ப்ரேமா ரேவதி

மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென
“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என ஒரு கணம் திகைத்து போனேன். பிரஷாந்த் மருத்துவமனை வாசலில் இருக்கும் ஆட்டோ சங்க தோழர்கள் அந்த அதிவசதி சாலையில் நீலக் கொடிகளைக் கட்டி வருபவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் அணிவில்லைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இறங்கி சென்று நாங்களும் அவற்றை அணிந்துகொண்டோம். ஜெய் பீம் என்ற வாழ்த்துடன். விவரிக்க முடியாத ஒரு பெருமையும் நெகிழ்வும் வார்த்தைகளற்று அங்கே பரிமாறப்பட்டது.
ஜெய் பீம்! மனதில் ஒரு பெரும் உத்வேகத்தை கூட்டும் இம்முழக்கம் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளான அதுவும் அவரது 125ம் பிறந்த நாள் நிகழ்வில் கேட்டதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் இதன் முன்பான வருடங்களில் இல்லாத ஒரு அழுத்தம் இன்றைய ஜெய் பீமில் இருந்தது. வெறும் தட்டையான அடையாளமாக தன்னை குறுக்கும் இவ்வுலகை விட்டு விண்மீண்களோடு வாழப்போன அந்த இளைஞன் “இறுதியாக ஒருமுறை” என சொல்லிப்போன ஜெய் பீமின் கனம் நிறைந்திருந்தது அதில். அந்த இறுதி ஜெய் பீம் இந்தியா முழுவதும் எதிரொலித்த பேரெழுச்சியின் வலி நிறைந்த வீரியம் கொண்டு இன்றைய ஜெய் பீம் இருந்ததாகவே பட்டது.
அம்பேதகர் மணிமண்டபம் ஏப்ரல் 14ல் எப்போதும் அணியும் விழாக்கோலத்தை இன்றும் கொண்டிருந்தது. இன்றைய நிகழ்வில் ரோஹித்தின் முகம் பல பதாகைகளில் காணக் கிடைத்தது. எப்போதும் போல அம்பேத்கரின் முகம் பதித்த பல விதமான அணிவில்லைகள், ஒட்டுவில்லைகள், புத்தரின் சிலைகள், நாட்காட்டிகள், இன்னும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மணிமண்டபத்தில் கொலுவிருந்தன. பலப் பல கட்சிகளும் குழுக்களும் கொடியேந்தி பறையொலி அதிர வந்து வீர வணக்கம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வருடமும் போலவே புத்தர் கலைக் குழுவின் பறைக் கலைஞர்களும் பறை அடியை பயிலும் அனைத்து சாதி மாணவர்களும் வந்து பறையடித்து “சாவுக்கு அடிக்க மாட்டோம், சாதி எதிர்ப்பு போராட்டத்திற்கு அடிப்போம்! இது பாண்டியன் மீது ஆணை” என வட தமிழகத்தில் 90களின் எழுச்சியில் சாவுக்கு பறை அடிக்க மாட்டோம் இழிதொழிலை ஏற்க மாட்டோம் எனப் போராடியதால் கொல்லப்பட்ட பாண்டியனின் நினைவை அந்த மண்டப சுவர்கள் அதிர பறையடித்து நினைவு படுத்தினார்கள்.
இந்த ஆண்டு நான் மிக மதிக்கும் இரு நண்பர்களுக்கு அம்பேத்கர் பேரொளி விருது வழங்கப் பட்டது. மிக துணிச்சலான களப் போராளியும், தீவிரமான எழுத்து வன்மை கொண்டவரும் தொடர்ந்து தலித்துகளின் மீதான வன்முறைகளை பதிவு செய்து வரும் தோழி ஜெயராணிக்கு விருது வழங்கப் பட்டது. அம்பேத்கரை அவரவர் தேவைக்கு கத்தரித்து எடுத்துக்கொள்ளும் நிலை இன்று இருக்கிறது அம்பேத்கரின் மிக முக்கிய கூறான அதிகாரத்திற்கு எதிராய் நின்று சாதி ஒழிப்பை பேசியதும், நவீன இந்தியாவின் தந்தை என்ற முறையில் அவர் பண்படுதலே பண்பாடு என மொழிந்து அனைவரையும் சமத்துவமாய் பண்படச் சொன்னதையும் அவர் தனது ஏற்புரையில் சொன்னது பொருத்தமாய் இருந்தது.
தலித் மக்களின் வரலாற்றை தலித் அறிவுச் செயல்பாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை தேடித்தேடி எழுதி வரும் மிக முக்கியமான பணியை ஆற்றிக் கோண்டிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கமும் இந்த அம்பேத்கர் பேரொளி விருதை பெற்றார். எந்த புகழையும் நாடமால் தலித் சமூகத்துக்காக எவ்வளவோ வழிகளில் பணிபுரிந்த பல மூதாதையர்களின் முன்னால் தனது பணி ஒன்றும் பெரிதானதில்லை என திருச்சியில் 50களில் தலித் பெண்களுக்கான பள்ளியை நடத்திய வீரம்மாள், அவருக்குப் பிறகு அதை தொடரும் காமாட்சி போன்றோரின் நினைவுகளை பகிர்ந்தார். மேற்கு மாவட்டங்களில் கல்விப் பணியாற்றிவரும் சந்துரு, எழுத்தாளர் வே.மதிமாறன், சமூக செயல்பாட்டாளர் திரு.தேவதாஸ் மற்றும் சுவேதா ஜெயசங்கர் ஆகியோருக்கும் விருது வழங்கப் பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பல பகுதி குழந்தைகள் மணிமண்டபத்திற்கு வருகின்றனர். முழக்கமிடுகின்றனர். விளையாடுகின்றனர். ஓவியங்கள் வரைகின்றனர். அம்பேத்கரின் புத்தரின் முகங்களும் நீல நிறமும் அவர்களின் பிரிய வரைபொருட்களாக இருக்கின்றன. நான் மிக மதிக்கும் இரு இளம் பெண்ணியவாதிகளான ஆரம்பா மற்றும் தாரகை எனும் சிறுமிகள் உள்ளிட்ட ஒரு பெரும் சிறுவர் குழாம் ஒவ்வொரு ஆண்டும் மிக உயிர்ப்பான அம்பேத்கர் பாடல்களை பாடியும் ஒயில் பறை என ஆடியும் தமது வழிகாட்டியான அம்பேத்கருக்கு வணக்கம் செலுத்துகின்றனர். கடம்பாடி கிராமத்திலிருந்து இருளர் மற்றும் தலித் குழந்தைகளுக்கு அம்பேத்கர் குறித்த ஓவிய முகாம் ஒன்றை நடத்தி அவர்களுடைய ஓவியங்களையும் அக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார் ஓவியர் சந்துரு. நீங்கள்ளாம் ஏன் வந்திருக்கீங்க? எனக் கேட்ட உடன் அவர்களில் ஒரு சிறுவன், “நாங்கள்ளாம் அம்பேத்கர்” எனச்சொன்னான். அவனை விட மூத்தவன் ஒருவன், “நாங்கள்ளாம் அம்பேத்கரோட மாணவர்கள்” என்று முடித்தான்.
பல விதமான உணவு வகைகள் அங்கு வருபவர்களுக்கு வழங்கப் பட்டன. குடிநீரும் மோரும் பல முறை கிடைத்தது சுட்டெரிக்கும் சூரியனில் மிக இதமாக இருந்தது. நிகழ்வின் துவக்கத்தில் பேசிய பேராசிரியர் தயானந்தன் “நீங்க எந்த தலித் கிராமத்துக்கு போனாலும் உங்களுக்கு உணவு கிடைக்கும். கஞ்சியாவது கிடைக்கும் ஏனெனில் அது அவர்களுடைய பௌத்த பண்பாட்டின் விழுமியம். மதம் தொலைந்து போனாலும் அழியாமல் அவர்களிடையே எஞ்சி இருக்கிறது” எனச் சொன்னதை நடைமுறை படுத்துவதாகவே இந்த உணவு விநியோகங்கள் இருந்தன.
சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் பேரொளி விருது பெற வந்த தோழர் சந்தன மேரியின் உவகை எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் இராமநாதபுரத்தில் வாழ்பவர். மிகுந்த சாதீய வன்மம் இன்றளவும் செயல்படுகிற தென்மாவட்ட சாதி எதிர்ப்பு களங்களில் செயல்பட்டவர் படுபவர். அவரால் சென்னை மாநகரத்தின் சாலைகளெல்லாம் ஒட்டப்பட்டிருந்த அம்பேத்கர் சுவரொட்டிகளை நம்பவே முடியவில்லை. “நான் விழுப்புரத்திலிருந்து வரேன். விடியக்காலை சென்னைக்குள்ள நுழைஞ்சதில இருந்து தூங்காம பாத்துட்டே இருந்தேன். இவ்வளவு சுவரொட்டி, கொடி, பேனரு அம்பேத்கர் முகம் போட்டு… எங்க ஊரில ஒரு ஓரமா ஒரு ஃபோட்டோவ வெச்சு நாங்க வருஷம் தோறும் கொண்டாடுவோம். ஆனா இங்க திருவிழா மாதிரியில்ல நடக்குது.” என கண்கலங்கி கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.
அம்பேத்கர் முன்னிறுத்திய அறிவு பாரம்பரியத்திற்கு இதுபோன்ற திருவிழாக்கள் தேவையா? இது பொருத்தமானதுதானா என சிலர் பேசுகிறார்கள். ஆனால் தலித் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், களப் போராளிகள் என ஒவ்வொரு வருடமும் முக்கியமான ஆளுமைகளை இந்த திருவிழா கௌரவிக்கிறது. இது அறிவுசார் செயல்பாடுதான். பல நூறு புத்தகங்கள் இந்த திருவிழாவில் விற்கப்படுகின்றன. பல புதிய நட்புகள், உறவுகள் ஏற்படுகின்றன. அம்பேத்கரின் எழுத்துக்கள் தரும் அறிவு உவகை ஒன்றென்றால் இதுபோன்ற கூடல்கள் அவர் வாழ்நாளெல்லாம் எடுத்துரைத்த சக வாழ்விற்கும் தோழமைக்கும் வித்திடுகின்றன.
”சகோதரத்துவத்திற்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்? ஒன்றைக் கூட என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஒரு லட்சிய சமூகம் என்பது இயங்கும் நிலையில் இருக்கவேண்டும், அதன் ஒரு பகுதியில் நிகழும் மாற்றத்தை பிற பகுதிகளுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பல வழிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு லட்சிய சமூகத்தில் பல நலன்கள் இருக்கவேண்டும் அவை பிரக்ஞைபூர்வமாக தெரிவிக்கப்படவும் பகிர்ந்துகொள்ளப்படவும் வேண்டும். சகவாழ்விற்கு பல்வேறு சுதந்திரமான தொடர்புகொள்ளும் புள்ளிகள் இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் சமூக சவ்வூடுபரவுதல் நிகழவேண்டும். இதுதான் சகோதரத்துவம், இது சனநாயகத்தின் மற்றொரு பெயரே ஆகும். சனநாயகம் என்பது வெறும் ஒரு ஆட்சி வடிவமல்ல. முதன்மையாக, அது பகிர்ந்துகொள்ளக்கூடிய இணைந்த அனுபவங்களிலான கூட்டு வாழ்க்கையின் ஒரு முறைமை ஆகும். அது அடிப்படையில் ஒருவர் தனது சக மனிதர்கள் மீது காட்டும் மதிப்பும் மரியாதையும் சார்ந்த அணுகுமுறையாகும்.” என அம்பேத்கர் சாதியை அழித்தொழித்தல் எனும் தனது முக்கியமான அறைகூவலில் சொல்லியிருக்கும் சகவாழ்வை வாழ தலித்துகள் நீட்டும் அன்புக் கரமாகவே இத்திருவிழா இருக்கிறது. நீட்டப்பட்ட அக்கரத்தை பற்ற சாதி இந்து சமூகம் தன்னை தகுதிப் படுத்திக் கொள்ளும் பணி மிக தேவையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
ப்ரேமா ரேவதி, எழுத்தாளர்; சமூக செயற்பாட்டாளர்.
முகப்பு ஓவியம்: Rajkumar sthapathy
அருமை
LikeLike