ஆறு மாதத்துக்கு முன்பு வெங்காயம் விலை ரூ. 150 வரை விற்கப்பட்டது. உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆனது. ஆனால், இப்போது வெங்காயம் விலை ஒரு ரூபாய்க்கும் குறைந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெங்காய உற்பத்தி அதிகமாகிவிட்ட காரணத்தால், மொத்த விலை மண்டிகளில் வெங்காயம் கிலோ 30 பைசாவுக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தின் நிமூச் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கே அதிகப் படியாக, ஒரு நாளைக்கு 4000 மூட்டைகளுக்கும் மேல் உற்பத்தியான வெங்காயம் குவிவதால் வியாபாரிகள் கிலோ 30 பைசாவுக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்குகின்றனர்.
கீழே கொட்டமுடியாத சூழலில் 30 பைசாவுக்கு விற்றுவிட்டி திரும்புகின்றனர் விவசாயிகள். வியாபாரிகள் தரப்பிலோ, அதிகப்படியான விளைச்சலாலும் வாங்கும் டிமாண்ட் குறைவாக இருப்பதாலும் இந்த விலை என்கிறார்கள்.
வெங்காயம் அதிக விலை விற்றபோது, போர்க்கால அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை தருவித்தது மத்திய அரசு. தற்போது வெங்காயம் படுமோசமான விலை வீழ்ச்சியை அடைந்திருக்கும் நிலையில் விவசாயிகளை காப்பாற்ற என்ன செய்யப் போகிறது? மத்திய பிரதேசத்தை ஆள்வதும் பாஜக அரசுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.