“சன்மார்க்க நேசன்’ மாத இதழின் 11-ஆம் ஆண்டு விழா, சன்மார்க்க அறக்கட்டளை தொடக்க விழா, சன்மார்க்க அச்சகம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சன்மார்க்க நேசன் அறக்கட்டளையைத் தொடக்கி வைத்துப் பேசியதை வெளியிட்டுள்ளது தினமணி. அதில்,
“சன்மார்க்கத்தின் அடிப்படை கொல்லாமையும், புலால் மறுத்தலும். வள்ளுவரும், வள்ளலாரும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் இடமும் இதுதான். தற்போதைய சூழலில் முழுமையாக புலால் உண்ணாத உலகத்தை உருவாக்க முடியுமா என்று கேட்டால் முடியாதுதான். ஆனால், புலால் உண்பதைக் குறைப்பது என்பது நிச்சயம் சாத்தியப்படும்.
மாமிச உணவு நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். தமிழகம் போன்ற வெப்ப பூமியில் வசிக்கும் நாம், புலால் உணவைச் சாப்பிடும்போது உடலின் வெப்பம் மேலும் கூடும். உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கு உடலில் உஷ்ணம் அதிகரிப்பதும் கொழுப்புச்சத்து சேர்வதும்தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் 40 வயது ஆகும்போதே இருதய அறுவைச் சிகிச்சை செய்யாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படும்.
சிறுவயதிலேயே அவர்களுக்கு மாமிச உணவில் ஆர்வம் ஏற்படுத்துவது, அவர்களை இளமையிலேயே நோயாளிகளாக்கும் ஆபத்துக்கான ஆரம்பம் என்பதை பெற்றோர் ஏனோ உணர்வதில்லை. சிறுவயதில் தனக்குக் கிடைக்காதது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதன் விளைவுதான் இது. மேலும், குழந்தைகளின் உடல்நிலையும் இதனால் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எனவே, மாமிச உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இன்று எந்தத் தெருவில் பார்த்தாலும் மாமிசக்கடைகள் இருக்கின்றன. பல வீடுகளில் வாரத்துக்கு தினப்படியாக மாமிச உணவுகள் சமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால் படிப்படியான மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
முதலாவதாக தெருவோரம் நடத்தப்படும் மாமிசக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும். இரண்டாவது, வீடுகளில் “வாரத்துக்கு ஒரு முறை மட்டும்தான் புலால் உணவு சாப்பிடுவது’ என்ற வரைமுறை வர வேண்டும். மூன்றாவது குழந்தைகளுக்கு புலால் உணவு கொடுத்துக் கெடுப்பதை நிறுத்த வேண்டும். கடைசியாக, அன்னிய மோகத்தை ஏற்படுத்தும் “டாடி’, “மம்மி’ கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார் கி.வைத்தியநாதன்.
தினமணி ஆசிரியருக்கும் அசைவம்தான் அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பவர்களுக்கும் சில கேள்விகள்..
1) சைவ உணவு உண்பவர்களுக்கு நோய்கள் வருவதில்லையா?
2) அசைவ உணவு மட்டுமே உடலில் கொழுப்பை சேர்க்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?
3) வெப்பம் அதிகமான இந்தியா போன்ற நாடுகளில் மாமிசம் சாப்பிடக்கூடாது என்கிற உண்மையை எந்த ஆய்வு நிரூபித்தது?