
நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும்.
இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை பெயரிலான பேச்சுகள் என்றமைந்த வைகோ இதற்கெல்லாம் வெளியே முக்கிய செயலொன்றை செய்திருக்கிறார்.
இத்தேர்தலில் 2 பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.அதிலொன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி. இதற்காக அவர் தரப்போகும் வரலாற்று லுக்கையெல்லாம் நினைத்தால் அச்சமாக இருக்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும் அவரின் இம்முயற்சி முக்கியமானது.
முதுகுளத்தூர் தேவர் சாதி இறுக்கம் கொண்ட பகுதி. முதுகுளத்தூர் கலவரம் என்கிற பெயர் இங்கு நினைவுகூரத்தக்கது. முத்து ராமலிங்கத்தேவர் பிம்பம் கோலோச்சும் பகுதி. தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் ஆன முரண் கூர்மையோடிருக்கும் இடம்.அங்கு யாதவர் கூட போட்டியிட்டிருக்கிறார். ஆனால் தலித் அமைப்பல்லாத கட்சி சார்பாக Sc வகுப்பினர் போட்டியிடுவது இதுதான் முதன்முறை. இது அங்கிருக்கும் மறவர்சாதி தேவர்களுக்கு வைகோ மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கவும் வாய்ப்புண்டு. (பல வருடமாக தேவர் சமாதிக்கு சென்ற புகழை இப்படியா இழப்பது?) இது பலரும் சுட்டிக்காட்ட விரும்பாத தகவல்.
ஆனால் இதையே கருணாநிதி செய்திருந்தால் (அவரால் ஒருபோதும் செய்யமுடியாது என்பது வேறு விசயம்) உள்ளூர் சமூகநீதி நியாயம் மட்டுமல்லாது உலகத்தியரியெல்லாம் வந்து இறங்கியிருக்கும். அப்படியே செய்தாலும் திமுக அதிமுக பாமக பாணியில் அங்கு சமபலத்திலிருப்பதால் ஆதிக்கத்தை எதிர்த்து வரும் தலித் பிரிவினருக்கு தராமல் சிறுபான்மை எண்ணிக்கையிலான தலித் பிரிவினருக்கு தந்து மார்தட்டுவார்கள்.
கருணாநிதியை சாதி ரீதியாக பேசியது வைகோ மீதான முக்கிய மதிப்பீடாக இருக்குமானால் அதில் நாம் மாறுபடபோவதில்லை. ஆனால் இவர்களின் மதிப்பீடு அறம் சார்ந்தது தானா என்கிற கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது. மதுரை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மீது சாதிய வசை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுகவிடமோ அதன் ஆதரவாளர்களிடமோ இருக்கும் பதிலென்ன?
சோழவந்தான்(தனி) தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட வந்த டாக்டர் தேன்மொழியை ஒருமையில் திட்டினார் அவர் என்றுசொல்கிறது தி இந்து நாளேட்டுச் செய்தி. அவர் சாதி சொல்லியே திட்டினார் என்கிறது தற்போதைய குற்றச்சாட்டு. அவரை அறிந்தவர்களுக்கு தெரியும் அப்படி பேசியிருப்பாரென்று.தேன்மொழி ஒரு மருத்துவர். தானாக விலகியிருக்கிறார். ஒருமையில் விளிப்பதற்கு பின்னாலிருப்பது சாதித்திமிர் தானேயொழிய வேறில்லை.
இதேபோன்று மற்றுமொரு சம்பவமும் இப்பகுதியிலிருக்கிறது. இதே தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுக கருப்பையா.சட்டம் தந்த தனித்தொகுதி வாய்ப்பினால் இவர்கள் எம்எல்ஏக்கள் ஆகினாலும் கட்சி பொறுப்புகளில் உள்ள ஆதிக்க சாதியினர் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்வதில்லை. எனவே அவர்கள் எம்எல்ஏக்கள் ஆனாலும் தங்களுக்கு கீழானவர்களே என்பதை காட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். கருப்பையா மீது அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்குதலே நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். இதற்கு பின்னாலிருந்தது சாதி வெறுப்புதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.கருப்பையா முதலமைச்சருக்கே கடிதம் எழுதினார். அவர் ஒன்றும் செய்யவில்லை. (அதுதான் தெரியுமே)
இதெல்லாம் இங்கிருக்கும் எதார்த்தங்கள். இதையெல்லாம் விவாதிக்கவேண்டும் தான்.
விவாதிக்க வேண்டிய தமிழ்ச்சூழலை பார்த்தால் பயமாயிருக்கிறது. சாதி என்பது வெகுமக்கள் மனநிலை. அதை மக்கள்மய தேர்தலிய அரசியலில் (அதாவது சாதிவெறியை)திராவிட கட்சிகள் நேர்த்தியாக கையாள்கின்றன என்று கோட்பாட்டு பில்டப் தருவார்களோவென.
அல்லது தங்களுக்கு வாய்ப்பான இடங்களில் மட்டும் இதையெல்லாம் கண்டிக்கவோ ஆதரிக்கவோ செய்துவிட்டு ‘வாய்ப்பற்ற’இடங்களில் மௌனம் காப்பார்களோ!
ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நூல்கள் :
2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
4. சனநாயகமற்ற சனநாயகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2007
பக். 124. ரூ. 50
வெளியீடு:
கவின் நண்பர்கள்
ஆர்.சி. நடுத்தெரு
வ. புதுப்பட்டி – 626 116,
விருதுநகர்.