“பிள்ளைகளை கவனித்துக்கொள்” என்பதுதான், கனகையா என்ற விவசாயியின், தற்கொலைக்கு முன்னான கடைசி வார்த்தையாக இருந்திருக்கிறது.
எப்போதாவது தலைகாட்டும் மின்சாரத்திற்காகவும், அரிதிலும் அரிதாக வரும் தண்ணீருக்காகவும், பாளம் வெடித்த தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் இரவு தங்குவது என்பது கனகய்யாவுக்கு இயல்பான ஒன்றுதான்.
ஆனால், “பிள்ளைகளை கவனித்துக்கொள்” சொன்ன அந்த கடைசி தொலைபேசிக்கு பின், எந்த ஒரு அழைப்பும் இல்லாததால், தெரிந்தவர்களை அழைத்து கொண்டு, அந்த ரெண்டு ஏக்கர் நிலத்திற்கு போன அவரின் மனைவி பார்த்தது, அங்கிருந்த புளிய மரத்தில் தொங்கி கொண்டிருந்த 32 வயதான கனகைய்யாவின் உடலை மட்டுமே.
நான்கு முறை தோல்வியில் முடிந்த போர்வெல், அதற்கு வாங்கிய கடன், வராத தண்ணீரும் மின்சாரமும் என்று வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிய கனகைய்யாவுக்கு தற்கொலை மிக எளிதான தீர்வாக அமைந்து விட்டது.
தொங்கிய உடலில் இருந்த சட்டைப்பையில் வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே மிஞ்சிய நிலையில், கனகைய்யாவின் இறுதி காரியங்களையும் கடன் வாங்கி செய்திருக்கிறார் அவரின் இளம் மனைவி.
வறட்சியினால் எந்த விவசாய வேலையும் இல்லாத சூழலில், கனகைய்யாவின் இறுதி காரியங்களின் போது வந்த அரிசியை வைத்து உணவு தயாரித்து கொள்கிறார்கள் இந்த குடும்பத்தினர்.
தன்னுடைய வாழ்நாளில் இது போன்ற ஒரு வறட்சியை கண்டதில்லை என்று கண் கலங்குகிறார் கனகைய்யாவின், வயது முதிர்ந்த பாட்டி.
மூன்று வருடங்களுக்கு முன், தனி மாநிலமாக ஆனா தெலுங்கானாவில்தான், மேற்கூறிய கொடூரம் நடந்திருக்கிறது. மூன்று வருடத்திற்குள் இரண்டாயிரம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி இருக்கிறது வறட்சி. தெலுங்கானா மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் கிராமங்கள் அனைத்துமே தண்ணீரற்ற சூழலில் விவசாயிகளை மரணத்திற்கு துரத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடங்கி இருப்பது அச்சமூட்டவே செய்கிறது.
அந்நிய நிறுவனங்களுக்கு, தண்ணீர் அளிப்பதில் தாராளமய கொள்கையை கடை பிடிக்கும் அரசுகளும், அந்த நிறுவனத்தில் பங்குகளை பெறுவதற்காக நாட்டை விலை பேசும் அரசியல்வாதிகளும் விவசாயிகளை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை என்றால், ஒரு நாள் கொத்துகொத்தாக விவசாயிகள் மடியும் சூழல்தான் மிஞ்சப்போகிறது.