“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி.
ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார்.

ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் இவ்வளவு மிரட்டல். தண்ணீர் கூட கொடுக்காமல் மயங்கும் வரை மக்களைக் காத்திருக்க வைக்கிறார்கள். முழுக்க முழுக்க அவர் வெளிப்படுத்துவது ஒரு சர்வாதிகாரியின் சித்திரம். இந்த தைரியத்தை அவருக்கு வழங்கியது, போன தேர்தலில் மக்கள் அவருக்கு அளித்த வெற்றி. அதை தனக்கான வெற்றி என்று கருதிக்கொள்ளும் அபத்தம்தான் இந்த தேர்தல் பரப்புரையில் அவரை ‘பால்கனி’ மேடையில் இருக்க வைக்கிறது.

அநியாயத்துக்கு போரடிக்கும் ஓரங்க நாடகத்தை, முன்னூறு ரூபாய் வாங்கி விட்ட கொடுமைக்காக, தலையில் தண்ணீரைக் கொட்டிக்கொண்டு பார்க்கிறார்கள் மக்கள். போன தேர்தலில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வெற்றி, கருணாநிதி அளித்த பரிசு. அவர் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அதைக் கொடுத்தார். அவர் கொடுக்கும் வரை, கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, பின்பு சோம்பல் முறித்துக்கொண்டே வெளியில் வந்து அதைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இங்கு ஆட்சிக் கட்டில் என்பது உண்மையிலேயே பொருத்தமான சொல்லாடல்தான். அவரும் நிர்வாகமும் ஐந்து வருடங்களுக்கு ஓய்வெடுக்க வழங்கப்பட்ட வாய்ப்பல்லவா அது.

இதில் நாம் கவனிக்க ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. போன கருணாநிதி ஆட்சியில், மக்கள் அடைந்த துயரத்தில் ஜெயாவுக்கும் பங்கிருக்கிறது. ஏனெனில் பிரதான எதிர்க்கட்சியாக, அரசின் தவறான போக்கை எதிர்ப்பதும், அரசின் வன்முறையை, ஊழலை மட்டுப்படுத்தும் அழுத்தத்தை அதன் மூலம் ஏற்படுத்துவதும் அவரது கடமை. ஆனால் ஜெயலலிதா என்ன செய்தார்? என்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால்தான் செயல்பட முடியும் என்று மீளா உறக்கத்திற்கு போனார். இப்போதும் கூட அவர் தோற்றால் அவருக்கு ஒன்றும் குடி முழுகிப் போய்விடப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது சிறுதாவூர் மற்றும் கொடநாடு. மற்றும் நிறைய குமாரசாமிகள் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். சுகம்.

இந்த பக்கம் கருணாநிதி, தான் உருவாக்கி நிலைநிறுத்திய விழுமியங்களுக்கு எல்லாவற்றையும் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு முறை முதல்வராக இருந்த, எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்கிற கலைஞரை முதல்வராக்குங்கள் என்று பரப்புரை செய்கிறார் ஸ்டாலின். மாவட்ட செயலாளர்கள் என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பது, பதவி வெறி கொண்ட முதியவர்கள். அவர்களோடு சேர்ந்துதான் மக்களை சந்திக்கிறார் அவர். மாவட்ட செயலாளர்கள் ஏன் அந்தப் பதவியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்? பதில் மிகவும் எளிது. “அவரை விடச்சொல் நான் விடுகிறேன்” என்பதுதான் அது. நார்சிசத்தின் மொத்த உருவமான கருணாநிதியால் அதிகார வேட்கையைக் கைவிடவே முடியாது. தான் பதவியை கைமாற்றிவிடப்போவது மகனுக்குத்தான் என்ற போதும் கூட.

இங்கு, தேர்தல் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, சில குணநலன்களை உருவாக்கி நிலைநிறுத்தியதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதில் முக்கியமாக அதிகார வெறி. அதன் நிழலைப்போல தொடரும் சுயமோகம். பிறகு கட்சியை சொத்தாகப் பார்க்கும் மனநிலை. இந்த மனநிலை தான், அதிகாரத்தை வாரிசுரிமையாகப் பார்க்கும் நிலைக்கு கருணாதியைத் தள்ளுகிறது. ஸ்டாலினை பிரதானப்படுத்துகிறது. அதேநேரம் அவரது சுயமோகம் சொந்த அதிகாரத்துடன் மோத, ஸ்டாலின் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதாவின் விஷயத்தில் இந்த சுயமோகம் அவரது பாதுகாப்பின்மையோடு மோதுகிறது. அவரால் யாரையும் நம்ப முடியவில்லை. மக்கள் உட்பட. இது முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகாரியின் மனநிலையேதான். மேலும் அதிகாரத் தரகு வேலைகள் தரும் சோர்வு. அதன் விளைவுதான் பால்கனியில் அமர்ந்து கொண்டு அவர் நடத்தும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள். அவரது இந்த பரப்புரையில் மக்களைக் காட்டிலும் கூடுதலான அவமானத்தை அடைபவர்கள் அதிகாரிகள்தான். ஒரு வகையில் எப்போதுமே அதிகாரத்தை சுவைக்க விரும்பும் அவ்வர்க்கத்துக்கு ஜெயலலிதா தரும் கசப்பு மருந்து இது.

கையில் லத்திக்கம்பு கூட இல்லாமல், அவர் வாகனம் வரும் வழியில் பத்து அடிக்கு ஒருவராக நிற்கும் காவலர்களை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது. குறிப்பாக பெண் காவலர்கள். ஜெயலலிதாவை யாராவது குண்டூசியால் குத்த வந்தால் மட்டுமே இவர்களால் தடுக்க முடியும். பிறகு எதற்கு இவர்கள் கடும் வெயிலில் நிறுத்தப்படுகிறார்கள்? இரண்டு மணி நேரத்துக்கு மேல் வெயிலில் நிற்க வைக்கப்படும் ஒரு பெண் கான்ஸ்டபிள் குறித்து இந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதாவது ஜெயலலிதா சிந்தித்திருந்தால் இப்போதைய “பரப்புரை வெயில் மரணங்கள்” நிகழ்ந்திருக்காது. ஆனால் “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்குத் தெரியும்” என்ற பினாத்தல்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.

இதை இன்னும் நுணுக்கமாகப் பார்க்கையில் ஒரு சிவில் சமூகமாக நாமே கூட ‘ஜெயலலிதாயிஸம்’ என்பதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் கூட வருகிறது. எங்கோ ஒரு இடத்தில் சர்வாதிகாரம் குறித்த ஏக்கம் நமக்குள் இருக்கிறது. அதனால் தான் “அவர்களை அந்த இடத்தில் வைக்கவில்லை என்றால் சரியாக வராது” என்று அவர் முன் வளைபவர்களை நாம் தூற்றுகிறோம். ஜெயலலிதாவின் சீரழிவுகளைக் கூட அவரது ஆளுமைத் திறனாக நாம் இனங்காணுவது அதனால்தான். இதன் உச்சமாக ஜெயலலிதாவை சகித்துக்கொள்ள நமக்கு கருணாநிதி என்கிற ஒரு காரணம் போதுமாக இருக்கிறது. இந்த பக்கம் பாழுங்கிணறு, அந்த பக்கம் பாதாள கிணறு.

ஆனால் இந்த மனநிலையில் வெளிச்சம் பாய்ச்சும் ஒரு சிறிய முன்னகர்வை ம.ந.கூ ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்தக் கூட்டணியின் அபத்தங்களைப் புறந்தள்ளி விட்டு பார்த்தால், திமுக அல்லது அதிமுகவுக்கு மாற்றாக பொருட்படுத்தக் கூடிய ஒரு அணியாக அவர்கள் ஒருங்கிணைந்திருப்பது தமிழகத்துக்கு நல்லது தான். அதன் வீச்சு நிஜமாகவே கவனிக்கத்தக்கது. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பெருமிதத்தில் விம்முவதற்குக் காரணம், இரு பெரிய கட்சிகளின் அவமதிப்பிலிருந்து அவரால் வெளியேற முடிந்தது தான். இதே மனநிலைதான் திருமாவுக்கும் இருக்கக் கூடும். கம்யூனிஸ்ட்களை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. விஜயகாந்தை பொக்கிஷமாகக் கருதும் நிலைக்கு அவர்கள் போவது அதனால்தான்.

ஆனால் பிரேமலதாவை அவர்கள் ஆளுமையாகப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட ஜெயாவிடம் முதுகை வளைத்த பழைய மனநிலையில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை என்பதையேக் காட்டுகிறது. குறிப்பாக மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட், நன்மாறனின் மதுரை பேச்சு. எப்படி இருந்தாலும், தேர்தலுக்குப் பின்புதான் நமக்கு நிறைய சுவராஸ்யங்கள் காத்திருக்கின்றன. இந்த தேர்தலில் நமக்கு மிஞ்சுவது அது மட்டுமாகக் கூட இருக்கலாம்.

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.

வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.