அரசியல்வாதிகளே…பேராசிரியர் முத்துக்குமரனை நினைவிருக்கிறதா?

ஆ.விஜயானந்த்

பேராசிரியர் முத்துக்குமரன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்தவர். சமச்சீர் கல்விக் குழுவின் தலைவராக பதவி வகித்தவர். அவரது இறப்பு குறித்த செய்தி நாளேடுகளில் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் சோகம்.இன்றைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூற்றுக்கணக்கான சென்ட்டம்களும், மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான முதலிடங்களும் உருவாகக் களம் அமைத்தவர் முத்துக்குமரன். சமீபநாட்களாக, நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், நேற்று முன்தினம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய பாதைகளும், அதற்காக பட்ட கஷ்டங்களும் இன்றைய தலைமுறை அறியாதது.

திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்குமரன், அடிப்படையில் கட்டடப் பொறியாளர். சென்னை, நந்தனம் டவர் அவருடைய உழைப்பை இன்றைக்கும் சொல்லும். சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர். 1981-ம் ஆண்டு முதல் 88-ம் ஆண்டு வரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், 88-ம் ஆண்டு முதல் 94-ம் ஆண்டு வரையில் இரண்டு முறை திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர்.

மிக மூத்த கல்வியாளரான முத்துக்குமரனிடம், கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை வழங்கினார் அப்போதைய முதல்வரான கருணாநிதி. தன்னுடன் சில கல்வியாளர்களை சேர்த்துக் கொண்டு இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார் முத்துக்குமரன். சமச்சீர் பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியானபோது, மிகுந்த சங்கடத்தில் இருந்தார் அவர். பெசன்ட் நகரில் உள்ள அவரது சிறிய அறையில், காகிதக் கட்டுகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்.

நீண்ட பெருமூச்சோடு நம்மிடம் அவர் பேசும்போது, ” ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கும் கல்வியை ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். உலகின் பல நாடுகள் தங்களது தாய்மொழிக் கல்வியிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன. நமக்கு ஆங்கிலம் அவசியமில்லை. ஜப்பான் நாட்டினர் தங்களது தாய்மொழியை விட்டுக் கொடுக்காமல் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளனர். நாம்தான் தாய்மொழியை தவிர்த்துவிட்டு, ஆங்கிலத்திற்குக் கொடி பிடிக்கிறோம். கருணாநிதியிடம் வரைவு அறிக்கை கொடுத்தபோது, ‘ஆங்கிலம் வேண்டாம்’ என்று நான் சொன்னதை அவர் ஏற்கவில்லை. என்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டு சமச்சீர் கல்வி உருவாக்கப்படவில்லை” என பகிரங்கமாகப் பேசினார் முத்துக்குமரன்.

அப்போது ஆட்சியில் தி.மு.க இருந்தது. ஆட்சியாளர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் அவர் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. அவர் மனதிற்கு எது சரியோ, அதை நிலைநாட்டுவதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். சமச்சீர் கல்வியில் அவர் விரும்பிய மாற்றம் இறுதிவரை இடம்பெறவில்லை.

கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலகட்டங்களில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பயிற்று மொழி, கலைச் சொல் ஆக்கம் என மாணவர்களிடம் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டு வந்தார். துணைவேந்தராகப் பதவி வகித்தபோது, ஐந்து துறைகளுக்குத் தேவையான எல்லா பாடநூல்களையும் தமிழில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்தவர் முத்துக்குமரன். அனைத்துத் துறைகளிலும் தமிழின் மூலம் சாதிக்க முடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தார்.

இன்று பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதிக் காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பழ.நெடுமாறன் மட்டும் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். வேறெந்த அரசியல் முகங்களும் அங்கே இல்லை.

பேராசிரியரின் இளைய மகனான மேகநாதனிடம் பேசினோம். ” தன்னைப் பார்க்க வரும் மாணவர்களிடம் அவர் ஒன்றை மட்டும்தான் சொல்வார். ‘நீ எதை வேண்டுமானாலும் எடுத்துப் படி. அது உன்னுடைய விருப்பம். ஆனால், அந்தப் படிப்பில் நீ முதல் ஆளாக வர வேண்டும். தாய்மொழியை மறந்துவிடக் கூடாது’ என்பதுதான். மதுவிலக்கும், தமிழ் ஆட்சி மொழியும் அவரது இரண்டு கண்களாக இருந்தன. இரண்டும் நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டன. கடந்த ஜனவரி மாதம் மதுவிலக்கு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை வருவோர் போவோரிடம் எல்லாம் கொடுத்து, ‘ தலைமுறையையே மதுவைக் கொண்டு அழித்துவிட்டார்கள். நமது நாட்டை விட்டே மதுவை அப்புறப்படுத்த வேண்டும்’ எனக் கொதிப்போடு பேசினார். உடல்நலமில்லாத போதும், இளைய தலைமுறையை நினைத்துக் கவலைப்பட்டார்.

அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை மாற்ற மாட்டார் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும்போது, அப்பாவிடம் ஏதோ ஒரு வேலை சொல்ல நேரடியாக கலைஞர் போனில் பேசினார். ‘முதல் அமைச்சர் பேசுகிறார்’ என்றெல்லாம் பார்க்காமல், ‘அதையெல்லாம் செய்ய முடியாது’ என மறுத்துவிட்டார். பிறகு பேராசிரியர் அன்பழகன்தான் சமாதானம் செய்து வைத்தார். ஆட்சியாளர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக ஆளுநரால் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் அப்பா. ‘தான் வலிமையான ஆள்’ என்பதை உறுதியாக நம்புவார். என்னுடைய பள்ளிப் படிப்பு முழுவதையும் தமிழ்வழியில்தான் படித்தேன். அதையும் அப்பா விரும்பித்தான் செய்தார்.

2012-ம் வருடம், நுரையீரல் கட்டி உருவானது தெரிந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அதன்பிறகு ரொம்பவே சோர்ந்துவிட்டார். வருகிற மே 28-ம் தேதியோடு அவருக்கு 85 வயது தொடங்க இருக்கிறது. அந்த நிகழ்வைக் கொள்ளுப் பேத்தியோடு திருவாரூரில் கொண்டாட வேண்டும் என விரும்பினார். அதுவும் நிறைவேறாமல் போய்விட்டது. அப்பாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த கலைஞரோ, பேராசிரியரோ யாரும் வரவில்லை. அவர்கள் வருவதாகவும் தகவல் வரவில்லை. மதுவிலக்கும், தமிழ் ஆட்சிமொழி என்பதும்தான் அப்பாவின் லட்சியங்களாக இருந்தன. அவை என்று நிறைவேறுகிறதோ, அன்றுதான் அவருடைய ஆன்மா சாந்தியடையும்” என்றார் வேதனையோடு.

பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் வரவேற்பரையில், யாரையும் வரவேற்காமல் படுத்துக் கிடக்கிறார் பேராசிரியர் முத்துக்குமரன். அனைத்து துறைகளிலும் ‘தமிழ்…’ என முழங்கியதோடு மட்டுமல்லாமல், செயல்படுத்தியும் காட்டியவர்.

அவரது இறுதிப் பயணத்திற்கு வழியனுப்பக்கூட, கருணாநிதி போகாமல் இருப்பதுதான் செம்மொழிக்குச் செய்யும் மரியாதையா?

நன்றி: விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.