கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

தமிழில் : ச.வீரமணி.

2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா?

இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். … ஒரு நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற்றால், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொள்ளும் என்றே நான் நினைக்கிறேன்.

கேரளா குறித்து என்ன சொல்கிறீர்கள்? அங்கே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கூட்டணியா?

இந்த முறை அங்கே அரசாங்கம் அமைக்கப்போவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கூட்டணிதான் என்பது நிச்சயம்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் உடன்பாடு, கேரளாவில் காங்கிரசுக்கு எதிராகப் போராட்டம். முரண்பாடாகத் தெரியவில்லையா?

எவ்விதத்திலும் முரண்பாடு கிடையாது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் நாங்கள் காங்கிரசுடன் எவ்விதமான அரசியல் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ வைத்துக்கொள்ளவில்லை. இரு கட்சித் தலைமையும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, கைகுலுக்கிக் கொள்ளவும் இல்லை, ஒன்றிணைந்து செல்வோம் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. வங்கத்தில் உள்ள நிலைமை, வழக்கமான நிலைமைகளிலிருந்து வேறுபட்டது. திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் எக்காரணம் கொண்டும் பிளவுபட்டுவிடக் கூடாது என்று அடிமட்டத்திலிருந்து பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு அடிமட்டத்திலிருந்து எழுச்சி வருமானால் நீங்கள் ஏன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது?

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இதுதொடர்பாக ஓர் அரசியல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதில் தேர்தல் உத்திகள் நெகிழ்வுத் தன்மையுடன் இருந்திடும் என்று கூறியிருக்கிறோம். ஆனால் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியுடன் எவ்விதமான கூட்டணியும் இருக்காது என்றும் கூறியிருக்கிறோம். ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கைகளைப் பொறுத்த வரையில், மிக மிக ஆழமான முறையில் வித்தியாசங்கள் உண்டு.

ஒரு வேளை மேற்குவங்கத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், நீங்கள் இருவரும் சேர்ந்து அரசாங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பொருத்தமற்றதெனக் கூறுகிறீர்களா?

அத்தகையதொரு நிலைமை எழும்போது நாங்கள் அதுபற்றி விவாதிப்போம். … நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியதைப்போல, காங்கிரசுடன் கூட்டணி கிடையாது, புரிந்துணர்வும் கிடையாது. இது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் முடிவாகும். கட்சியின் அடுத்த அகில இந்திய மாநாடுதான் இதனை மாற்ற முடியும். அதனை மாற்றுவதற்கான அதிகாரம் எவரொருவருக்கும் இல்லை. எனவே அது நீடிக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பீர்களா?

அதுபோன்று நிலை உருவானால் என்னவென்று பார்ப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த அகில இந்திய மாநாடு நடைபெறும்போது, கீழேயிருந்து அதுபோன்று நிர்ப்பந்தங்கள் வரும்போது எப்படி கட்சியின் அகில இந்திய மாநாடு முடிவு எடுக்கும்?

அவசரநிலைக் காலத்தில் கூட, ஜனதா கட்சி அரசாங்கத்திற்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுச் சொத்துரிமையாகும். இதனை “வெளியிலிருந்து ஆதரவு’’ என்றும் கூறலாம்.

முதல் முறையாக, மேற்கு வங்கத்தில் கட்சியின் மாநில செயலாளர் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். கேரளாவில் இது ஏன் நடைபெறவில்லை?

வங்கத்தில் உள்ள வழக்கத்திற்கு மீறிய நிலைதான் காரணம் என்று மீண்டும் கூறுகிறேன். சாதாரணமாக, எமது கட்சியின் மாநில செயலாளர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஏனெனில் கட்சி ஸ்தாபனம் முக்கியம். ஆனால், வங்கத்தில், டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்க் கட்சியின் முகமாக முன்னேறி வந்திருக்கிறார். வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற அரசியலில் போராட்டங்களின் அடையாளமாக அவர் இருந்து வருகிறார். எனவே, இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும், அது முக்கியம் என்று கட்சி கருதியது.

surya

டாக்டர் சூர்யகாந்த மிஸ்ராவுக்கு இணையாக கேரளாவில் யார் உங்கள் தலைவர்? மாநிலத்தில் எதிர்க்கட்சியின் முகமாக பினராயி விஜயன் மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியவர்களுக்கிடையே யார்?

முகம் என்பது எப்போதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள்-சுத்தியல்தான். அதன்பின்னர் சில தனிநபர்களின் முகங்கள். பினராயி விஜயனும் மக்களின் அடையாளமாக முன்னேறியுள்ளார். … வடக்கே இருந்து தெற்கே வரை பிரம்மாண்டமான நடைபயணம் அவர் தலைமையில் நடந்திருக்கிறது. அங்கே எழுந்த அனைத்துப் பிரச்சனைகளிலும், அங்கே நாங்கள் முன்வைத்த மாற்றுக் கொள்கைகள் அனைத்திலும் அவர் இருந்தார்… அதேபோன்று வி.எஸ்.அச்சுதானந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். பல ஆண்டு காலமாக அவரும், அவரது பங்களிப்பும் இருந்து வருகிறது. அவர் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்புடன் போற்றப்படும் தலைவர். கொள்கைகள் மற்றும் அரசியல் அறநெறி, ஊழலுக்கு எதிராக நிற்பது போன்றவற்றில் அவரின் நிலைப்பாடு மிகவும் உறுதிவாய்ந்தவைகளாகும். எனவே, இவ்விரு முகங்களுமே அங்கே இருக்கின்றன. அவர்கள் கட்சியின் கூட்டு முகமாகும்.

புத்ததேவ் பட்டாச்சார்யா ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை?

வங்கத்தில் இன்னும் ஐந்து கட்டங்கள் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அவர் ஒரு மாபெரும் தலைவர், பேச்சாளர். பொருத்தமான நேரத்தில் அவர் பிரச்சாரத்திற்கு வருவார்.

ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு தலித் குழுக்கள் போன்று புதிய சக்திகள் பல உருவாகியிருக்கக்கூடிய நிலையில், இடதுசாரிகள் தங்கள் ஆற்றலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா?

மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறுவது புதிதாகப் பிறத்தல் என்பது போலாகிவிடும். ஆயினும் இடதுசாரிகள் புதிய நிலைமைகளுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுதான் மார்க்சியத்தின் அடிநாதமாகும் என்று நான் நம்புகிறேன். துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு, அதுவே சாராம்சம். துல்லியமான நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கும் போது, துல்லியமான ஆய்வுகள் மாறவில்லை என்றால், நீங்கள் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல. … ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே புடம் போட்டுக் கொண்டும் இயங்கிக் கொண்டும் இருந்திட வேண்டும். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, இடதுசாரிகள் பின்னே இளைஞர்களே இல்லையே என்று கேள்வி கேட்டீர்கள்… இப்போது ஜேஎன்யுவில் கன்னய்யாவைப் பார்க்கிறீர்கள், ஹைதராபாத்தில் ரோஹித்தைப் பார்க்கிறீர்கள், புனே திரைப்படக் கல்லூரியில் என்ன நடந்தது? அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இடதுசாரி அமைப்பிலிருந்து ஒரு மாணவி போட்டியிட்டு மாணவர் பேரவைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இடதுசாரிகளின் இடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடித்துக்கொண்டு விட்டதா? இடதுசாரிகள் மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே இருக்கிறதா?

நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது இருந்த அளவிற்கு செல்வாக்கு இப்போதும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?அவர்கள் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போதிலும், அதே செல்வாக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தில்லி மற்றும் பீகார் தேர்தல்களின் போது உள்ள நிலைமையை பரிசீலித்தோமானால், 2014இல் அவருக்கிருந்த செல்வாக்கை இங்கே நடைபெற்ற தேர்தல்களில் அவரால் பிரதிபலிக்க முடியவில்லையே. இவ்வளவு வேகமாக அவர் வீழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இதுபோன்ற வீழ்ச்சியை வேறெங்கும் பார்த்தது இல்லை.

இடதுசாரிகள் ஈர்க்கக்கூடிய விதத்தில் இருக்கிறார்களா என்பது கேள்வியே இல்லை. பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதே கேள்வி. பல பிரச்சனைகளில் இடதுசாரிகள் கூறுவதைத்தான் ஆம் ஆத்மி கட்சியும் கூறுகிறது. ஆயினும் தில்லி போன்ற இடங்களில் அவர்களுக்குத் தங்கள் கருத்துக்களை, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு பலம் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அம்சங்களில் நாங்கள் பின்தங்கி இருந்தோம். … ஆனால் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். சற்றே தாமதித்து விட்டோம், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போது நாங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஒரு சக்தியாக இருக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. இதனை மேலும் மேம்படுத்துவோம்.

Narendra_Modi_1525585f

நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது இருந்த அளவிற்கு செல்வாக்கு இப்போதும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர்கள் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போதிலும், அதே செல்வாக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தில்லி மற்றும் பீகார் தேர்தல்களின் போது உள்ள நிலைமையை பரிசீலித்தோமானால், 2014இல் அவருக்கிருந்த செல்வாக்கை இங்கே நடைபெற்ற தேர்தல்களில் அவரால் பிரதிபலிக்க முடியவில்லையே. இவ்வளவு வேகமாக அவர் வீழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இதுபோன்ற வீழ்ச்சியை வேறெங்கும் பார்த்தது இல்லை.

பீகாரில் ஏற்பட்டதுபோன்ற கூட்டணிகள் உருவாவது முன்னேற்றத்திற்கான வழியா?

இன்றைய நிலைமை மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவசரநிலைக் காலத்தின் கடைசி மாதங்களில் இருந்த நிலைமையை ஒத்திருக்கிறது. முழுக்க முழுக்க அன்றைக்கிருந்த நிலைமை போன்றில்லை என்றபோதிலும், அந்தத் திசைவழியில் நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனை ஒருமுகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். பல்கலைக் கழகங்களின் மீதான தாக்குதல்கள், சகிப்பின்மை பிரச்சனை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் தலித்துகள் தூக்கிலிடப்பட்ட கொடுமை… இதுபோன்று நாட்டின் பல முனைகளிலும் இந்துத்துவா கும்பல்கள் பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக மக்களின் சீற்றமும் எதிர்ப்பும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விதத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மிக வேகமான முறையில், மிக விரிவான அளவில் எதிர்ப்பியக்கங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதன்காரணமாகத்தான் எவரும் எதிர்பாராத அளவிற்கு பீகாரில் பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒரு மகா கூட்டணியை அமைத்தன. இப்படி ஓர் ஒற்றுமை கட்டப்பட வேண்டும் என்று, கட்சிகளின் அடிமட்ட ஊழியர்கள் தங்கள் கட்சித் தலைமைக்கு நிர்ப்பந்தங்களை அளித்தனர். இதனைக் கட்சித் தலைமைகளும் உணர்ந்தன. தில்லியில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகள் எப்படி இருந்த போதிலும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபம் மக்களிடம் ஆழமாக இருந்தது.

நிலைமைகள் சாதகமாக இருக்கக்கூடிய சூழலில்கூட, மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்திட, உங்கள் கட்சியின் அகில இந்திய மாநாடு முகம் சுழிப்பது ஏன்?

1977அரசாங்கமாக இருந்தாலும் சரி, 1989 வி.பி.சிங் அரசாங்கமாக இருந்தாலும் சரி, 1996 ஐக்கிய முன்னணி அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது 2004 ஐமுகூ அரசாங்கமாக இருந்தாலும் சரி – அவை கடைப்பிடித்த கொள்கைகள் அனைத்துமே இறுதியில் நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானவைகளாகவே முடிந்தன என்பதையே எங்கள் இறுதி ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவேதான் அவை ஒவ்வொன்றுடனும் எங்களுக்கு முறிவு ஏற்பட்டுவிடும். குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அந்த அரசாங்கங்கள் மீறியதன் அடிப்படையிலேயே இத்தகைய முறிவு ஏற்பட்டது.

அத்தகு ஆட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஓர் அங்கமாக இருந்திருந்தால், அந்த ஆட்சிகள் கொள்கைகளை `மீறுவது’ நடந்திருக்காது அல்லவா?

இது வெறும் ஊகம்தான். இந்த விசயத்தில் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ள விரும்பினோம். நீங்கள் சொல்வதுபோல் அரசாங்கத்தில் ஓர் அங்கமாக ஆகியிருந்தால், பின் நாங்களும் அவர்களின் தவறுகளுக்குத் துணை போனவர்களாகிவிடுவோம்.

vemula

ஹைதராபாத் மற்றும் ஜேஎன்யு பல்கலைக் கழக விசயங்களுக்கு வருவோம்… வளாகங்களில் இயங்கும் ஜெய் பீம் (அம்பேத்கரிய) குழுக்கள், சமூக மாற்றத்திற்கான இடதுசாரி சித்தாந்தத்தின் பிரதிநிதிகள்தான் (proxy) என்று ஏபிவிபி கூறுகிறதே.

அது அவர்களின் கற்பனையான சிந்தனையே.

செவ்வணக்கம் (லால் சலாம்) என்பதற்கும் ஜெய் பீம் என்பதற்குமான வித்தியாசம் என்ன? பல்கலைக் கழக வளாகம் இரு தரப்பும் சந்திக்கும் ஒரு மையமாக உருவெடுக்கிறதா?

ஜெய் பீம் என்பது சில சமயங்களில் முழுக்க முழுக்க தலித் உரிமைகளுக்கான ஒரு மார்க்கமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. செவ்வணக்கம் என்பது எங்களுடைய முழக்கமாகும். தலித் உரிமைகள்கூட, தலித்துகளுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும்போதுதான் அமல்படுத்திட முடியும். அதற்கு சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது அவசியம். அங்கேதான் சந்திப்புப் புள்ளி உருவாகிறது. ஜெய் பீம் முழக்கமும், லால் சலாம் (செவ்வணக்கம்) முழக்கமும் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) முழக்கத்துடன் ஒருங்கிணைந்திட வேண்டும். அதுவே, இடதுசாரிகள் மற்றும் தலித் குழுக்களுக்கு இடையிலான சந்திப்புக் குவி மையமாகும்.

kannaiya

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர்கள் இயக்கத்தின் மூலம் உருவானவர்கள். நாம் இப்போது சற்றுமுன் பேசினோமே அதுபோன்ற இடதுசாரிகள் – தலித் குழுக்களுக்கு இடையிலான சந்திப்புக் குவி மையத்தின் மூலம் உருவானவர்தான் ரோஹித். கன்னய்யாவும் அப்படியே. இவ்வாறு இவ்விரு இயக்கங்களுக்கும் இடையிலான நேச உறவு மற்றும் புரிதலின் மூலம் உருவானவர்கள்தான் இவ்விருவருமே. இவ்விரு இயக்கங்களுக்கும் இடையே நேசமும் புரிதலும் ஏற்படுவது நாட்டிற்கு மிக மிக நல்லது, ஆக்கப்பூர்வமானது. இடதுசாரிகள் விரும்புவது என்னவெனில், இவ்வாறு நடைபெறும் நட்புறவு ஒரு சரியான திசைவழியில் அமைந்திட வேண்டும், இல்லையேல் அது தவறான பாதையில் இயக்கத்தை சிதறடித்துவிடும். இப்படிப்பட்ட நேச உறவுகள் தொழிலாளர் வர்க்கத்திற்கிடையேயும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இன்றைய தினம் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுக்கும்போது அவற்றுடன் ஐஎன்டியுசி, பிஎம்எஸ் போன்ற சங்கங்களும் இணையும் என்று இதற்குமுன் எவரேனும் கற்பனை செய்து பார்த்திருக்கிறோமா?

நன்றி: தீக்கதிர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.