
நான் இங்கு சொல்ல வருவது வேறொன்று.. ஆக நரேந்திரமோடி புண்ணியத்தில் 19,726 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு நாமம். ஏற்கனவே மல்லையா 9000 கோடி அல்வா. இதுவும் பொதுத்துறை நிறுவனங்கள் தலையில்தான்.
மார்ச் 31 அன்று பொதுத்துறை வங்கிகளில் 500 கோடிகளுக்கு மேல் பாக்கி வைத்துள்ளவர்களின் (defaulters) பட்டியலை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உச்சநீதிமன்றத்திடம் (வற்புறுத்தல்களுக்குப் பின்) சமர்ப்பித்தார்.
சமர்ப்பித்ததோடு நிற்கவில்லை அவர் இன்னொன்றையும் சொன்னார்.
‘இப்படி வங்கியை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிடுவது நல்லதல்ல. அது பொருளாதார நடவடிக்கையை ‘உறைய’ (chill) வைத்துவிடும். அப்படிச் செய்தால் (முதலாளிகள்) ‘ரிஸ்க்’கை எதிர்கொள்ளத் தயங்கும் நிலை ஏற்படும்” – எனச் சொன்னார்.
ரகுராம்ராஜன் ஓரளவு reasonable ஆன ஆள் என்பதுதான் என் கருத்து. அவர் இப்படிச் சொன்னதும், “சரி இவர்களின் reason எல்லாம் முதலாளித்துவ ‘லிமிட்’டுக்குள்தான்” என நினைத்துக் கொண்டேன். அவர் இன்னொன்றும் சொன்னார்:
“ஏமாற்றியவர்களை ‘திட்டமிட்டு ஏமாற்றியவர்கள் (wilful defaulters), சந்தர்ப்ப சூழலால் ஏமாற்றியவர்கள் என இரண்டாகப் பிரி்த்துப் பார்க்க வேண்டும்”
எப்படியோ திட்டமிட்டு ஏமாற்றினாலும் சரி, திட்டமிடாமல் ஏமாற்றினாலும் சரி மொத்தத்தில் அது ஏமாற்றுதான். அதுவும் ஏமாற்றப்படுவது ஒரு பொதுத்டுறை வங்கியானால் ஏமாற்றப்படுவது நேரடியாக நாம்தான்.
இந்த ஏமாற்று நடவடிக்கைகளால் நாளை அந்தப் பொதுத்துறை வங்கிகள் தள்ளாடத் தொடங்கினால், அதைச் சரி செய்ய நிதிநிலை அறிக்கையிலிருந்து அவற்றிற்குப் பணம் ஒடுக்கீடு செய்யப்படுமானால், அதுவும் நம் பணம்தான்.
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது இந்திரா வங்கிகளை தேச உடைமை ஆகினார். பூரித்துப் போனோம். புரிட்சிகர மாற்றம். இனி வங்கிகள் எல்லாம் ஏழை பாழைகளுக்கு சேவஐ செய்யப் போகின்றன என நினைத்தோம்.
ஆனால் உண்மையில் நடந்ததென்ன? மக்கள் பணம் எளிதில் கார்பொரேட்களுக்குப் பயன்படத்தான் அது உதவியது. தனியார் வங்கிகளாக இருந்தால் கூட, அவர்கள் சற்றுக் கவனமாகக் கடன் கொடுப்பார்கள். இங்கே அரசியல்வாதிகள் சட்டத்தை வளைத்து, வங்கிகளின் நிர்வாகத்தில் தலையிட்டு, இன்னும் பல்வேறு வடிவங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் பணம் கார்பொரேட்களுக்கு வாரிவிடப்படுகிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
மல்லையாவுக்குப் பின் ‘இதன் மூலம் நாம் கற்றுக் கொள்வதென்ன?’ என ஏகப்பட்ட கட்டுரைகள் வந்துகொண்டுள்ளன. அவற்றில் பேரா.புலப்ரே பாலகிருஷ்ணனின் கட்டுரை முக்கியமாகப் பட்டது.
1.அவர் ரகுராம் ராஜனை மறுக்கிறார். திட்டமிட்டு ஏமாற்றியவர்கள், திட்டமிடாமல் ஏமாற்றியவர்கள் என்றெல்லாம் பிரிக்க முடியாது. அடையாளங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பயன் கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம் முழு விவரங்களையும் வெளியிடுவதுதான் பயனளிக்கும் எனலாம். பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் ஒவ்வொரு கடனின் விவரங்கள், எந்த அடிப்படையில் அது கொடுக்கப்பட்டது, கொடுக்கப்பட்டவரின் பழைய சரித்திரம், guarantee கொடுத்தவர்கள் யார், கடன் sanction செய்த அதிகாரி யார், பிற அதிகாரிகள் யார், என்ன சொத்துக்கள் உத்தரவாதமாகக் காட்டப்பட்டன முதலிய விவரங்கள் ஒவ்வொரு பொதுத்துறை வங்கியின் இணையத் தளங்களிலும் வெளியிடப்பட வேண்டும்.
2.லஞ்ச ஊழல்கண்காணிப்புத் துறையால் வங்கி அதிகாரிகள் விசாரிக்கப்படுவது, அவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி நியாயமாகக் கிடைக்க வேண்டிய திட்டங்களுக்கும் கடன் கிடைக்காமல் போய்விடும் எனச் சொல்லப்படுகிறது.இதைத் தவிர்க்க கடன் அளிக்க முடிவு செய்யும்போது ஒரு குழு அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதன் மூலம் கூட்டுப் பொறுப்பை உருவாக்கலாம்.
எல்லாவற்றைலும் வெளிப்படைத்தன்மை தேவை. அது இல்லாதது நமது பொது்த்துறையை பலவீனப்படுத்தவே செய்யும் என்கிறார் பாலகிருஷ்ணன்.
நண்பர் வே.பாண்டி, “மோசடிக்கார்களின் பெயரை வெளியிட்டு என்ன பயன்? அவர்கள் என்ன விவசாயிகள் போலத் தற்கொலையா செய்துகொள்ளப் போகிறார்கள்?” எனக் கேட்டுள்ளார்.
உண்மைதான். ஆனால் கடன் விவரங்கள் வெளியிட வேண்டும் எனச் சொல்வது அவர்களை ‘அவமானப்படுத்த’ அல்ல. மாறாக கடன் கொடுப்பதில் அ்திகாரிகள், அரசுத் தலையீடு, வங்கியின் பங்கு முதலியவற்றை வெளிக் கொணர்வதற்காகத்தான். அது எதிர்காலத்தில் இப்படிக் கடன் கொடுப்பவர்களை அச்சத்திற்குள்ளாக்கும்.
மற்றபடி ஏமாற்றிய மல்லையாக்களை எப்படிக் கையாள்வது என்பது இன்னொரு தனி அம்சம். மல்லையா விஷயத்தில் மோடி – அருண்ஜேட்லி கும்பல் தங்கள் கட்சி எம்.பியான மல்லையாவைத் தப்பிப் போகச் செய்துள்ளது என்பதுதான் உண்மை. இதுவரை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடமிருந்து இது குறித்த ஒரு முழுமையான அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை என்பதையும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். பிரச்சினை என்றவுடன் மல்லையாவின் பாஸ்போர்ட் உடனடியாக முடக்கப் பட்டிருக்க வேண்டும். இன்று வரை அது செய்யப்படவில்லை.
அந்த நபரின் சொத்துக்களை முடக்குவது என்பதெல்லாம் எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. ஏற்கனவே அவை எல்லாம் கடன் சுமை ஏறியவைதான். அதனால்தான் கடன் குறித்த எல்லா விவரங்களும் வெளிப்படையாக்கப்பட வேண்டும் எனவும், கடனைக் கொடுத்தவர்கள் எந்த அடிப்படையில் அதைச் செய்தார்கள் என்பது பரிசீலனைக்குரியது எனவும் சொல்கிறோம். இது இன்னொரு மல்லையாக்கள் உருவாவதைத் தடுக்கும் என்கிற நம்பிக்கையில்தான் சொல்லப்படுகிறது.
அ. மார்க்ஸ், பேராசிரியர்; எழுத்தாளர்.