான்.

தமிழ் நாட்டின் சிறிய வாய்க்கால்கள் நமது முன்னோர்கள் நமக்குக் கையளித்த பொக்கிஷங்கள். வயல்களின் ஊடாக ஒரு புறம் ‘கன்னிவாய்க்கால்’ எனப்படும் பாய்ச்சல் வாய்க்கால்கள். மறுபுறம் கொஞ்சம் பெரிய ஆழமான, வடிகால் வாய்க்கால்கள். விவசாய நிலங்கள் உள்ள எந்த ஊரிலும் இந்த அமைப்பு முறையை நீங்கள் பார்க்கலாம். ஆற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டு வரும் கன்னி வாய்க்கால்கள், மழைக்காலங்களில் பயிர்கள் அழுகாமல் காப்பாற்ற வடிகால் வாய்க்கால்கள். இவைதான் நிலத்தடி நீருக்கான ஆதாரம். குறைந்த கால நீர்த் தேக்கங்கள். விவசாயத்துக்கு, வாழ்க்கைக்குத் தேவையான சங்கிலித் தொடர் நீர்ப்பாசனம்.

நகர்கள் விரிவடையும்போது, ஆற்றின் கிளை வாய்க்கால் ‘தலை மடையில்’ வீடு கட்டும் ஒருவன் முதலில் குப்பையைக் கொட்டுவது இந்த வாய்க்கால்களில் ஒன்றில் தான். முக்கியமாக பாலித்தீன் குப்பை. பிறகு தனது இடத்தைத் தாண்டி வரப்பை ஆக்கிரமிப்பது. ஆக, நகர்ப்புறங்களைத் தாண்டி இப்போது விவசயாம் செய்து கொண்டிருப்பவனின், நீராதாரத்தில் தடையை ஏற்படுத்துவது தான் அவன் செய்யும் முதல் வேலை. வேளாண் விவசாயி- தண்ணீர் வரும் நான்கு மாதத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ஒருவன்- இந்த பொறுப்பற்ற அயோக்கியர்களிடம் இருந்து தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

எங்கள் பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியில் இத்தகைய வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. அடுத்த இரண்டாண்டுகளில் அவற்றை வேகமாக துர்த்து முடித்தார்கள் புதிய நகரவாசிகள். எங்கள் குடும்பத்தில் விவசாயத்தைக் கைவிட்டோம். வேறு வருமானம் இல்லாத பலர் எங்கள் தெருவில் நிலத்தையே கைவிட்டார்கள். இப்போது அந்த நிலங்கள் எல்லாம் வீடுகளாகி நிற்கின்றன. எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தை நகரம் நெருங்கியிருக்கிறது. தெருவில் செக்யூரிட்டிகளும், புரோக்கர்களும் பெருகியிருக்கிறார்கள். பம்பு செட் வைத்திருந்த கொஞ்ச பேரும், அதைப் புடிங்கிவிட்டு ஆழ்துளைக்கு மாறுகிறார்கள். நிலத்தடி நீர் மீண்டும் கீழே போகிறது. வல்லூறுகளைப் போல ரியல் எஸ்டேட்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

இது தான் இந்தியா முழுவதும் உள்ள நிலவரம்.

இப்போது இங்கே வெயில் வேறு கூடிக்கொண்டே போகிறது. வீட்டின் பின்னுள்ள மரங்கள், சிறு அசைவும் இல்லாமல் குத்திட்டு நிற்கின்றன. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. பணத்தோடு தண்ணீர் பாக்கெட்டும் தருகிறார்கள். அதைத் தலையில் கொட்டிக்கொண்டு வாங்கிய காசின் நேரமையைக் காப்பாற்ற பிரச்சார மேடைக்கு முன்னால் காய்கிறார்கள் வேளாண் மக்கள். அரசியல் என்ற பெயரால் வேசைத்தனம் அதன் உச்சத்தில் இருக்கிறது.

சிக்கனமாக தண்ணீரைக் குடித்துவிட்டு சாகலாம்தான். அது விவசாயத்தை விட எளிதானது.

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.

வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.