“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை” என்கிறார் முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார்.
ஐ.பி.சி தமிழ் பிரிவுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தவராணி,
“தவராணி ஆகிய நான் 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளேன். எனக்கு தாயுமில்லை. தந்தையுமில்லை, எனக்குரிய காணித்துண்டு ஒன்று மாத்திரம் உள்ளது. ஆனால் வீடு இல்லை. கொக்கட்டிச்சோலையிலுள்ள எனது நண்பி ஒருவரின் வீட்டில் வசித்து வருகின்றேன்.
எனக்கென்று ஒரு சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை, எனகென்று ஓர் வீடாவது இருக்குமானால் நானும் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டு வாழலாம். எனக்கு இருப்பதற்கும் வீடற்ற நிலையில்தான் அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றேன்.
எந்தவித சுயதொழில் இல்லாமலும், வருமானமும் இல்லாமலுள்ள எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் என்னிடம் இருந்து வருகின்றது. ‘இலங்கை இராணுவதிலிருந்து வெளியேறியவர்களுக்கு, அரசாங்கம் பல உதவிகளைச் செய்வதாக அறிகின்றேன். ஆனால் எம்மைப் போன்வர்களைக் கவனிக்க யாரும் இல்லை’, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீடு வந்துள்ள முன்னாள் போராளிகளையும், அரசாங்கமும், ஏனையவர்களும், கவனிக்க வேண்டும்.
கடந்த வருடம் வீடு வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலில் எனது பெயரும் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால் நான் ஒரு தனி நபர் என்ற காரணத்தினால் எனது பெயரை அதிலிருந்து நீக்கிவிட்டார்கள். இதுதொடர்பில் பிரதேச செயலகத்தில் 3 தடவைகள் கடிதம் கொடுத்துள்ளேன். அதற்கு இதுவரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை.
எனது வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத் தழும்புகளுடன் வாழ்ந்து வரும் எனக்கு ஆஸ்துமா வருத்தமும் உள்ளது.” என்கிறார்.