கிரானைட் ஊழல் மிகப்பெரிய கூட்டுக்கொள்ளை : சகாயம் குழு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் (23.4.2016) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:

படம்: கவாஸ்கர் செல்வம்
படம்: கவாஸ்கர் செல்வம்

கிரானைட் கனிம வளச் சுரண்டல், தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகளிளேயே மிகப்பெரியதாகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரிகள், சட்டவிரோத சுரண்டல் குறித்த விசாரித்த சிறப்பு விசாரணை அதிகாரி திரு. உ.சகாயம் அறிக்கை நீதிமன்றத்திடம் உள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் – மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. மிகப்பெரும் கூட்டுக்கொள்ளை அரங்கேறியிருப்பதைக் காட்டுகின்றன.

• கிரானைட் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்லாது விவசாயம், நீர்நிலைகள், நினைவுச் சின்னங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப்புற பொருளாதாரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

• 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் 176 கிரானைட் குவாரிகளுகு குத்தகை அனுமதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

• 1991 ஆம் ஆண்டு முதல் 2002 வரையில் 36 குத்தகை அனுமதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

• 2003 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 139 குத்தகை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

• இதில் மாநிலத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற 2001 – 2006 ஆண்டுகளில் 77 குத்தகை அனுமதிகளும், திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011 ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளும் வழங்கி அரசாணாஇகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

• 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் திமுகவின் திரு.மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தார்.

• அரசாணை பிறப்பித்தல் என்பது அலுவல் ரீதியிலான ஏற்பாடு என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த அரசு கிரானைட் பற்றி பின்பற்றும் கொள்கையின் வெளிப்பாடாகும்.

• அரசுக்கு வந்திருக்கவேண்டிய வணிக வரி, சொத்துவரி, புரொபசனல் டேக்ஸ், சாலை வரி, கலால் வரி என்ற வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

• 12.06.2015 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.132 மூலம் 39 குத்தகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 83 குத்தகைதாரர்களுக்கு மதுரை ஆட்சியர் ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பினார்.

• மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், பி.ஆர்.பி எக்ஸ்போர்ட்ஸ், சி பானெர் முகமது & கோ, ஓம் ஶ்ரீ கிரானைட்ஸ் ஆகிய நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை, நிதிமோசடிச் சட்டத்தின் படி தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

• ஒரு லட்சத்து 62 ஆயிரம் கிரானைட் பிளாக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூட்டு:

• உயர்நிலை அதிகாரிகள் முதல் – கீழ்நிலை அதிகாரிகள் வரையில் ஒத்துழைப்பு வழங்காமல் இவ்வளவு பெரிய முறைகேட்டிற்கு சாத்தியமில்லை.

• மதுரை மாவட்ட கனிமத் துறை துணை இயக்குனராக சி.ஏ.சண்முகவேல் (29.08.2003 – 01.08.2015) இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், இணை இயக்குநராக திருராஜாராம் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

• துணை இயக்குனராக இருந்து ஓய்வுபெற்ற சி.ஏ.சண்முகவேல் – பதவிக்காலத்தில் வந்துள்ள புகார்கள் முக்கியமானவை. கீழவளவு கிராமத்தில் செந்தில்குமார், முருகேசன், பிபின் முல்ஜித் தாக்கர், பல்லவா கிரானைட்ஸ், எடயப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோரமண்டல் முகமை, கீழையூரின் கோட்டை வீரன், ஆர்.எம்.ராமநாதன், எரவபட்டியில் பி.எல்.படிக்காசு, நவீன் பட்டி கேலக்சி என்டர்பிரைசஸ் ஆகியவை குத்தகைக் காலத்திற்கு பிறகும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. திருவாதவூர் கிராமத்தின் பண்டைச் சின்னங்களுக்கு அருகே குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

• அவர் தனது பதவிக் காலத்திற்கு பின் சக்திவாய்ந்த கிரானைட் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இந்தத் துறையில் எத்தகைய அனுமதியையும் அவரால் பெற்றுவிட முடிந்துள்ளது. அதிகாரிகள் பற்றிய தனிப்பட்ட விபரங்களை தெரிந்து வைத்திருப்பார் என்பதால் இது மற்ற அதிகாரிகளை அச்சுருத்துகிறது. சில இடங்களில் தகவலுரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு, அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். இன்றும் அவர்களுக்கு அரசு அலுவலர்கள் அஞ்சுகின்றனர். அவரை எதிர்ப்பதில்லை. 2012 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒருமுறை நடவடிக்கையில் இறங்கியபோதும், அந்த வழக்கு அதிசயக்கத் தக்க வகையில் மாயமானது.

பலவிதமான முறைகேடுகள்:

• அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.

• ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை வாங்குவதற்கு, கோடேக் மஹிந்த்ரா வங்கியிலிருந்து பி.ஆர்.பி நிறுவனத்தினர் வாகனக்கடன் பெற்றுள்ளனர்.

• விதிகள் அனைத்தையும் மீறி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைப்பு பெறப்பட்டுள்ளன.

• சட்டவிரோத குவாரிகளால் பல விவசாய நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டு, அவை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

• நினைவுச்சின்னங்கள் அருகிலும் கூட குவாரி அமைத்திட மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார்.

• கிராமங்களை விட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டனர். மதுரை கிழக்கு தாலூகாவிற்கு உட்பட்ட சிவலிங்கம், டி.குந்தாங்கல், லாங்கிட் நகர் மற்றும் மேலூர் தாலூகாவிற்கு உட்பட்ட ரெங்கசாமிபுரம், இ.மல்லம்பட்டி ஆகியவை அவற்றில் சில. பி.ஆர்.பி கிரானைட்ஸ், பி.ஆர்.பழனிசாமி, பி.ராஜசேகர், கே.ராஜவேலு, கே.சி.கார்த்திக், பி.கே.செல்வராஜ், ஆர்.ஆர்.கிரானைட்ஸ் ஆகியோர் இந்த கிராமங்களில் நடைபெற்ற சட்டவிரோத கிரானைட் கொள்ளையில் தொடர்புடையோரில் சிலர்.

• அரசே பட்டா வழங்கி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த கிராமங்களில் இருந்தும் ‘நிர்ப்பந்தத்தால்’ மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதற்காக, சக்திமிக்க வெடிபொருட்களை பயன்படுத்துவது, கிராமத்தைச் சுற்றிலும் கிரானைட் கழிவுகளை கொட்டுவது. பாதைகளை அடைப்பது, நிலத்தடி நீர்வளத்தைச் சிதைப்பது அத்தோடு பொய் வழக்குகள் பதிவு செய்தல், பெண்களை இழிவாகப் பேசுதல் என பல வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இத்தகைய தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட அரசு நிர்வாக முயலவில்லை என்பதுடன் – கிரானைட் நிறுவனங்களோடு சேர்ந்து மக்களை வெளியேற்றவும் பலர் உதவிசெய்துள்ளனர்.

அழிக்கப்பட்ட காவலர் குடியிருப்பு:

• 2001 ஆம் ஆண்டு ஒத்தக்கடை காவல் நிலைய வரம்புக்கு உட்பட்ட, மதுரை கிழக்கு வட்டத்தைச் சேர்ந்த திருமோகூர் கிராமத்தில் காவலர்களுக்கு தலா 5.5 செண்ட் வீதம் 327 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அங்கு தவமணி, மனோகரன், கருப்பு, மைக்கேல் ஜெரால்ட் ஆகிய நால்வரின் குடும்பங்கள் வீடுகட்டி குடியேறினர். அருகாமையில் குவாரி வெட்டத் தொடங்கிய பி.ஆர்.பி நிறுவனத்தினர் மிக வலிமையான வெடிபொருட்களை வெடித்து, வீடுகள் வலுவிழக்கத்தொடங்கின. இந்த அதிர்ச்சி தாளாமல் தவமணி மாரடைப்பால் மரணமடைந்தார். அதக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிவந்தது. காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கே சட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக அலைக்கழிக்கப்பட்டு, வழக்கு விசாரணை தாமதிக்கப்பட்டதுடன், நிலத்தை விற்றுவிட்டு அகன்றுவிடுமாறு மிரட்டப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய நிலக் குவிப்பு:

• மதுரை மாவட்டத்தில் பி.ஆ.பி நிறுவனத்தினர் 3865.382 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி பதிவுசெய்துள்ளனர். இங்குள்ள பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 2807 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஏழை விவசாயிகள் நிலமற்றவர்களாக்கப்பட்டிருப்பதை சொல்ல வேண்டியதில்லை.

( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது )

• மேற்கண்ட அட்டவணையில் உள்ளதில் மிகப்பெரும்பகுதி நிலம் 906.40.5 ஹெக்டர் (2266 ஏக்கர்) நிலங்கள் பிஆர்பி கிரானைட் மற்றும் அதன் சார்பிலானவர்களுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. அது தவிர தேனி மாவட்டத்தில் 868.09 ஏக்கர் நிலங்களை அவர்கள் வாங்கியுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் இருக்கலாம்.

• சாகுபடி நிலங்கள் மிகப்பெரும் அளவில் வாங்கப்பட்டுள்ளது நில உச்சவரம்புச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ள செயலாகும். நிலத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதன் விளைவுகள் பல. மிகப்பெரும் தொகையை இப்படி நிலங்களில் அவர்கள் முடக்கியிருப்பது, அந்த நிலங்களில் ஏதேனும் கனிம வளங்கள் இருப்பதாக தனியார் ஆய்வு மேற்கொண்டு அதனப்டிப்படையில் நிலம் வாங்கப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட சந்தேகங்களை உருவாக்குகிறது. விவசாய பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

• நில உச்சவரம்புத்துறை, நிலப் பத்திரப்பதிவுத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மெளன சாட்சிகளாக இருந்துள்ளனர்.

• தலித் மக்களுக்கு மட்டுமேயான பஞ்சமி நிலங்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் குடியிருப்பே இடம்மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பஞ்சமி நிலங்களில் 4.3 சதவீதம் மட்டுமே இப்போது தலித்துகளிடம் உள்ளன.

நிலநடுக்க அபாயம்:

• சக்திமிக்க வெடிபொருட்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு புவிசார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகள் ஏற்படுத்திய அதிர்வு பாதிப்புகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இலுப்பைப்பட்டி கிராமத்தின் பழனிவேல் வீரகாளியம்மன் கோயில் அறங்காவலர். அனுமதிக்கப்பட்ட தொலைவைத் தாண்டி குவாரி விரிவடைவது, அதன் செயல்பாடுகள் குறித்து கீழவள்வு காவல்நிலையத்தி அவர் கொடுத்த வழக்கு (23.03.2015) வரை விசாரணையில் இருந்தது. இதுபோன்ற புகார்கள் மீது அரசு நிர்வாகம் பாராமுகம் காட்டியுள்ளது.

• மேற்கண்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நில அதிர்வு நடக்கவும், நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்களை அதிகரிக்கும் காரணியாகவும் அமைய வாய்ப்புள்ளது.

79 சட்ட விதிகள் அப்பட்டமாக மீறல்:

• மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சட்டவிரோத கிரானைட் கொள்ளையின்போது கனிமப் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, தொல்லியல், போக்குவரத்து, மின்சாரத் துறை, பஞ்சமி நிலங்கள், நீர்த் தேக்கங்கள் பாதுகாப்பு, பணப்பரிவர்த்தனை, பாதை மறுப்பு, சாகுபடி நிலங்கள் மற்றும் காவல்துறை தொடர்பான 79 சட்டங்கள், விதிகள் மீறப்பட்டுள்ளன.

• மின்சாரத்துறையைப் பொருத்தமட்டில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பை கணக்கில் கொள்ளாமல் இந்தக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன். சட்ட விரொத குவாரிகளும், இத்தகைய மின் இணைப்புகளை பெற்றிருந்தன.

தகவல்களை வெளிக்கொண்டுவந்தவர்கள் மேல் தாக்குதல்:

• தினபூமி ஆசிரியர் மற்றும் அவரோடு இணைந்து கிரானைட் முறைகேடு பற்றிய தகவல்களை செய்தியாக்கியோர் மீது – மதுரை மாவட்ட கிரானைட் குவாரி முதலாளிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். உரிய விசாரணை ஏதுமின்றி அவர்களை முடக்கும் நோக்கத்துடனே காவல்துறை செயல்பட்டுள்ளது. இப்படி கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டுவந்தவர்கள், கேள்வியெழுப்பியோர் மீது பொய்வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் பற்றிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

• ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் இயற்கை வள கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்த இளஞ்செழியன் மிரட்டப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். ஒலிம்பஸ் நிறுவனத்தின் கணக்காயர் ரவிதான் பி.ஆர்.பி நிறுவனத்திற்கும் கணக்காயராக உள்ளார். அவர் இளஞ்செழியனை பலமுறை தொடர்ப்புகொண்டு மிரட்டியுள்ளார். பொய் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

• இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், அரியபட்டி கிராம துணைத்தலைவர், முன்னாள் ராணுவத்தினர், பத்திரிக்கையாளர்கள், கரும்புவிவசாயிகள் சங்கத் தலைவர், சோக்கோ டிரஸ்ட் வழக்கறிஞர், ஓய்வுபெற்ற ஆசிரியர் என பலரும் இத்தகைய மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

1991 ஆம் ஆண்டில் சிரிய அளவில் தொடங்கி 2011 ஆம் ஆண்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்த கிரானைட் கனிமவளச் சுரண்டல், இதுவரை தமிழகத்தில் நாம் அறிந்த முறைகேடுகளில் மிகப்பெரியதாகும். ஒரு மாவட்டத்தில் மட்டுமே இத்தனை இழப்பு ஏற்பட்டிருந்தால், தமிழகம் முழுவதும் எவ்வளவு பெரிய முறைகேடு அரங்கேறியிருக்கும் என ஊகிக்கவே அதிர்ச்சியாய் இருக்கிறது. கடந்த் 25 ஆண்டுகளில் அதிமுக மூன்றுமுறைகளும், திமுக இரண்டுமுறைகளும் ஆட்சி செய்துள்ளனர். மேலிருந்து, அடிமட்டம் வரையில் அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – கிரானைட் நிறுவனங்கள் மிகப்பெரும் பலனை அடைந்துள்ளன. திமுக – அதிமுக இரண்டு ஆட்சிகளும் தங்கள் ஆட்சியதிகாரங்களை முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக பயன்படுத்திவந்துள்ளனர். இவ்வாறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் …

• 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரானைட் முறைகேடுகள் நடைபெற்றுவந்துள்ளன. அரசியல்வாதிகள் – அதிகாரிகள் – கார்ப்பரேட் கூட்டு இதற்கு பின்னணியில் செயல்பட்டுள்ளது. பலதுறை நிபுணத்துவம் வாய்ந்த சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உயர் நீதிமன்றமே ஏற்படுத்தி, அதன் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்.

• சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் பற்றி உடனுக்குடன் விசாரித்து, முடிவு மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு ப்ராசிக்யூட்டர்களை நியமிக்க வேண்டும்.

• கிரானைட் நிறுவனங்களால் வீடு, நிலம் இழந்து தவிப்போருக்கு மறுவாழ்வு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

• ஒரு லட்சத்து 62 ஆயிரம் கிரானைட் பிளாக்குகள் மூலம் நிதி திரட்டி. கூட்டம் கூட்டமாக கிராமங்களை விட்டு அகற்றப்பட்டோரை, மறுகுடியமர்த்தி, மறுவாழ்வளிக்க வேண்டும்.

• நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் மீட்டமைக்கப்படவேண்டும்.

• நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போல – டாமின் நிறுவனமே கிரானைட் வர்த்தகத்தில் ஈடுபட வகை செய்ய வேண்டும்.

• கிரானைட் கனிமவளச் சுரண்டலில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள், கிரானைட் முதலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களின் முறைகேடான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

• முதலமைச்சரையும் விசாரிக்கக் கூடிய அதிகாரத்துடன் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும். ஊழல் தடுப்பு முகைமைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

• கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் விசாரணை அறிக்கை மற்றும் ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வழங்கப்பட வேடும்.

• உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவியவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். சகாயம் ஐஏஎஸ் உள்ளிட்ட நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் வேண்டும்.

• நில உச்சவரம்புச் சட்டத்தை கராராக அமலாக்கி, கிரானைட் நிறுவனங்களின் கைகளில் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து, விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தவும், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் வேண்டும்.

முகப்புப் படம் நன்றி: வினவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.